திங்கள், 31 மார்ச், 2014

சித்தரத்தை.


சித்தரத்தைச்செடி

மூலிகையன் பெயர் –: சித்தரரத்தை.

தாவரப்பெயர் – ALPINIA GALANGA.

தாவரக்குடும்பம் –: GINGER FAMILY. ZINGIBERDCEAE.

வேறு பெயர்கள் :- சிற்றரத்தைச் செடி.

பயன் தரும் பாகங்கள் –: வேர் கிழங்கு.

வளரியல்பு –: சித்தரத்தை எல்லாவகை நிலங்களிலும் வளரக் கூடியது. செம்மண்கலந்த சரளையில் நன்கு வளரும். இது ஒரு செடி வகையைச் சார்ந்த்து. இதன் தாயகம் தெற்கு ஆசியா. பின் மலேயா, லாஸ், தாய்லேண்டு போன்ற நாடுகளுக்குப் பரவிற்று. இது இஞ்சி வகையெச் சேர்ந்தது. அதனால் குறுஞ்செடி. சுமார் 5 அடி உயரம் வளரக் குடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்க வாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழக்கு தான் மருத்துவ குணம் உடையது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். குருமிளகு வாசனையுடையது. இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் அழகாக இருக்கும். இதன் பக்கக் கிழங்குகள் மூலிம் இன விருத்தி செய்யப்படுகிறது.

சித்தரத்தையின் மருத்துவ குணங்கள் – சித்தரத்தைக்கிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்துப் பக்குவப் படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் அலுசரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணைக் குணப்படுத்தும்.

சித்தரத்தை எடுத்து சுத்தப் படுத்தி விட்டு பிறகு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் காச்சி அரை லிட்டராக ஆகும் வரை கவனித்து வடிகட்டி கசாயமாக காலை மாலை 50 மில்லி வீதம் குடித்து வந்தால் எப்பேர் பட்ட இருமலும் ஒரு வாரத்தில் குணமடைந்து விடும்.

அம்மி அல்லது சொரசொரப்பான சிமண்ட் தரையில் இஞ்சிச் சாறுவிட்டு சித்தரத்தையை அதன் மேல் நன்றாக அழுத்தித் தேய்க்கவும். அதிலிருந்து வரும் விழுது போன்ற பகுதியை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். கீழ் முதுகு தண்டு வடப் பகுதியில் வலிக்குமிடத்தில் சித்தரத்தை விழுதினை மேலும் இஞ்சிச் சாறுவிட்டுத் தளர்த்தி அடுப்பில் வெதுவெதுப்பாக சூடாக்கி பற்றிட்டால் வலி குணமாகும்.

சித்தரத்தை, ஓமம், கடுக்காய் தோல், மிளகு, திப்பிலி, தாளிச்சபத்திரி, சுக்கரா இவற்றை சம அளவு எடுத்து பொடித்து சூரணம் செய்து தேனில் கலந்து தினமும் காலை மாலை 50 மில்லி வீதம் சாப்பிட சளி குணமடையும்.

மூட்டுவாத வீக்கம் குறைய தேவதாரு -100 கிராம், சாரணைவேர் – 100 கிராம், சீந்தில் கொடி – 100 கிராம், சித்தரத்தை – 100 கிராம், நெருஞ்சில் -100 கிராம், மேலும் ஆமணக்கு – 100 கிராம் இவைகளை பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 50 கிராம் பொடியை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு மெல்லிய தீயாக எரித்து 150 மில்லியாக சுண்ட வைத்து மருந்துகளை கசக்கிப் பிழிந்து வடிகட்டி வேளைக்கு 50 மில்லியாக ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால் மூட்டு வாத வீக்கம் குணமாகும்.

சித்தரத்தையை எடுத்து இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டியில் போட்டு அதில் தேவையான அளவு தேன் விட்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமடையும்.

