செவ்வாய், 25 மே, 2010

கட்டுக்கொடி.



1. மூலிகையின் பெயர் :- கட்டுக்கொடி

2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS.

3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன.

5. வளரியல்பு :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

6. மருத்துவப் பயன்கள் :- இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

----------------------------------(தொடரும்)

செவ்வாய், 4 மே, 2010

முருங்கை.



1. மூலிகையின் பெயர் :- முருங்கை.


2. தாவரப்பெயர் :- MORINGA OLEIFERA.

3. தாவரக்குடும்பம் :- MORINGACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை, ஈர்க்கு, பூ, பிசின், பட்டை ஆகியன.

5. வளரியல்பு :- முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இதை பிரம்மவிரிட்சம் என்பர். இதன் மரக்கட்டை மென்மையாக இருக்கும். இதன் பயன் கருதி வேலி ஓரங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தமிழகமெங்கும் பயிரிடப்படுகிறது. இதன் மென்மையான ஈர்க்குகளில் கூட்டிலைகளையும் வெண்ணிற மலர்களையும் தக்கையான நீண்ட காய்களையும் சிறகுள்ள விதைகளையும் கொண்ட மரம். இந்த முருங்கையை ரோமானியர்களும், கிரேக்கர்களும், எகிப்தியர்களும் பயன் படுத்தியுள்ளார்கள். இதன் ஆரம்பம் இமையமலை அடிவாரம் பின் பாக்கீஸ்தான், பங்களாதேஸ் மற்றும் ஆப்கானீஸ்தான் ஆகும். பிலிப்பையின்ஸ்சிலும் ஆப்பிரிக்காவிலும் அதிகமாக இருந்துள்ளது. இது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இலங்கையிலும் காணப்படுகிறது. தாய்லண்ட், தாய்வானிலும் பயிராகிறது. இது 30 அடி உயரம் வரை வளரக்கூடியது. ஆனால் இதைவருடா வருடம் 3 அடி விட்டு கிழைகளை வெட்டி விடுவார்கள். இலை, பூ, காய் ஆகியவை சமையலுக்குப் பயன்படுவதால் தமிழகமெங்கும் காணப்படும். தற்போது 3 அடி நீளமான காய்கள் விடும் மரம் கூட உற்பத்தி செய்துள்ளார்கள். மலைகளிலும் காடுகளிலும் வளரும் முருங்கை கசப்பாக இருப்பதால் சமையலுக்கு உதவாது. தண்ணீர் அதிகம் தேவையில்லை, வெப்பத்தைத் தாங்கக் கூடியது. அதிக குளிரில் வளராது. தென் மாவட்டங்களில் ஒரு வருடத்தில் பலன் தரக்கூடிய மரவகைகளை வணிக ரீதியாகப்பயிர் செய்து லாபம் அடைகின்றனர். முற்றிய கொம்புகளை 3 அடி உயரத்தில் வெட்டி நட்டு அதன் நுனியில் பச்சைச் சாணம் வைத்து உயிர் பிழைக்கச் செய்வர். விதை மூலமும் இனவிருத்தி செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- இலைச்சாறு அதிக அளவில் வாந்தியுண்டாக்கும். சில வேலைகளில் மல மிளக்கும். இரும்புச்சத்து அதிகமுள்ள இலை. குருதியை தூய்மையாக்கும். ஈர்க்கு சிறுநீர் பெருக்கும். பூ காமம் பெருக்கும். பிஞ்சு தாது எரிச்சல் போக்கும் காமம் பெருக்கும். காய் கோழையகற்றிக் காமம் பெருக்கும். பிசின் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். மூக்கில் நீரைப்பெருக்கித் தும்மல் உண்டாக்கும். காமம் பெருக்கும். பட்டை கோழை, காச்சல் நஞ்சு ஆகியவற்றைப் போக்கும். வியர்வையைப் பெருக்கும்.குடல் வாயு அகற்றும், பட்ட இடத்தில் அரிப்பு உண்டாக்கிக் கொப்பளிக்கச் செய்து புண்ணுண்டாக்கும்.

முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும்.

பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.

இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான்.

இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டு
வலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்.

முருங்கை இலை, தூதுவளை, பசலை அரைக்கீரை ஒன்று சேர்த்து வெங்காயம் போட்டு வதக்கி சாப்பிட்டு வர தாது பலப்படும். ஆண்மைக் குறைவு தீரும். புளியை உணவில் நீக்க வேண்டும். எலுமிச்சம்பழச்சாறு சாப்பிடுதல் கூடாது. விந்தை நீர்த்துப்போக வைக்கும்.

இதன் இலைச் சாற்றைப் பிழிந்து பத்து மி.லி. நாளும் இரு வேளை பாலில் கொடுக்க ஒரு வயது, இருவயது குழந்தை உடல் ஊட்டம் பெறும். சிறந்த ஊட்ட மருந்து இதுவே.

உடல் தளர்ச்சி அடைந்தாலோ, உடல் வலி இருந்தாலோ முருங்கை இலை ஈர்க்குகளை மட்டும் போட்டு மிளகு ரசம் வைத்துச்சாப்பிட்டால் உடல்வலி, தளர்ச்சி குணமாகும்.

பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நாகசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காச்சிக் குடித்தால் ஆண்மை மிகும். போகம் நீடிக்கும். தாதுபுஷ்டி லேகியம் தேவையில்லை.

முருங்கைப்பிஞ்சை சமைத்துச் சாப்பிட்டால் தாது நட்டத்தால் ஏற்படும் சுரம் தீரும். எலும்புருக்கி, சயம், சளி ஆகிய நோய்வாய்ப்பட்டவர்க்களுக்கு இது
சிறந்த ஊட்டம் தரும்.

முருங்கைப்பட்டைத் தூள் 10 கிராம், சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றின் பொடி 2 கிராம் போட்டு வெந்நீரில் காயாச்சி மூன்று வேளையும் 30 மி.லி. அளவு கொடுக்க குடற்புண், காய்ச்சலாகிய டைபாய்டு குணமாகும். இருமல், கபம் தீரும்.

முருங்கைப் பட்டையும் வெண் கடுகையும் அரைத்துப் பற்றுப் போட வாதவலி தீரும். வீக்கம் குறையும்.

இதன் பிசினையுலர்த்திப் பொடி செய்து அரை தேக்கரண்டி பாலில் காலை, மாலை குடிக்க தாது பலம் உண்டாகும். மிகுதியாகச் சிறுநீர் கழித்தல் தீரும். உடல் வனப்பு உண்டாகும்.

--------------------------------------------------------------(தொடரும்)