வியாழன், 27 நவம்பர், 2008

சர்கரைத்துளசி.


சர்கரைத்துளசி.


1. மூலிகையின் பெயர் -: சர்கரைத்துளசி.

2. தாவரப்பெயர் -: STEVIA REBAUDIANA.

3 . தாவரக்குடும்பம் -: COMPOSITAE.


4. பயன்தரும் பாகங்கள் -: இலை மற்றும் தண்டு.

5. வேறு பெயர்கள் -: “HONEY-LEAF”, “SWEET LEAF”, “SWEET-HERB”. போன்றவை.

6. வளரியல்பு -: சர்கரைத்துளசியின் பிறப்பிடம் தென் அமரிக்கா. அங்கு இயற்கை விஞ்ஞானியான ANTONIO BERRONI என்பவர் 1887ல் இந்த சர்கரைத்துளசியைக் கண்டுபிடித்தார். பாராகுவே மற்றும் பிரேசில் அதிகமாக வளர்க்கப்பட்டது. பின் வட அமரிக்கா, தென் கலிப்போர்னியா மற்றும் மெக்சிகோவில் அதிகம் வளர்க்கப்பட்டது. பின் ஜப்பானில் கோடைகாலத்தில் 32F-35F சீதோஸ்ணத்தில் வளர்க்கப்பட்டது. பின் எல்லா நாட்டிற்கும் பறவிற்று. இதை விதை மூலமும் கட்டிங் மூலமும் இனப் பெருக்கம் செய்யப்பட்டது. முதிர்ந்த விதைகள் கருப்பாக மரக்கலரில் இருக்கும். இதன் முழைப்புத் திறன் மிகவும் குறைவு. சர்க்கரைத்தளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது. மண் பாதுகாப்பில் இதற்கு இயற்கை உரம், மக்கிய தொழு உரம் தான் இட வேண்டும் இது மணல் கலந்த களிமண்ணில் நன்கு வளரக்கூடியது. இராசாயன உரம் இடக்கூடாது. இதன் ஆணிவேர் நன்கு ஆளமாகச் செல்லும். இலைகள் அதிகறிக்க நட்ட 3-4 வாரங்கழித்து கொழுந்துகளைக் கிள்ளி விட்டால் பக்கக் கிழைகள் அதிகறித்து இலைகள் அதிகமாக விடும். பூக்களை வெள்ளை நிறத்தில் இருக்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் விதைகள் உண்டாகும். இலைகள் இனிப்பாக இருக்கும். கலோரி கிடையாது. உலர்ந்த இலைகளைப் பொடியாகச் செய்தால் இனிப்பு அதிகமாக இருக்கும். வியாபார நோக்குடன் பயிரிட நிலத்தை நன்கு உழுது தொழு உரம் இட்டு 3-4 அடி அகல மேட்டுப் பாத்திகள் அமைக்க வேண்டும். உயரம் 4 அங்குலம் முதல் 6 அங்குல உயர்த்த வேண்டும் பின் 10 அங்குலம் முதல் 12 அங்குலம் வரை இடைவெளி விட்டு நாற்றுக் களை நட வேண்டும், பின் தண்ணீர் விடவேண்டும். ஈரப்பதம் தொடர்ந்து இருக்க 3 அங்குலம் முதல் 6 அங்குல மூடாக்கு அமைக்க வேண்டும். பின் 2 வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். செடிகள் நன்கு வளர்ந்து பூக்கும் போது இலைகளைப் பறிப்பது சாலச் சிறந்தது. இலைகளை வெய்யிலில் 8 மணி நேரம் உலர வைத்து எடுத்துப் பதுகாக்க வேண்டும். முதிர்ந்த இலைகளைப் போடியாக அரைத்து எடுத்து கண்ணாடி குடுவைகளில் பாதுகாப்பார்கள்.

