இலைக்கள்ளி. |
மூலிகையின் பெயர் :- இலைக்கள்ளி.
தாவரப்பெயர் :- EUPHORBIBA LIGULARIA.
தாவரக்குடும்பம் :- EUPHORBIACEAE.
பயன்தரும் பாகங்கள் :- இலை, பால், வேர் மற்றும் பழம் முதலியன.
வளரியல்பு :- இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம். இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.
மருத்துவப் பயன்கள் :- இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி, மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.
இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.
இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.
இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.
நன்றி SUMAYHA :- சொன்னவை--
1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.
2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.
3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.
4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.
5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.
6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.
7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.
8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.
9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.
பின் குறிப்பு- இந்த மருத்துவத்தைப் பயன் படுத்தும் முன்பு சித்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுப் பயன்படுத்தவும். தன்னிச்சையாக செயல் பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.-குப்புசாமி.க.பொ.