1. மூலிகையின் பெயர் :- கஞ்சாங்கோரை.
2. தாவரப்பெயர் :- OCIMUM CANUM.
3. தாவரக் குடும்பம் :- LAMIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- இலை, விதை மற்றும் பூ.
5. வேறு பெயர்கள் :- நாய் துளசி, சங்கரத்துளசி மற்றும் பேய் துளசி என்பன.
6. வளரியல்பு :- கஞ்சாங்கோரை ஒரு சிறு செடியினம். எல்லா வகை பண்ணிலும் வளர்வது. எதிரடுக்கில் அமைந்த நல்ல மணமுடைய இலைகளையும், கதிர்வடிவப் பூங்கொத்தினை யுடையது. மழை காலங்களில் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளர்கிறது. இது விதை மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.
7. மருத்துவப் பயன்கள் :- இலை கோழையகற்றி இருமல் தணித்தல், உடலில் வியர்வையைப் பெருக்குதல், வெப்பம் மிகுத்து ஆற்றலை அதிகப்படுத்துதல், முறை நோய் நீக்கல், விதை தாதுவெப்பு அகற்றல் ஆகிய செய்கைகளை யுடையது.
இலைச்சாற்றில் 30 துளி, சிறிது பாலுடன் குழைந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இருமல், சளி ஆகியவை குணமாகும்.
இலையை அரைத்துச் சுண்டைக் காயளவு தயிரில் கலந்து காலை மாலை கொடுக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் தீரும்.
பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கொடுக்கச் சளி வெளியாகி மார்ச்சளி, காசம், இருமல், ஆரம்ப என்புருக்கி ஆகியவை தீரும்.
இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிந்து அரிப்பு தினவு ஆகியவை தீரும்.
இலையைஅரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.
இலைப்பூவுடன் வசம்பு சேர்த்து அரைத்துத் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க பத்துப் பதினையிந்து நாள்களில் பத்துக்கால் பேன் ஒழியும்.
இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் 100 மி.லி. கொதி நீரில் ஊரவைத்து வடிகட்டிப் பால் சர்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும்.
------------------------------------(தொடரும்)