7. மருத்துவப் பயன்கள் -: சர்கரைத்துளசியின் இலைகள், தண்டுகள் சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன் படுத்திகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிரார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள் பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிராகள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்,’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன் படுத்துகிறார்கள். இது ‘ஏண்டி பாக்டீரீயாவாகப்’ பயன் படுகிறது. இது சர்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.

----------------------------------(மூலிகை தொடரும்.)

வியாழன், 20 நவம்பர், 2008

ஆவாரை.


ஆவாரை.

1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.

2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.

3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும். ஆவாரை விதைகளை நேரடி விதைப் பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப் படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.

6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

“ சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று - மெல்லவச
மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”

ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.


----------------------------------(மூலிகை தொடரும்.)

வியாழன், 13 நவம்பர், 2008

கருவேல்.



கருவேல்.

1. மூலிகையின் பெயர் -: கருவேல்.

2. தாவரப்பெயர் -: ACACIA ARABICA.

3. தாவரக்குடும்பம் -: FABACEAE.

4. வேறு பெயர்கள் -: BABUL.


5. பயன் தரும் பாகங்கள் -: கொழுந்து, இலை, வேர்ப்பட்டை, மரப்பட்டை, மற்றும் பிசின்.

6. வளரியல்பு -: கருவேல் ஒரு கெட்டியான மரம். சுமார் 25 அடி முதல் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. தமிழகம் எங்கும் தரிசு நிலங்களிலும், மலைகளிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கக் கூடியது. இதன் இலைகள் இரட்டைச் சிறகமைப்புக் கூட்டிலைகளை யுடையது. இலைகள் கால் அங்குல நீளத்தில் 10 - 12 இலைகளையுடையது, காய் சுமார் 6 அங்குல நீளமுடையது அதில் 8 -12 கொட்டைகள் இருக்கும். இந்த மரத்தில் கிளைகளில் வெண்மையான முட்கள் இருக்கும்.. மரபட்டைகள் வெடித்தும் கருப்பாகவும் மரக்கலராகவும் இருக்கும். மலர்கள் மஞ்சள் நிறமானவை அரை அங்குல விட்டமுடையவை. இவை ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் பூக்கும். காய்கள் வெண்ணிறமான பட்டை வடிவானவை. விதைகள் வட்ட வடிவமானவை. வெள்ளாடுகள் காய்களை விரும்பிச் சாப்பிடும்.

7.மருத்துவப்பயன்கள் -: கருவேலம் பட்டை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். பிசின் சளியகற்றி தாதுக்களின் எரிச்சசல் தணிக்கும், காச்சல், வாந்தி, இருதயநோய், நமச்சல், மூலம், வயிற்றுக்கடுப்பு, நுரையீரல் நோய், கிட்னி சம்பந்தமான நோய்கள் குணமடையும். காமம் பெருக்கும், கொழுந்து தாதுக்களின் எரிச்சல் தணித்து அவற்றைத துவளச்செய்யும், சளியகற்றும்.

இலையை அரைத்துப் புண்கள் மீது வைத்துக் கட்ட விரைந்து ஆறும்.

துளிர் இலைகளை 5 கிராம் அளவுக்கு மசிய அரைத்து மோரில் கலக்கிக் காலை மாலையாகக் குடித்து வரச் சீதக் கழிச்சல் வெப்புக் கழிச்சில் பாஷண மருந்து வீறு ஆகியவை தீரும்.

இலையை அரைத்து இரவு தோறும் ஆசனவாயில் வைத்துக் கட்டி வர மூலம் குணமாகும்.

இளம் வேர் 20 கிராம் நன்கு நசுக்கி 1 லிட்டர் நீரில் விட்டு 100 மி.லி. யாகக் காய்ச்சி வடிகட்டி 25 மி.லி. யாக காலை மாலை சாப்பிட்டடு வர இரத்தக் கழிச்சல், வெப்புக் கழிச்சல், பசியின்மை தீரும்.

