சனி, 21 பிப்ரவரி, 2009

எலுமிச்சைப்புல்.



1. மூலிகையின் பெயர் -: எலுமிச்சைப் புல்.

2. தாவரப் பெயர் -: CYMBOPOGAN FLEXOSUS.

3. தாவரக்குடும்பம் -: POACEAE / GRAMINAE.

4. வேறு பெயர்கள் -: வாசனைப்புல், மாந்தப்புல், காமாட்ச்சிப்புல், கொச்சி வாசனை எண்ணெய் என்பன.

5. ரகங்கள் -: கிழக்கிந்திய வகை, மேற்கிந்திய வகை, ஜம்மு வகை, பிரகதி, காவேரி, கிருஷ்ணா மற்றும் ஓடக்கள்ளி19 என்பன.

6. பயன் தரும் பாகங்கள் -: புல் மற்றும் தோகைகள்.

7. வளரியல்பு -: எலுமிச்சப்புல் இந்தியா, பர்மா, ஸ்ரீலங்கா மற்றும் தாய்லேண்டைத் தாயகமாகக் கொண்டது. இது எல்லா வகை மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் மற்றும் உவர் மண்களிலும் பயிரடலாம். இதிலிருந்து வரும் ‘சிட்ரால்’ வாசனை எண்ணெய எலுமிச்சம் பழத்தின் வாசனை கொண்டதால் இப்பயர் பெற்றது. காடுகளிலும் மலைகளிலும் தானே வளர்ந்திருக்கும் . இப்புல் 1.2 - 3.0 மீ. உயரம் வரை வளரும். இது ஒரு நீண்ட காலப் பயிர். கேரளாவில் இது அதிக அளவு பயிரிடப் படுகிறது. வெளி நாடுகளுக்கு 90 -100 மெட்ரிக் டன் வரை ஏற்றுமதியாகிறது. இதனால் இந்தியாவுக்கு சுமார் 5 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியாகக் கிடைக்கிறது. இதை வணிக ரீதியாகப் பயிரிட நிலத்தை நன்றாக உழுது சமன் செய்து பாத்திகள் அமைக்க வேண்டும். அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 5-7 டன் தொழு உரம் இடவேண்டும். 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 32 கிலோ பொட்டாஸ் இட்டு நீர் பாச்சவேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைகள் மற்றும் தூர்கள் மூலம் ஒரு ஏக்கருக்கு 18000-18500 தூர்கள் வரிசைக்கு வரிசை 2 அடியும், செடிக்குச் செடி1.5 அடியும் இடைவெளிவிட்டு நடவேண்டும். நடவு செய்த ஒரு மாதத்தில் 30 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தை இட வேண்டும். மற்றும் 3 மாதங்களில் 40 கிலோ தழைச்சத்து தரவல்ல உரத்தினை இட வேண்டும். துத்தநாக குறையுள்ள மண் எனில் 25-50 கிலோ துத்தநாக சல்பேட்டினை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். பின் 10 நாட்களிக்கு ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதும். களைகள் வந்தால் 10-15 நாட்களுக்கொரு முறை எடுத்தால் போதும்.

நட்ட 4 - 5 மாதங்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகி விடும் 3-4 மாதங்கள் என்ற இடைவெளியில் 4 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம். இந்தப் புல் குளிர் காலங்களில் பூக்க வல்லது. அறுவடை செய்த பின் புல்லை நன்றாக நிழலில் காயவைத்துக் கட்டுகளாக்க் கட்டி, காற்றுப் புகாத அறைகளில் சேமிக்க வேண்டும். ஹெக்டருக்கு 35-45 டன் புல் மகசூல் கிடைக்கும். புல்லிலிருந்து 0.2 - 0.3 சதவிகிதம் எண்ணெய என்ற அளவில் ஹெக்டருக்கு 100 - 120 கிலோ எண்ணெய் கிடைக்கும். ஹெக்டருக்கு ரூ.30,000 - 50,000 வரை நிகர வருமானம் கிடைக்கும்.

