வியாழன், 6 நவம்பர், 2008

கொள்ளுக்காய் வேளை.


கொள்ளுக்காய் வேளை.

1. மூலிகையின் பெயர் -: கொள்ளுக்காய் வேளை.

2. தாவரப்பெயர் -: TEPHRUSIA PURPUREA.

3. தாவரக்குடும்பம் -: FABACEAE.

4. வேறு பெயர்கள் -: சிவ சக்தி மூலிகை. Wild Indigo.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, வேர்,பட்டை, விதை முதலியன.

6. வளரில்பு -: கொள்ளுக்காய் வேளை கொழுஞ்சி வகையைச்சேர்ந்தது. இதன் பிறப்பிடம் ஆஸ்திரேலியா- மடகாஸ்கர், பின் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியத் தீவுகள், ஓமன்,தென் அரேபியா, ஏமன் வட அமரிக்கா தென் அமரிக்காவில பிரேசில் போன்ற நாடுகளில் காணப்பட்டது. தமிழ் நாட்டில் சாலையோரங்களில் தானாக வளரும் சிறு செடியினம். நெல்லிற்கு அடியுரமாகப் பயன்படும். இது சிறகுக் கூட்டிலைகளையும் உச்சியில் கொத்தான செந்நீல மலர்களையும், தட்டையான வெடிக்கக்கூடிய கனிகளையும் உடைய தரிசு நிலங்களிலும் காணப்படும் சிறு செடி.. இது சிறந்த மருத்துவ குணமுடையது. எதிர்பாற்றலும் ஊட்டமும் கொடுக்கக்கூடியது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7.மருத்துவப் பயன்கள் -: இதன் வேர், பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது. கோழையகற்றுதல், மலத்தை இளக்கும், தாது ஊக்கமூட்டும், சீதமகற்றும், பூச்சியை வெளியேற்றும். வாயுவை நீக்கும். நரம்பு மண்டலத்தை ஊட்டமுடைய தாக்கும், விடத்தை முறிக்கும், குடல் புண் குணமாகும், சிறுநீர் பெருக்கும், வீக்கக் கட்டிகளைக் கரைக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், இரத்த மூலவியாதியைப் போக்கும், மேக வயாதி, இருதய நோய், குட்டம் ஆகிய வியாதிகளைக் குணமாக்க வல்லது.

இதன் வேரை இடித்துச் சூரணமாகச் செய்து உக்கா அல்லது சிலிமியில் வைத்து நெருப்பிட்டுப் புகையை உள்ளுக்கு இழுக்க அதிக கபத்தினாலுண்டான இருமல், இரைப்பு, நெஞ்சடைப்பு இவை போம்.

இதன் வேருடன் சம அளவு மஞ்சள் கூட்டி அரிசி கழுவி எடுத்த சலம் அல்லது பசுவின் பால் விட்டு அரைத்துக் கண்ட மாலையினாலுண்டான வீக்கத்திற்குப் போடக் குணமாகும்.

10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மில்லியாக்க் காச்சி 50 மி.லி. அளவாகக் காலை மாலை தினம் இரு வேளை 5 அல்லது 7 நாள் கொடுக்கப் பித்த சம்பந்தமான ரோகங்கள், மண்ணீரல், கல்லீரல், குண்டிக்காய் இவற்றில் உண்டான வீக்கம், வயிற்று வலி, அஜீரணப்பேதி ஆகியவை போம்.

இதன் 2 கிராம் வேரை மோர் விட்டு அரைத்துக் கொடுக்க வீக்கம், பாண்டு, இரத்தக் கெடுதலினாலுண்டாகும் முகப்பரு, கட்டி, இராஜப் பிளவை முதலியன குணமாகும்.

இதன் வேரைக் கியாழமிட்டு உள்ளுக்குக் கொடுக்க குன்மம், போம். இந்த கியாழத்தைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய் ரணம், பல் வலி ஆகியவை தீரும்.

‘ வாதமிக்க தென்பார்க்கும், வாய்வறட்சி என்பார்க்கும்
மீதந்த மூல நோய் என்பார்க்கும் - ஓதமுற்ற
கொள்ளுக்காதார கபந்தோன்றிய தென்பார்க்குமொரு
கொள்ளுக்காய் வேளை தனைக் கூறு ! ‘

--------------------------------பதார்த்த குண சிந்தாமணி.

கொள்ளுக்காய் வேளையினால் வாதாதிக்கமும் நாவறட்சியும், தந்த மூல நோயும், சொள்ளுவடியச் செய்கின்ற கபமும் போம் என்க.

இதன் வேரை 10 கிராம் மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்த எவ்வகை வயிற்று வலியும் குணமாகும். இதனை வேருடன் பிடுங்கி உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு 100 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி வடித்து, குடிநீராகப் பயன்படுத்தலாம். எவ்வகை வயிற்று வலியும் குணமாகும்.

இதன் வேர் 100 கிராம், உப்பு 100 கிராம் சேர்த்து அரைத்து மண் சட்டிக்குள் காற்று புகாது வைத்து மூடி எரு அடுக்கி தீ மூட்டி எரிக்க உப்பு உருகி இருக்கும். இதை ஆற விட்டு உலர்த்திப் பொடி செய்து வைக்கவும். இதில் 2-4 கிராம் அளவு மோரில் குடிக்க வாயு, வயிற்றுப் பருமல், கிருமி, வயிற்றுப்புண், சீதக்கட்டு, வயிற்றவலி ஆகியன குணமாகும். இதன் விதைப் பொடியை காப்பியாகப் பயன் படுத்தலாம்.

இதன் உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்து 100 கிராம், மிளகு 30 கிராம், உப்பு 30 கிராம் சேர்த்து உணவுப் பொடி செய்யவும். 5-10 கிராம் உணவில் சேர்த்து எள் நெய் வுட்டுச் சாப்பிட வயிற்று வலி, வாய்வு, குடல் பூச்சி தொல்லை குணமாகும்.

------------------------------------(மூலிகை தொடரும்.)

கருத்துகள் இல்லை: