திங்கள், 23 ஜூலை, 2007

ஜாதிக்காய்




ஜாதிக்காய்

1. வேறுபெயர்கள்: கிழக்கிந்திய ஜாதிக்காய், மேற்கிந்திய ஜாதிக்காய்

2. தாவரப்பெயர்: Myristica Fragran Ce, Myristicaceae, Myristice Faeglos

3. வளரும் தன்மை: மொலுக்கஸ் தீவில் தோன்றிய ஜாதிக்காய் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் 1000 டன்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இது செம்புறைமண், தோமிலிமண், களிமண் கலந்த தோமிலிமண் பயிர் செய்ய ஏற்றது.

ஜாதிக்காய் ஈரப்பதம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளான தென்மேற்கு மலை ஓரங்களில் கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உயரமுள்ள பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் உகந்தது. மண்ணின் அங்ககப் பொருட்கள் அதிகமாக இருந்தல் மிகவும் அவசியம். இது அடர்த்தியாக வளரக்கூடிய பசுமைமாறா மரம். இவை சுமார் 10-20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடிய பளபளப்பான இலைகளையுடையவை. இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து அவை பூக்கும் போதுதான் காண முடியும்.

விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. விதை முளைக்க 6 வாரம் ஆகும். பின் ஆறு மாத கன்றுகளைத் தொட்டிகளுக்கு மாற்றி, ஒரு வருடம் முடிந்தவுடன் நடவுக்குப் பயன்படுத்தலாம். விதைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் 7-8 வருடங்களில் மகசூலுக்கு வருகின்றன 10-12 வருட மரங்கள் ஒரு மரத்திலிருந்து 2000-3000 காய்கள் கிடைக்கும். ஓட்டுக் கன்றுகள் நட்டபின் 4வது வருடத்திலிருந்து மகசூலுக்கு வருகின்றன.

4. பயன்படும் உறுப்புகள்: ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிகப்பு நிறமான பூ போன்ற பகுதிக்கு ஜாதிப்பத்திரி என்று பெயர். இரண்டையும் தன்னடக்கியுள்ள சதைப்பற்றான பகுதிக்கு ஜாதிக்காய் ஆப்பிள் என்று பெயர். மேல் ஓடு வெடிக்கும், அதுவும் பயன்படும்.

5. பயன்கள்: ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் “மேசின்” என்ற வேதிப்பொருள் மருந்துப் பொருள்களிலும், வாசனைத் திரவியங்கள், முகப்பூச்சு, பற்பசை மற்றும் வாய் கொப்பளிக்கும் தைலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாதி எண்ணெயில் அடங்கியுள்ள “மிரிஸ்டிசின்” என்ற வேதியல் பொருள் பலவிதமான நோய்களைக் குணமாக்கவும், காமப் பெருக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காயிலிருந்து பிரித்து எடுக்கப்படும் “ஒலியோரேசின்” கொழுப்பு, வெண்ணை போன்றவை வாதம் மற்றும் தசை பிடிப்பிற்கு மருந்தாகவும் பாக்டீரியா மற்றும் கரப்பான் கொல்லியாகவும் பயன்படுகிறது.

“சதை தரும் பத்திரிக்குத் தாபச் சுரம்
ஓதுகின்ற பித்தம் உயருங்காண் – தாகுவிருத்தி
யுண்டாங் கிரகணியோ டோதக்கழிச்சலும்
பண் டாங் குறையே பகர்”

அகத்தியர் குணவாகட பாடல் குறிப்பிடுவது போல் ஜாதிப் பத்திரியானது தாப சுரம், பேதி, நீர்க் கழிச்சல், வாதம், தலைவலி, இருமல், வயிற்றுவலி, மாந்தம் போன்றவற்றைக் குணமாக்கும் தன்மையுடையது.

