திருநீற்றுப் பச்சை.
1. மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை.
1. மூலிகையின் பெயர் :- திருநீற்றுப் பச்சை.
2. தாவரப் பெயர் :- OCIMUM BASILICUM.
3. தாவரக் குடும்பம் :- LABIATAE.
4. வேறுபெயர்கள் :- உத்திரச்சடை, மற்றும் சப்ஜா.
5. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர் மற்றும் விதை முதலியன.
6. வளரியல்பு :- இது சாதாரணமாக இந்தியாவில் எல்லா இடங்களிலும் வளர்கிறது. மேலும் பிரான்ஸ், இந்தோனேசியா, மொராக்கோ, அமரிக்கா, மற்றும் இத்தாலியிலும் பயிரிடப்படுகிறது. தோட்டங்களில் வளர்க்கப்படிகின்றது. இது சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது.
இதன் இலைகள் நடுவில் அகன்றும், நுனிகுறுகியும், நீண்டும் இருக்கும். பூக்கள் வெண்மையாக கதிர் போன்று இருக்கும். உலர்ந்த பின்னர் கருப்பு நிறமாக மாறும். இது நறு மணம் உடைய செடியாகும். இது துளசி இனத்தைச் சார்ந்தது. இது 40-50 செ.மீ. உயரம் வளரக்கூடியது.இது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் அஸ்ட்ரகால், பூஜினால், தைமால்டேனின் காம்பர் போன்ற வேதிப்பொருட்கள் அடங்கியுள்ளன.
7. மருத்துவப் பயன்கள் -: இதன் வேர் வெப்பத்தை உண்டாக்கி வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி வியர்வையை அகற்றும் செய்கை உடையது. இதன் விதை வழுவழப்புத் தன்மையோடு உடலிலுள்ள வெப்பத்தைக் குறைத்துச் சிறுநீரைப் பெருக்கும் செய்கை உடையது. சித்த மருத்துவத்தில் லேகியங்களிலும் தைலங்களிலும் மணத்திற்காக இதனைப் பயன்படுத்துகிறார்கள். பச்சை இலைகள் இருமல், சளி, உபாதைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சமையலுக்குப் பயன் படுத்தப்படுகிறது, பசியைத்தூண்டுவதறுகும் உறக்கம் உண்டாக்குவதற்கும் உதவகிறது. வேர் காயங்களைப் போக்கப் பயன்படுகிறது. இதன் எண்ணெய் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது.
காது வலி, காதில் சீழ் வடிதல் முதலியநோய்களுக்கு இதன் இலையைப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு முதல் மூன்று துளி காதில் விட்டு வர காது வலி குறையும்.
முகப்பருக்கள் உடையவர்கள் திருநீற்றுப்பச்சிலைச் சாற்றுடன் வசம்புப் பொடியையும் குழைத்து பூசி வர முகப்பரு விரைவில் மறையும்.
படை முதலிய சரும நோய்களுக்கு இதன் இலைச் சாற்றை நோய்கண்ட இடத்தில் பூசிவர அவை எளிதில் மறையும்.
நாட்பட்ட வாந்தியால் துன்பப்படுபவர்கள் திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் வெந்நீர் கலந்து அருந்தி வர வாந்தி குறையும்.
தேள் கடித்த பின் உண்டாகும் வலிக்கு திருநீற்றுப்பச்சிலைச் சாற்றை கடிவாயின் மீது பூச வேண்டும்.
திருநீற்றுப் பச்சிலைச் சாற்றுடன் சம அளவு பால் கலந்து காலை, மாலை என இரு வேளை 100 மி.லி.வீதம் அருந்தி வந்தால் வெட்டை நோய்கள், மேக சம்பந்தமான நோய்கள், பீனிசம், நாட்பட்ட கழிச்சல், உள் மூலம், சிறுநீரக சம்பந்தமான நோய்கள் முதலியவை குணமாகும்.
இதன் விதைகள் சர்பத்தில் போட்டு அருந்தும் பழக்கம் உள்ளது. இவை சிறந்த மணமூட்டியாகச் செயல்படுகிறது. இது ஆண்மையைப் பெருக்கும்.
திருநீற்றுப் பச்சிலையானது பிரசவத்தின் போது ஏற்படும் வலியைக் குறைக்கும்.
ஒரு சிலருக்கு கண் இரப்பையில் கட்டி ஏற்பட்டு வேதனை கொடுக்கும். இந்த சமயம், திருநீற்றுப் பச்சிலையைக் கொண்டு வந்து, கையினால் கசக்கினால் சாறு வரும். அந்தச் சாற்றை கட்டியின் மேல் கனமாகப் பூசிவிட வேண்டும். சாறு காய்ந்த பின் பழையபடி அதன் மேலேயே சாற்றைப் பூசி வர வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து பூசி வந்தால் கண் கட்டி பெரியதாகக் கிளம்பாமல் அமுக்கி விடும். சில சமயம் பெரிதாகி தானே உடைந்து சீழும் இரத்தமும் வெளியே வரும். சீழும் இரத்தமும் முழுவதும் வெளியே வந்த பின் சுத்தம் செய்து விட்டு, இந்தச் சாற்றையே போட்டு வந்தால் புண் ஆறிவிடும்.
----------------------------(மூலிகை தொடரும்.)