திங்கள், 4 ஆகஸ்ட், 2008

நித்தியகல்யாணி.


நித்தியகல்யாணி.

1) மூலிகையின் பெயர் -: நித்தியகல்யாணி.

2) தாவரப் பெயர் -: CATHARANTHES ROSEUS ,
VINCO ROSEA.
3) தாவரக் குடும்பம் -: APOCYNACEAE.

4) வேறு பெயர்கள் -: சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, பெரிவீன்க்கில் மதுக்கரை, மறுக்கலங்காய முதலியன.

5) வகை -: கனகலி.

6) ரகங்கள் -: நிர்மல், தவாள் என்ற வெள்ளை மலர் ரகங்கள்.


7) பயன் தரும் பாகங்கள் -: இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள்.


8) வளரியல்பு -: நித்தியகல்யணியின் பிறப்பிடம் மடகாஸ்கர். இது மேலும் இந்தோசீனா, இந்தோனேசியா, இஸ்ரேல், பிலுப்பையின்ஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் பரவியுள்ளன. இது மணல் பாங்கான இடத்திலும், தரிசு நிலங்களிலும், தானாக நன்றாக வளரும். களர், மற்றும் சதுப்பில்லாத எல்லா நிலத்திலும் வளரும். இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்காளம் குஜராத் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழ் நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், இராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தரிசு நிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. ஐந்து இதழ் (1 அங்குலம் முதல் 1.5 அங்குலம் வரை) களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இது 2 அல்லது 3 அடி கூட வளரும்.இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் திங்காது. இது எல்லாப் பருவங்களிலும் பூக்கும் தன்மையுடையது. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.பல காலமாக இதை வணிக ரீதியாகப் பயிரிடுகிறார்கள். மணலுடன் விதைகளைக் கலந்து மானாவாரியாகவும், இறவை சாகுபடியாகவும் விதைக்கிறார்கள். முறைப்படி செடி வளர்ந்து 6 வது,9 வது மற்றும் 12 வது மாதங்களில் இலைகளைப் பறித்து பதப்படுத்தி ஏற்றுமதி செய்கிறார்கள். பின் 12 வது மாதத்தில் தரைமட்டத்தில் செடியை அறுத்து விட்டு வேர்கள் உழுது எடுத்துப் பதப்படுத்தி வியாபாரத்திற்கு அனுப்புகிறார்கள். அமெரிக்கா அங்கேரிக்கு இலைகளையும், இதன் வேர்களை மேற்கு ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு எற்றுமதியாகிறது.

9) மருத்துவப் பயன்கள் -: நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதன்ப பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தாம். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். அரிய உள்ளடக்கங்கள் மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான். ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இப்பயிர் மருத்துவத் துறையின் வணிகத்தில் முக்கியத்துவம் அடைகிறது.

இதன் ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், மிகு பசி, பசியின்மை தீரும்.

வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறைகொடுக்கச் சிறுநீர்ச் சர்கரை குறையும். நோய் கட்டுப்படும்.

-------------------------------------------(மூலிகை தொடரும்)

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

III:

Nice Job Author.

It would be great if u put the photo of each herbal plants.

பெயரில்லா சொன்னது…

மூலிகை படம் இணைத்துள்ளேன்,
தாமதத்திற்கு வருந்துகிறேன்.
நன்றி.
அன்புள்ள,
குப்புசாமி.

இரா. வசந்த குமார். சொன்னது…

ஐயா...

தங்களை வணங்குகிறேன். தங்களது அனுபவ அறிவு வரும் சந்ததிகளுக்கும் பயன்பட வேண்டும் என்று பதிகிறீர்களே..., உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்..!

தமிழ் வலையுலகத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை...!

நீர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க...!

நன்றி.

இரா.வசந்தகுமார்.

kuppusamy சொன்னது…

தங்ககளின் உண்மையான வாழ்த்துக்கு மிக்க நன்றி. அடுத்த மூலிகை மரம் புங்கமரம். எதிர்பாருங்கள். பணி தொடரும். நன்றி.
அன்புள்ள
குப்புசாமி.க.பொ.

SIVAKUMAR சொன்னது…

வணக்கம் ஐயா,
நித்தியகல்யாணி பூக்கள் பற்றிய மருத்துவ தகவல்களுக்கு நன்றி. இதை பற்றி எங்கள் நண்பர் ஒருவர் சொல்லி இருக்கிறார். ஆனால் திருச்சியில் நாட்டுமருந்து கடைகளில் இதன் பொடி கிடைக்கவில்லை. என் தாயாருக்கு சக்கரைநோய் உள்ளது. இந்த மலரின் பொடி திருச்சியில் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்குமா. கிடைக்குமென்றால் என்ன பெயர் சொல்லி வாங்குவது? தங்கள் பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.