ஜாதிக்காய் பொடியை அரைகிராம் அளவாக பாலில் கலந்து நாளைக்கு 3 வேளையாகச் சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு தீரும், விந்திறுகும், உடல் வெப்பகற்றும், இரைப்பை, ஈரல் ஆகியவற்றை பலப்படுத்தும், மன மகிழ்ச்சியை அளிக்கும். நடுக்கம், பக்கவாதம், ஓக்காளம் ஆகியவற்றைப் போக்கும். சிறு அளவில் உண்டுவரச் செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.

எண்ணையில் இட்டு காய்ச்சி இவ்வெண்ணையை காதுக்கு 2 துளி விட்டால் காது நோய், காது வலி தீரும். 10 கிராம் ஜாதிக்காய் பொடியுடன் புதிய நெல்லிக்காய்ச் சாறு ஒரு மேஜைக் கரண்டியளவு கலந்து சாப்பிட்டால் அதிமறதி, விக்கல், தூக்கமின்மை, ஒழுங்கற்ற இருதயத்துடிப்பு ஆகியவை குணமாகும். ஜாதிக்காய் தூள் சுமார் 10 கிராம் எடுத்து ஆப்பிள் ரசம் (அ) வாழைப்பழத்துடன் கலந்து சாப்பிட அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்கு தீர்ந்து விடும்.

ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.

ஜாதிக்காயை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் போது அவை போதையை உண்டாக்கும்.

ஆகவே ஜாதிக்காய் வெப்பமுண்டாக்கி, அகட்டுவாய்வகற்றி, மூர்ச்சையுண்டாக்கி, மணமூட்டி, உரமாக்கி போன்ற மருத்துவப் பண்புகளைப் பெற்றுள்ளது. இதன் தைலம் பல்வலி, வாதம், வாயு, கழிச்சல் போன்றவற்றையும் கட்டுப்படுத்துகிறது.

குறிப்பு: என்னுடன் நிழற்படத்தில் உள்ளவர் K.P.பழனிசாமி B.Sc.,(Agri) ஆலாந்துறை அருகே உள்ளார். அவரது தோட்டத்தில் உள்ள ஜாதிக்காய் மரம் தான் இது. விவசாய ஆலோசனை அவரிடம் இலவசமாகப் பெறலாம். தொலைபேசி: 0422-2650403

(அடுத்தவாரம் அடுத்த மூலிகை தொடரும்)
__________________________________________________________________________

வியாழன், 19 ஜூலை, 2007

குமரி




















1. வேறு பெயர்கள்- சோற்றுக் கற்றாழை, கன்னி, தாழை.

2. தாவரப்பெயர்- AloebarbadensisLinn,Liliaceae,Aloevera,Aloeferox,Aloeafricana,Aloe, spicata, Aloe perji.

3. வளரும் தன்மை- சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.

4. பயன்படும் உறுப்புக்கள்- இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம்-கரியபோளம்.

5. பயன்கள்- தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது. இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர் பானமாகவும் பயன் படுத்தப் படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.
(அடுத்த மூலிகை தொடரும்)
_________________________________________________________________________

ஆடாதோடை





















1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும். (அடுத்தமூலிகை தொடரும்)

_______________________________________________________________________

புதன், 11 ஜூலை, 2007

பதிமுகம்





பதிமுகம்







1. வேறுபெயர்கள்- சப்பான் மரம்,. பதாங்கம், பதாங்கா, கிழக்கிந்திய செம்மரம், சாயக்கட்டா.

2. தாவரப்பெயர்- சிசால்பினேசப்பான், CAESALPINIA SAPPAN சிசால்பினேசி எனும் தாவரக் குடும்பம்.

3. வளரும் தன்மை- இந்தியா மற்றும் மலேசியாவைத் தாயகமாக் கொண்டது பதிமுகம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு செம்புறை மன் உகந்தது.முட்களுடன் பத்து மீட்டர் உயரம் வளரும் குறு மரம். இதன் குறுக்களவு சுமார் 15.30 செ.மீ. விட்டமாகும். ஒரு வருடத்தில் செடிகள் 3-5 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் இளம் பச்சை நிறமுடைய கூட்டிலைகளாக முதல் வருடத்திலேயே பூக்க ஆரம்பிக்கும்.