தினகரனுக்கு நன்றி.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் மூலிகைகளில் சிற்றரத்தையும் ஒன்று. இதனை அலோபதி மருந்துகளாக மாற்றி நமது நாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றனர். சிற்றரத்தை கோழையை அகற்றுவதில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. வெப்பம் இதன் இயல்பு நிலையாகும். நாள்பட்ட வறட்டு இருமலுக்கு இது கை கண்ட மருந்தாகும். இருமலுக்கு சிற்றரத்தையை மிகவும் எளிய முறையில் பயன்படுத்தலாம்.

சிறிய துண்டு சிற்றரத்தை வாயிலிட்டு மெதுவாக சுவைத்தோமானால் ஒருவித காரம் தந்து விறுவிறுப்பும் தோன்றும். அந்த உமிழ்நீரை மெதுவாக தொண்டைக்குள் இறக்கிக் கொண்டு இருந்தோமானால் வறட்சியுடன் கூடிய இருமல் உடனே நின்று விடும். மேலும் வாந்தி, குமட்டல் ஆகியவற்றையும் இது விலக்கும். சீதளத் தொடர்புடைய நோய்கள் எதுவானாலும் சிற்றரத்தையை பயன்படுத்தினால் குணமாகும்.

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்த நோய்கள், கணை இழப்பு, கப நோய்கள், போன்றவற்றிற்கு சிற்றரத்தையை ஆமணக்கெண்ணெயில் நனைத்துச் சுட்டுக் கரியாக்கி சிறிதளவு தேனில் உரைத்துக் கொடுத்தால் உடனடி குணம் தெரியும். ஐந்தாறு வயதுக் குழந்தைகளுக்குத் தோன்றும் சீதளக்காய்ச்சல், சாதாரணக் காய்ச்சல், வாத பித்த நோய் மற்றும் நுரையீரல் தொடர்பான பிணிகளுக்கு நூறு கிராம் சிற்றரத்தை பொடியாக்கி கொள்ள வேண்டும். நூறு கிராம் கற்கண்டை பொடியாக்கி தனியாகப் பொடியாக்கி அதனுடன் சிற்றரத்தை சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை ஒரு சிட்டிகை அளவு வாயிலிட்டு சிறிதளவு பசும்பாலுடன் குடிக்க வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் பிணிகள் அகலும். பெரியவர்களுக்கு தோன்றக்கூடிய வாயுக்கோளாறுகள், இருமல், தலைவலி, சீதளக் காய்ச்சல், வாந்தி, பித்தம் மற்றும் சுவாசக்கோளாறுகள் நிமோனியாபோன்ற பிணிகளுக்கு புளியங்கொட்டை அளவுக்கு சிற்றரத்தை ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு சிதைத்து 200மில்லி நீரில்  போட்டு கொதிக்க வைத்து நீர் கொதித்த பிறகு இறக்கி சில மணிநேரங்களுக்கு அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அந்த நீரை வடிகட்டி எடுத்து அதனுடன் ஐம்பது கிராம் கற்கண்டை பொடித்துப் போட்டு வேளைக்கு ஓர் அவுன்ஸ் வீதம் மூன்று வேளை குடித்து வர பெரியவர்களுக்கு பிணிகள் அகன்று குணம் தெரியும். சிற்றரத்தை, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றை வகைக்கு பத்து கிராம் சேகரித்து கொள்ள வேண்டும். அம்மியை சுத்தமாகக் கழுவி அதில் சேகரித்த பொருட்களுடன் சிறிது நீர் விட்டு நைய அரைத்து கொள்ள வேண்டும்.

அரைத்த விழுதை 100 மிலி நீரில் கரைத்து கொதிக்க விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த மருந்தை பலவித நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தலாம். இந்த மருந்தை நோயின் தன்மை, நோயாளியின் வயதுகேற்ப தேன் கலந்து கொடுக்க மூக்கடைப்பு, மூச்சு திணறல், தலைவலி, சீதளம், தும்மல், வறட்டு இருமல், குத்திருமல், மார்பு நோய்கள் எல்லா வகையான காய்ச்சல், கபகட்டு, கோழை ஆகியவற்றை மிக துரிதமாகக் குணமாக்கும்
சித்தரத்தை பூவுடன்.
சித்தரத்தைக் கிழங்கு.


-----------------------------------------------------------------------------------(மூலிகை தொடரும்.)