Sunday, November 8, 2009

அத்தி.




1. மூலிகையின் பெயர் :- அத்தி.

2. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE.

3. தாவரக்குடும்பம் :- MORACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு மரவகை. அத்தி கல்க மூலிகைகளில் ஒன்றாகும். தெய்வ அருள் பாவிக்கும் மரமும் ஆகும். பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது அதனால் இதை காணாமல் பூப் பூக்கும் கண்டு காய்காய்க்கும். என்ற விடுகதையிலும் சொல்வர். அடிமரத்திலும் மற்றும் கிழைகளிலும் கொத்துக் கொத்தாகக் காய்க்கும். துவர்ப்பும் இனிப்பும் உடைய இதன் பழம் குருதி விருத்திக்கு உறுதுணையாகும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள், பட்டையில், செரில்பெஸ்ரஹென்னேட், லுப்பியால், எ-அமிரின் மற்றும் 3 இதர கூட்டுப் பொருடகள், ஸ்டீரால் மற்றும் க்ளானால் பழத்திலும், பீட்டா சிஸ்ஸடீரால் இலைகளிலும் உண்டு. விதை மற்றும் பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- அத்தியின் பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம் பெருக்கியாகவும் செயற்படும். சீதக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு, நீரிழிவு இதனால் உண்டாகும் தாகம், நாவறட்சி, உடல் வெப்பம், முதலியவை நீலங்கும். இரத்தம் சுத்தமாகும், மூட்டு வீக்கம், கீல்வாத நோய்கள், நீரிழிவினால் ஏற்பட்ட புண்கள் போன்றவை நீங்கும்.

அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய், சர்கரை கலந்து காலை, மாலை, கொடுத்து வர நீரிழிவு, குருதி கலந்த வயிற்றுப் போக்கு, பெரும்பாடு, சிறுநீரில் குருதி கலந்து போதல், நரம்புப் பிடிப்பு, பித்தம் ஆகியவை தீரும்.

அத்திப்பாலை மூட்டு வலிகளுக்குப் பற்றிட விரைவில் வலி தீரும்.

முருங்கை விதை, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு, பூமிசர்கரைக் கிழங்கு சமனளவாக இடித்துச் சலித்த பொடியில் 5 கிராம் 5 மி.லி அத்திப் பாலைக் கலந்து காலை மாலையாக 20 நாள்கள் கொடுக்க அளவு கடந்த தாது வளர்ச்சியைக் கொடுக்கும்.

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம்பட்டை, நறுவிளம்பட்டை சமனளவு இடித்த பொடியில் 5 கிராம் 50 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டி நாள்தோறும் மூன்று வேளை கொடுத்து வர பெரும்பாடு, சீதபேதி, இரத்தபேதி ஆகியவை தீரும்.

அத்திப் பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மாம்பட்டை, சிறுசெருப்படை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்து சுண்டைக்காயளவு மாத்திரைகளாக உருட்டிவைத்துக் காலை மாலை வெந்நீரில் கொள்ள ஆசனக்கடுப்பு, மூலவாயு, இரத்தமூலம், வயிற்றுப்போக்கு தீரும்.

அத்தி, அசோகு, மா ஆகியவற்றின் பட்டைகளைச் சேர்த்துக் காய்ச்சிய குடிநீர்- காலை, மாலை குடித்து வர தீராத பெரும்பாடு தீரும்.

அத்திப்பழத்தை அப்படியே நாளும் 10-20 என்ற அளவில் சாப்பிடலாம். காலை மாலை சாப்பிட்டு பால் அருந்தலாம். பதப்படுத்தி -5 நாட்கள் நிழலில் காயவைத்து-தேனில் போட்டு சாப்பிடலாம். உலர்த்திப் பொடி செய்து சூரணமாக 10-15 கிராம் பாலில் போட்டு சாப்பிடலாம். தாது விருத்திக்குச் சிறந்ததாகும். ஆண்மை ஆற்றல் பெறும். ஆண் மலடும் அகலும்.


அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும். இது துவர்ப்பு மிக்கதாக இருக்கும். அடிமரத்தின் கீழ் வேறைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தென்னை, பனை, பாளையில் பால் சுரக்கும். இதன் வேரில் பால் சுரக்கும். தெளிந்த இந்த நீரை நாளும் 300-400 மி.லி. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மேகநோய் போகும். நீரிழிவு குணமாகும், பெண்களுக்கு வெள்ளை ஒழுக்கு நிற்கும். உடலுக்குச் சிறந்த ஊட்ட உணவாகும். எதிர்பாற்றல் பெற்று உடல் வனப்பு பெறும்.

இதன் அடிமரப்பட்டையை இடித்துச் சாறெடுத்து 30-50 மி.லி.குடித்து வர பெரும்பாடு, குருதிப் போக்கு குணமாகும். மேக நோய், புண் குணமாகும், கருப்பை குற்றம் தீரும். பட்டையைக் கசாயமிட்டு அருந்தலாம்.

அத்தி மரத்தின் துளிர் வேரை அரைத்து 10 கிராம் பாலில் சாப்பிட நீர்தாரை எரிச்சல், சூடுபிடித்தல் குணமாகும். உடல் வெப்பம் குறையும். மயக்கம், வாந்தி குணமாகும். உலர்த்தி சூரணமாகவும் சாப்பிடலாம்.

அத்திப்பிஞ்சை பருப்புடன் கூட்டாகச்செய்து 10-20 நாள் சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும். பூண்டு, மிளகு, மஞ்சள் கூட்டில் சேர்க்க வேண்டும். பொரியலாகவும் சாப்பிடலாம்.

---------------------------------------------------(தொடரும்)



Sunday, October 25, 2009

எலுமிச்சை.




1. மூலிகையின் பெயர் :- எலுமிச்சை.
2. தாவரப்பெயர் :- CITRUS MEDICA.

3. தாவரக்குடும்பம் :- RUTACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்

5. வளரியல்பு :- எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும்.

பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது.

பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும்.

பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும்.

படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது.

எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.

---------------------------------------------------(தொடரும்)

Wednesday, October 7, 2009

விராலி.



1. மூலிகையின் பெயர் :- விராலி.

2. தாவரப்பெயர் :- HYMENODICTYON EXCLSUM.

3. தாவரக்குடும்பம் :- RUBIACEAE.

4. பயன்தரும் பாகங்கள்- இலை மற்றும் பட்டை.

5. வளரியல்பு :- விராலி தமிழகமெங்கும் புதர் காடு
களில்வளர்கிறது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரக்
கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று
சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய
இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்
பான பட்டையும் கொண்ட குறுஞ்செடு.
விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- விராலி, காச்சல் தணித்தல், உடல்
உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதை
நரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களை
யுடையது.

20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர்
நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில்
20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர
நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி
ஆகியவை தீரும்.

விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக
வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது
உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்
கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக்
காச்சல், மூறைக்காச்சல், மலேரியா முதலிய
நோய்கள் தீரும்.

விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள்
விரைவில் கரையும்.

(தொடரும்)