பட்டைக் குடிநீரைக் கொண்டு வாய்க் கொப்பளிக்க வாய்ப்புண், பல்லீறு அழுகல், பல்லாட்டம் ஆகியவை குணமாகும்.

கருவேலம்பட்டை, வதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல்லீறுகளில் உள்ள புண், பல் கூச்சல், பல்வலி, பல்லாட்டம் ஆகியவை தீரும்.




யாராவது நஞ்சு உட்கொண்டு விட்டால்  அதை முறித்து உயிருக்கு மோசம் ஏற்படாமல் காக்க க்கூடிய சக்தி வாய்ந்தது கருவேலமரத்துக் கொழுந்து இலை. ஒரு கைப்பிடியளவு கருவேலங் கொழுந்தைக் கொண்டு வந்து சுத்தம் பார்த்து, அம்மியில் வைத்து தயிர் விட்டு மை போல் அரைத்து ஒரு டம்ளர் பசும் பாலில் கலந்து உடனே கொடுத்து விட்டால் நஞ்சு முறியும். நஞ்சு உண்டவர்கள் உயிர் பிழைப்பார்கள்.

கருவேலம் பிசினை நெய்யில் வறுத்துப் பொடித்து 2 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரத் தாது பலப்படும். இருமல் தீரும். வயிற்றுப்போக்கு நிற்கும்.


------------------------------------(மூலிகை தொடரும்.)


வியாழன், 6 நவம்பர், 2008

கொள்ளுக்காய் வேளை.


கொள்ளுக்காய் வேளை.

1. மூலிகையின் பெயர் -: கொள்ளுக்காய் வேளை.

2. தாவரப்பெயர் -: TEPHRUSIA PURPUREA.

3. தாவரக்குடும்பம் -: FABACEAE.

4. வேறு பெயர்கள் -: சிவ சக்தி மூலிகை. Wild Indigo.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, வேர்,பட்டை, விதை முதலியன.

6. வளரில்பு -: கொள்ளுக்காய் வேளை கொழுஞ்சி வகையைச்சேர்ந்தது. இதன் பிறப்பிடம் ஆஸ்திரேலியா- மடகாஸ்கர், பின் ஆப்பிரிக்கா, ஆசியா, இந்தியத் தீவுகள், ஓமன்,தென் அரேபியா, ஏமன் வட அமரிக்கா தென் அமரிக்காவில பிரேசில் போன்ற நாடுகளில் காணப்பட்டது. தமிழ் நாட்டில் சாலையோரங்களில் தானாக வளரும் சிறு செடியினம். நெல்லிற்கு அடியுரமாகப் பயன்படும். இது சிறகுக் கூட்டிலைகளையும் உச்சியில் கொத்தான செந்நீல மலர்களையும், தட்டையான வெடிக்கக்கூடிய கனிகளையும் உடைய தரிசு நிலங்களிலும் காணப்படும் சிறு செடி.. இது சிறந்த மருத்துவ குணமுடையது. எதிர்பாற்றலும் ஊட்டமும் கொடுக்கக்கூடியது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7.மருத்துவப் பயன்கள் -: இதன் வேர், பட்டை, இலை, விதை ஆகியவை மருத்துவப் பயனுடையது. கோழையகற்றுதல், மலத்தை இளக்கும், தாது ஊக்கமூட்டும், சீதமகற்றும், பூச்சியை வெளியேற்றும். வாயுவை நீக்கும். நரம்பு மண்டலத்தை ஊட்டமுடைய தாக்கும், விடத்தை முறிக்கும், குடல் புண் குணமாகும், சிறுநீர் பெருக்கும், வீக்கக் கட்டிகளைக் கரைக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், இரத்த மூலவியாதியைப் போக்கும், மேக வயாதி, இருதய நோய், குட்டம் ஆகிய வியாதிகளைக் குணமாக்க வல்லது.

