புதன், 18 ஜூலை, 2012

செண்பகம்.


செண்பகம்.

மூலிகையின் பெயர் :– செண்பகம்.


செண்பகமரம்.


தாவரப்பெயர் :– MICHELIA CHAMPACA.

தாவரக்குடும்பம் :– MAGNOLIACEAE..

பயன்தரும் பாகங்கள் :– இலை, பூ, பட்டை மற்றும் வேர் முதலியன.

வளரியல்பு :– செண்பகமரம் மணல் பாங்கான இடத்தில் நன்கு வளரும். மற்ற வளமான இடங்களில் அழகுக்காகவும், பூங்காவிலும் தோட்டங்களிலும் வளர்ப்பார்கள். இந்த மரம் மேல் நோக்கி வளரும். கீழ்பாகம் அகலமாகவும் மேல் பாகம் சிறுத்தும் எப்போதும் பசுமையாக இருக்கும். நட்ட மூன்று ஆண்டுகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூக்கள் மஞ்சள் நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் இருவகையில் இருக்கும். பூக்கள் நறுமணம் உடையது. பூக்களிலிருந்து நறுமண எண்ணெய் தயார் செய்வார்கள். இந்த மரம் நூறு அடிக்கு மேல் வளரக்கூடியது. மரம் மென்மையாக இருக்கும். பிளைவுட் செய்யவும், பெட்டிகள் செய்யவும் பயன் படும். இதில் கைவினைப் பொருள்களும் செய்வார்கள். இந்த மரம் வரட்சியைத் தாங்காது. இதன் இலைகள் எப்போதும் பச்சையாக அடுக்கு வரிசையில் நீண்டு இருக்கும். செண்பகம் பிறப்பிடம் இந்தியா. பின் மற்ற நாடுகளான கலிப்போர்னியா, இந்தோனேசியா, மலேசியா, மாயின்மர், நேபாள், இலங்கை, தாய்லாண்ட், சைனா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்குப் பரவிற்று.  இதன் இலைகளை பட்டுப்புழுக்கள் சாப்பிடும், இதன் காய்கள் கொத்தாக இருக்கும். பழுத்தால் சிவப்பாக இருக்கும் பறவைகள் இதனை விரும்பிச் சாப்பிடும். இதனை தலவிருட்சமாக கோயில்களில் வளர்த்து வருகிறார்கள். திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம், திருசிவாலம் போன்ற கோயில்களில் காணலாம். இது விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் விதைகளை சேகரித்து இரண்டு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். வளர்ந்த செடிகளை வேண்டிய இடங்களில் முறைப்படி நடவேண்டும்.

மருத்துவப்பயன்கள் :– நோய்நீக்கி உடல் தேற்றுதல், முறைநோய் தீர்த்தல், உள்ளுர்ப்பு அலர்ச்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல், பூ சிறுநீர் பெருக்கி, வெள்ளை ஆண்மை குறைவு தீரும். பூவின் குடிநீரால் குன்மம் தீரும். பட்டை குடிநீர் முறை சுரத்தைப் போக்கும்.

செண்பக மரத்தின் இலையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 3 தேக்கரண்டியளவும், இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொடுத்து வந்தால் எந்த வகையான வயிற்று வலியானாலும் அது குணமாகும்.

தேவையான அளவு செண்பக இலையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை  அடுப்பில் வைத்து, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யை அதில் விட்டு காய்ந்தவுடன் இலையைப் போட்டு, நன்றாக அதாவது இலை மிருதுவாகும்படி வதக்கி உச்சியில் கனமாக வைத்துக் கட்டி வந்தால் மண்டைக் குத்து குணமாகும். காலை மாலை புதிய இலையை வதக்கிக் கட்ட வேண்டும். மூன்று நாளில் குணம் தெரியும்.

ஒன்பது செண்பகப் பூக்களை எடுத்து, உள்ளே சுத்தம் பார்த்து, பொடியாக நறுக்கி ஒரு சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால், சொட்டு மூத்திரம், நீர்சுருக்கு இவைகள் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.

ஒரு வாயகன்ற சீசாவில் 150 கிராம் தேங்காயெண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வீக்கம் குணமாகும்.

அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.

ஆண்மைக் குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

இரவு படுக்குமுன் ஒரு புதுசட்டியில் 30 செண்பகப்பூவை ஆய்ந்து போட்டு,  இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும் மாலையில் ஒரு டம்ளருமாக இறுத்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள இரணம் கூட ஆறிவிடும்.

முறைக் காச்சலைக் குணப்படுத்த 10 கிராம் செண்பகமரத்துப் பட்டையை நைத்து ஒரு புது சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி, காலையில் அரை டம்ளரும், மாலையில் அரை டம்ளருமாக மூன்று நாட்கள் கொடுக்க முறைக்காச்சல் குணமாகும்.

செண்பக இலை மொக்கு.
செண்பக பூ.


                                            
----------------------------------------------------
-------------------------------------------------------------------------------(தொடரும்)