8. மருத்துவப்பயன்கள் -: இந்தப்புல்லிலிருந்தும், தண்டுகளிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயில் டெர்பினைன் 0.50 சதம், பீட்டா டெர்பினியால் 0.40 சதம், அல்பா டெர்பினியால் 2.25 சதம், ட்ரைபினையல் அசிடேட் 0.90 சதம், போர்னியால் 1.90 சதம், ஜெரானியால் மற்றும் நெரால் 1.5 சதம், சிட்ரால் பி 27.7 சதம், சிடரால்-ஏ 46.6 சதம், பார்னிசோல் 12.8 சதம், பார்னிசால் 3.00 சதம் என்று பல வேதிப் பொருட்கள் உள்ளன. எண்ணயெ மூலம் சோப்புகள், வாசனைத் திரவியங்கள் தயாரிப்பு, சிட்ரால் வைட்டமின் ‘ஏ’ போன்ற வேதிப் ரொருட்கள் எடுக்கப் பயன்படுகின்றன. கிருமி நாசினியாக பயன்படுகிறது. பூச்சிக்கொல்லியாகவும் பயன் படுகிறது. எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய புல் மாட்டுத் தீவனமாகவும், காகிதங்கள், அட்டைப் பட்டிகள் தயாரிக்கவும், எரிபொருளாகவும் பயன் படுகிறது. இந்தப் புல்லிருந்து சூப் செய்கிறார்கள், இறைச்சி, மீன் வகைகளில் உபயோகிக்கிரார்கள். இதில் போடப்படும் டீயும் நன்றாக இருக்கும்.
குறிப்பு-
எலுமிச்சைப் புல் பற்று நோய் செல்களை அழிக்கிறது. அறிந்தவர் http://www.israel21c.org/bin/en.jsp?enZone=Health&enDisplay=view&enPage=BlankPage&enDispWhat=object&enDispWho=Articles%5El1272


----------------------------------------( மூலிகை தொடரும்)

சனி, 14 பிப்ரவரி, 2009

பிரமந்தண்டு.


1. மூலிகையின் பெயர் -: பிரமந்தண்டு.

2. தாவரப் பெயர் -: ARGEMONE MEXICANA.

3. தாவரக்குடும்பம் -: PAPAVERACEAE.

4. வேறு பெயர் -: குறுக்குச்செடி, மற்றும் குயோட்டிப் பூண்டு.

5. பயன் தரும் பாகங்கள் -: இலை, பால், வேர், விதை மற்றும் பூக்கள்.

6. வளரியல்பு -: இது தமிழகமெங்கும் தரிசு நிலங்களில், ஆற்றங்கரைகளில், சாலையோரங்களில் தானே வளரும் சிறு செடி. சுமார் 2-3 அடி உயரம் வரை வளரக்கூடியது. காம்பில்லாமல் பல மடல்களான உடைந்த கூறிய முட்களுள்ளிலைகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும், காய்களுக்குள் கடுகு போன்ற விதைகளையும் உடைய சிறு செடி. நேராக வளரக்கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிறப் பூச்சு (சாம்பல்) காணப்படும் செடி.

7. மருத்துவப்பயன்கள் -: இதன் இலைச்சாற்றை பத்து மில்லியாக காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வரச் சொறி, சிரங்கு, மேகரணங்கள், குட்டம் ஆகியவை தீரும்.

இதன் இலையை அரைத்துத் தேள் கடி வாயில் வைத்துக் கட்டினால் தேள் கடி விடம் இறங்கும்.

சமூலச்சாறு 30 மி.லி. கொடுத்துக் கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விடம் தீரும் பேதியாகும். உப்பில்லாப் பத்தியம் இருத்தல் வேண்டும்.