கவர்ச்சியான இளமஞ்சள் நிறமுடைய பூக்கள், காய்கள் 15 நாட்களில் தோன்ற ஆரம்பிக்கும். மூன்று மாதங்களில் முற்றுகின்றன. ஒவ்வொரு காயிலும் கரும்பழுப்பு நிறமுடைய 3-4 விதைகள் இருக்கும். இது வறட்சியைத் தாங்கி பல் வேறுபட்ட கால நிலையிலும் வளரும். இது வறண்ட வெப்ப மண்டலம், மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் சிறப்பாக வளரும். இந்த மரம் முதிரவடைவதற்கு 8 வருடமாகும். இது விதை வழி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

4. பயன் படும் உறுப்புக்கள்- இலை,பட்டை, மரத்தண்டு, பூக்கள், மற்றும் வேர்பாகங்கள். (சமூலம்).

5. பயன்கள்- இதன் மரக்கட்டைத் தூளை உபயோகித்து மிகச்சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பானாக கேரள மாநிலத்தில் 95% வீட்டிலும் உணவகத்திலும் தினமும் குடிதண்ணீர் சுத்திகரிக்கப் படுகிறது அரிய மருத்துவ குணமிக்க இம்மரத்திலிருந்ந்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகையான கேன்சர் குணமாகிறது.
சர்கரை நோய் கட்டுப்படுகிரது, இரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படிகிறது. சிறுநீரகக் கோளாறுகள் சீரடைகிறது. மூலநொய் குணமடைகிறது. கொழுப்பு விகிதம் சமச் சீராகிறது. வயிறு சம்மந்தமான நோய்களுக்குச் சரியான பலனளிக் கின்றது. சரும நோய்சரியாறது.
பூ, இலைகள், ஒப்பனை அழகு சாதனப் பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்றுப் பொருளுக்கான அதி அற்புத உற்பத்திப் பொருளாகிறது 1000 மடங்கு எதிர்கால தேவையை நிவர்தி செய்யும்திறன் மிக்கது. இதன் மையத்தண்டில்அடங்கியுள்ள 'பிரேசிலின்' என்ற சிகப்புச் சாயம் காற்றில்பிராணவாயுவுடன் சேரும் போது 'பிரேசிலியன்' வண்ணமாக மாறுகின்றது.
இச்சாயம் நீர், வெளிச்சம் மற்றும் வெப்பத்தால் பாதிப் படையாத, அறிப் புண்டாக்காத முகப் பூச்சுக்கள் தயாரிப்பில் பயன் படுகிறது. முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சாயம் தோல்,பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருட்களை வண்ண மூட்டப் பயன் படுத்தப் படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பதிமுக சாயம் 'கயா' என்னும்மரச் சாயமுடன் கலக்கும் போது கறுப்பு, ஊதா மற்றும் சிகப்பு வண்ணச் சாயங்கள் உருவாக்கப் பட்டு அவை பனைஒலை, மற்றும் தாழை, கைவினைப் பொருட்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் பயன்படும் 'லூக்கோல்' என்னும் மருந்தில் பதிமுகம் பயன் படுத்தப்படுகின்றது. இது கற்பப்பையினுள் கருவி மூலம் சோதனை செய்யும் போது உதிரம் கொட்டுதல் போன்றவற்றை மட்டுப் படுத்திகிறது. இலைகளினின்று பிரித் தெடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம், போன்றவற்றிக்கு எதிராகப்பயன் படுகின்றது. மிக அதிக அளவில் கரியமில வாயுவை கிரகித்துக் கொள்வதுடன் மிக அதிக அளவில் பிராண வாயுவைவெளிப்படுத்தி சுற்றுப்புறச் சூழலை அற்புதமாக பாதுகாக்கிறது. மழை வளத்தைத்தூண்டுகிறது.

(அடுத்த மூலிகை தொடரும்)
_________________________________________________________________________

புதன், 4 ஜூலை, 2007

மூலிகைவளம்

மூலிகைவளம்
பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.
க.பொ.குப்புசாமி கோவை-641 037.