இதன் வேரை இடித்துச் சூரணமாகச் செய்து உக்கா அல்லது சிலிமியில் வைத்து நெருப்பிட்டுப் புகையை உள்ளுக்கு இழுக்க அதிக கபத்தினாலுண்டான இருமல், இரைப்பு, நெஞ்சடைப்பு இவை போம்.

இதன் வேருடன் சம அளவு மஞ்சள் கூட்டி அரிசி கழுவி எடுத்த சலம் அல்லது பசுவின் பால் விட்டு அரைத்துக் கண்ட மாலையினாலுண்டான வீக்கத்திற்குப் போடக் குணமாகும்.

10 கிராம் வேருடன் 5 கிராம் மிளகு சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 100 மில்லியாக்க் காச்சி 50 மி.லி. அளவாகக் காலை மாலை தினம் இரு வேளை 5 அல்லது 7 நாள் கொடுக்கப் பித்த சம்பந்தமான ரோகங்கள், மண்ணீரல், கல்லீரல், குண்டிக்காய் இவற்றில் உண்டான வீக்கம், வயிற்று வலி, அஜீரணப்பேதி ஆகியவை போம்.

இதன் 2 கிராம் வேரை மோர் விட்டு அரைத்துக் கொடுக்க வீக்கம், பாண்டு, இரத்தக் கெடுதலினாலுண்டாகும் முகப்பரு, கட்டி, இராஜப் பிளவை முதலியன குணமாகும்.

இதன் வேரைக் கியாழமிட்டு உள்ளுக்குக் கொடுக்க குன்மம், போம். இந்த கியாழத்தைக் கொண்டு வாய் கொப்பளித்து வர வாய் ரணம், பல் வலி ஆகியவை தீரும்.

‘ வாதமிக்க தென்பார்க்கும், வாய்வறட்சி என்பார்க்கும்
மீதந்த மூல நோய் என்பார்க்கும் - ஓதமுற்ற
கொள்ளுக்காதார கபந்தோன்றிய தென்பார்க்குமொரு
கொள்ளுக்காய் வேளை தனைக் கூறு ! ‘

--------------------------------பதார்த்த குண சிந்தாமணி.

கொள்ளுக்காய் வேளையினால் வாதாதிக்கமும் நாவறட்சியும், தந்த மூல நோயும், சொள்ளுவடியச் செய்கின்ற கபமும் போம் என்க.

இதன் வேரை 10 கிராம் மென்று சாற்றை விழுங்கி வெந்நீர் அருந்த எவ்வகை வயிற்று வலியும் குணமாகும். இதனை வேருடன் பிடுங்கி உலர்த்தி இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் அளவு 100 மி.லி. நீரில் போட்டுக் காய்ச்சி வடித்து, குடிநீராகப் பயன்படுத்தலாம். எவ்வகை வயிற்று வலியும் குணமாகும்.

இதன் வேர் 100 கிராம், உப்பு 100 கிராம் சேர்த்து அரைத்து மண் சட்டிக்குள் காற்று புகாது வைத்து மூடி எரு அடுக்கி தீ மூட்டி எரிக்க உப்பு உருகி இருக்கும். இதை ஆற விட்டு உலர்த்திப் பொடி செய்து வைக்கவும். இதில் 2-4 கிராம் அளவு மோரில் குடிக்க வாயு, வயிற்றுப் பருமல், கிருமி, வயிற்றுப்புண், சீதக்கட்டு, வயிற்றவலி ஆகியன குணமாகும். இதன் விதைப் பொடியை காப்பியாகப் பயன் படுத்தலாம்.

இதன் உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்து 100 கிராம், மிளகு 30 கிராம், உப்பு 30 கிராம் சேர்த்து உணவுப் பொடி செய்யவும். 5-10 கிராம் உணவில் சேர்த்து எள் நெய் வுட்டுச் சாப்பிட வயிற்று வலி, வாய்வு, குடல் பூச்சி தொல்லை குணமாகும்.

------------------------------------(மூலிகை தொடரும்.)