இலையை அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு நீர் வடியும். கரப்பான் படை குணமடையும். உள்ளங்கால்,கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும்.

பொன்னாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை, கரிசாலை போல கண் நோய்க்கு நல்ல குணமளிக்கும். பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்குத் தேய்த்துக் குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், எரிச்சல், நீர் வடிதல் குணமாகும். இதன் இலையை ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண்வலி, சதை வளருதல், சிவத்தல், அரிப்பு, கூச்சம் ஆகியன குணமாகும்.

இதன் விதையை நெருப்பிலிட்டுப் புகைத்து அப் புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப்பல் புழு விழும். வலி தீரும், செடியை உலர்த்திய பின் எடுத்துச் சாம்பலாக்கி, துணியில் சலித்து வைக்கவும். இப்பொடியில் பல் துலக்க பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் குணமடையும். சிறந்த மருந்து பற்பொடி இதுவாகும்.

இதன் சாம்பல் பொடி 1-2 கிராம் தேனில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இரைப்பு, இருமல், காசம் ஆகிய நோய்கள் குணமாகும், இரு வேளை 48 நாள் சாப்பிட வேண்டும்.

50 மி.லி.பன்னீரில் ஒரு கிராம் இதன் சாம்பலைக் கரைத்து வடித்த தெளி நீரைச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தலாம். கண் எரிச்சல், வலி, சிவப்பு ஆகியவற்றிக்குச் சொட்டு மருந்தாகப் பயன் படுத்த குணமாகும்.

இச் சாம்பல் பொடியை 2 கிராம் அளவு பசு வெண்ணெயுடன் மத்தித்து காலை, மாலை 48-96 நாள் சாப்பிட குட்ட நோய் குணமாகும். புளி, புகை, போகம், புலால் நீக்க வேண்டும்.

இலை சூரணம், விதைச் சூரணம் கலந்து 3 அரிசி எடை காலை, பாலை தேனில் கொள்ள க்ஷய இருமல், நுரையீரல், சளி இருமல் தீரும்.

இதன் வேரை அரைத்து 5 கிராம் அளவு 50 மி.லி. வெந்நீரில் கரைத்து, காலை வெறும் வயிற்றில் கொடுக்க மலக் குடல்புழு, கீரிப் பூச்சிகள் வெளியேறும்.

இதன் விதையைப் பொடித்து இலையில் சுருட்டிப் பீடி புகைப்பது போல் புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற்சொத்தை, பற்புழு ஆகியவை தீரும்.

50 கிராம் வேரை 200 மி.லி. நீருல் நன்றாகக் கொதிக்க வைத்து, வடித்து குடிநீராகக் குடித்து வர காச நோய், மேக நோய் குணமடையும். ‘ மூலத்தில் பிரமந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குழிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே... பேய் ஓடும்’ இது பாட்டு. இதன் வடபக்க வேரை வழிபாடு செய்து எடுத்து தாயத்தில் வைத்துக் கட்ட பேய், ஓடும்.

----------------------------------------( மூலிகை தொடரும்)

சனி, 7 பிப்ரவரி, 2009

வல்லாரை.


வல்லாரை.


1. மூலிகையின் பெயர் -: வல்லாரை.

2. தாவரப் பெயர் -: CENTELLA ASIATICA
HYDROCOTOYLE ASIATICA.

3. தாவரக்குடும்பம் -: APIACEAE.

4. வேறு பெயர்கள் -: சஸ்வதி, சண்டகி, பிண்டீரி, யோகனவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்திக் குறத்தி, மற்றும் அசுரசாந்தினி.

5. வகைகள் -: கருவல்லாரை மலைப்பாங்கான இடத்தில் இருப்பது.

6. பயன்தரும் பாகங்கள் -: இலை மட்டும்.

7. வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.

முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.

வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.

இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.

வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.

கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.

வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.

பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.

வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.


----------------------------------------( மூலிகை தொடரும்)