வியாழன், 2 அக்டோபர், 2008

கண்டங்கத்திரி.


கண்டங்கத்திரி.

1. மூலிகையின் பெயர் -: கண்டங்கத்திரி.

2. தாவரப் பெயர் -: SOLANUM SURATTENSE.

3. தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் முதலியன.

5. வளரியல்பு -: கண்டங்கத்திரி அனைத்து வகை நிலங்களிலும் நன்கு வளரும். முள்ளுள்ள மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் நீல நிற மலர்களையும் சிறு கத்திரிக்காய் வடிவிலான உருண்டையான காய்களையும். மஞ்சள் நிற பழங்களையும் உடைய நேராக உயர்ந்து வளரும் சிறு செடியினம். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் தரிசு நிலங்களில் வளர்கிறது.

நிலத்தினை நன்கு உழுது விதைப்புக்குத் தயாராக வைக்க வேண்டும். வேண்டிய தொழு உரம் போடவேண்டும். நேரடி விதைப்புக்கு 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். நாற்று விட்டு ஒரு மாதத்தில் 4 அடிக்கு 4 அடி இடைவெளியில் நட்டு உயிர் தண்ணீர் பாச்சவேண்டும். பின் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் செய்தால் போதும். 60 நாட்கள் கழித்துக் களை எடுக்க வேண்டும். ஒரு வருடகாலம் முடந்து ஒரே அறுவடையாகச் செய்யவேண்டும். செடி 3750 கிலோ காய் 500 கிலோ கிடைக்கும். பூச்சி நோய் காய் புழு மட்டும் தாக்கலாம். அதற்கு உரிய மருந்து அடிக்க வேண்டும். பறித்த பழங்களை 7 நாட்கள் காய வைக்க வேண்டும். பின் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இதன் சாறு இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய வல்லது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் ஆராயச்சி செய்து கொண்டுள்ளார்கள். இது கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயற்படும். ஒரு ஏக்கருக்கு ஒரு வருடத்தில் ரூ.12,000-00 செலவு செய்தால் 48,000-00 வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

6. மருத்துவப் பயன்கள் -: கண்டங்கத்திரி இரத்த அழுத்தத்தினை சீர் செய்ய உதவுகிறது. ஆஸ்துமாவிற்கு இச்செடியினை பொடித்து உண்ணுவது பழக்கத்தில் உள்ளது. காரணமில்லாத வரட்டு இருமலுக்கும் இது நல்ல தொருமருந்து. கீல் வாதம், மார்சளி, வியர்வை நாற்றம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.

வேர் 30 கிராம், சுக்கு 5 கிராம், சீரகம் 2 சிட்டிகை, கொத்தமல்லி 1 பிடி ஆகியவற்றை 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காச்சி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் குடிக்க சீதளக்காச்சல், சளிக்காய்ச்சல், நுரையீரல் பற்றிய எந்த சுரமும் தீரும்.

சமூலம் 1 பிடி, ஆடாதொடை 1 பிடி, விஷ்ணுகாந்தி பற்படாகம் இரண்டும் 1 பிடி, சீரகம், சுக்கு வகைக்கு 10 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரைலிட்டராக்கி 4 முதல் 6 முறை 100 மி.லி. வீதம் சாப்பிட புளு சுரம், நிமோனியா சுரம், மண்டை நீர் ஏற்றக் காயச்சல் முதலியன தீரும்.(கண்டங்கத்திரி குடி நீர்)கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர் வகைக்கு 40 கிராம் அரிசிதிப்பிலி 5 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக்கி 100 மி.லி.வீதம் தினம் 4 வேளை குடிக்க இரைப்பிருமல் ( ஆஸ்துமா ) என்புருக்கி ( க்ஷயம் ) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் தீரும்.

பழத்தை உலர்த்தி நெருபிலிட்டு வாயில் புகைப் படிக்க பல் வலி, பல் அரணை தீரும்.

‘காச சுவாசங் கதித்த ஷய மந்த மனல்
வீசுசுரஞ் சந்நி வினைதோஷ - மாசுறுங்கா
வித்தரையு ணிற்கா வெரிகாரஞ் சோகண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்.’

வெப்பமுங் கார்ப்பு முள்ள கண்டங்கத்திரியினால் காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், தீச்சுரம், சந்நி பாதம் ஏழுவகைத் தோஷங்கள், வாத ரோகம் ஆகியவை போம்.

‘வேரிலைபூ காயபழமவ் வித்துடன் பட்டையுமிவ்
வூரிலிருக்க வுடற்கனப்பும் - நீராய்
வரும்பீந சங்கயஞ்சு வாசமுந்தங் காவே
யருங்கண்டால் கத்திரியுளார்’

கண்டங்கத்திரியின் வேர், இலை, பூ, காய், பழம், விதை, பட்டை இவற்றால் நீரேற்றம், சலப்பீநசம், ஈளை, சுவாசம் இவை போம்.

கண்டங்கத்தரிக்காய்-

‘ ஐய மறுந் தீபனமா மாம மலக்கட்டும்
பைய வெளியாகிவிடும் பார்மீதிற்- செய்ய மலர்த்
தொத்திருக்கும் வார் குழலே தூமணலா ருங்கண்டங்
கத்தரிக்கா யைப் புசிக் குங்கால் ’

வெண் மணலிலுண்டாகின்ற கண்டங்கத்திரிக்காயால் சிலேத்தும நோய் தீரும். சீதம் கலந்த மலமும் பசியும் உண்டாம்.

கண்டங்கத்திரிப் பழம்-

‘ காசஞ் சுவாசங் கயஞ்சீதம் பல்லரணை
வீசு சொறிதினவை விட்டோட்டும் - பேசுடலை
யுத்தரிக்குள் தீபனத்தை யுண்டாக்கி டுங் கண்டங்
கத்தரிப்ப ழக்குணத்தைக் காண். ’

கண்டங்கத்திரிப் பழம் இருமல், இரைப்பு, சயம், கபம், பல்லரணை, புடை நமைச்சல் இவற்றை நீக்கும். பலத்தையும் பசியையும் உண்டாக்கும்.
-----------------------------------------(மூலிகை தொடரும்)

3 கருத்துகள்:

top stock pick சொன்னது…

well its nice to know that you have great hits here.

Jeeves சொன்னது…

nanRi aiya.. marainthu varum sedivagai enRu ninaiththuk kondirundhen

பெயரில்லா சொன்னது…

கண்டங்கத்திரி மருத்துவ குறிப்பு
அருமையான தொகுப்பு
மிக்க நன்றி