வியாழன், 19 ஜூலை, 2007
ஆடாதோடை
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை
2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae
3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.
4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.
5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.
இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.
ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.
ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.
ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.
ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும். (அடுத்தமூலிகை தொடரும்)
_______________________________________________________________________
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
7 கருத்துகள்:
ஆடாதொடை என்பது "ஆடு தொடா இலை" என்கிற பெயரிலிருந்து மருவி வந்ததாக கூறுவர்.
நல்ல அருமையான பயனுள்ள பதிவு.
மூலிகைகளின் பயன்பாடுகள் பல அறியப்படாமலே மறைந்துவரும் காலத்தில், வரும் சந்ததியினருக்கு
பெரும் பயன் தரும்.
இன்னும் தருக!
வாரம் ஒரு மூலிகை அளித்துக்கொண்டே இருப்பேன் யாவரும் அறியட்டும். மிக்க நன்றி.
மிக அருமையான பயனுள்ள பதிவு.
தவறாமல் படிக்க இருக்கிறேன்.
முடிந்தால் கீழ்க்கண்ட சில தகவல்களையும் சேகரித்து எழுதவும். அல்லது பின்னூட்டமிடுபவர்கள் எழுதினாலும் நல்லது.
1. இக்காலத்தில் மூலிகைகளை வீட்டில் வளர்ப்பது எளிதானதல்ல. அதனால் உலர்ந்த மூலிகைப் பொருள்களைப் பயன்படுத்தலாமா? அவற்றை எங்கு வாங்கலாம்?
2. பெரும்பாலான மூலிகைகளின் உயிர்வேதி வினைகள் (biochemical functions) அறிவியல் பூர்வமாகவும் ஆராயப் பட்டு வருகின்றன. இலக்னோவில் உள்ள மைய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (CDRI), சென்னைப் பல்கலைக்கழகம் போன்ற இந்திய ஆராய்ச்சி நிறுவனங்களில் (மேலை நாடுகளிலும் கூட) இது போன்ற ஆராய்ச்சி நடந்து வருவதாக அறிகிறேன். அவை பற்றிய குறிப்புகளைச் சுருக்கமாகக் கொடுத்தால் வாசிப்பவர்களிடம் வேதிப் பொருள் மருந்துகளைக் காட்டிலும் மூலிகைகளின் மதிப்பு இன்னும் உயரும்.
சீன நண்பர்கள் பெரும்பாலோர் இன்னும் தங்களது நாட்டு மருத்துவ முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிப் பட்ட முயற்சிகளின் மூலம் மூலிகைகளின் பயன்பாடும், பாட்டி வைத்தியமும் புத்துணர்ச்சி பெறும்.
நன்றி - சொ.சங்கரபாண்டி
உலர்ந்த மூலிகைப் பொருள்களை நாட்டு மருந்துக்கடைகளிலும், காதி கடைகளிலும் வாங்கலாம். பொடிகள் மூன்று மாத்திற்கு மேல் சக்தி குறைந்துவிடும். நம் நாட்டில் ஊருக்கு ஊர் மொழிக்கு மொழி ஒரே மருந்துக்கு வேறு வேறு பெயர்கள் வருவதால் சீன நாட்டை போன்று இல்லை.
நீங்கள் சொல்வதும் உண்மைதான், இருந்தாலும் ஆடு தின்னாப்பாழை என்று ஒன்று உள்ளது. நன்றி.
மு.தமிழ்தென்றல் அவரகளிக்கு 'ஆடு தின்னாப்பாழை' என்பதில் 'ஆடு தின்னாப்பாளை' என்று வாசிக்கவும். நன்றி.
கருத்துரையிடுக