வெள்ளி, 30 ஜனவரி, 2009

நெருஞ்சில்.



நெருஞ்சில்.



1. மூலிகையின் பெயர் -: நெருஞ்சில்.

2. தாவரப் பெயர் -: TRIBULUS TERRESTRIS.

3. தாவரக்குடும்பம் -: ZYGOPHYLLACEAE.

4. வேறு பெயர் -: திருதண்டம்,கோகண்டம், காமரசி என்பன.

5. வகைகள் -: சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.

7. வளரியல்பு -: நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும் முட் செடி.. இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது. தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் வளர்கிறது. மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும். இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.

சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
காய்கள் கடலை அளவாகவும், எட்டு-பத்து கூறிய நட்சத்திர வடிவ முட்களிடனும் இருக்கும்.

பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும். காய்கள் பெரிதாக அருநெல்லிக்காய் அளவில் இருக்கும்.

செப்பு நெருஞ்சில் இலைகள் மிகவும் சிறியது. காயும் மிளகை விட சிறியதாக இருக்கும். இதன் பூக்கள் மூன்று இதழ்களைக் கொண்டதாய் சிகப்பு நிறமாக இருக்கும். முட்கள் காணப்படாது.

இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.


8. மருத்துவப் பயன்கள் -: இதன் குணம் - கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது. உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது.

நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.

நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்களுக்கு நன்கு கசக்கிய நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம் எடுத்து அதனுடன் கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் உள்ளே அருந்தி வர நோய்தீரும்.

நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரைஎருச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊரல் தீரும்.

நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்கும்ப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பனிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.

தேள் கடிக்கு நெருஞ்சில் சிறந்த மராந்தாகப் பயன் படுத்தப்படுகிறது.

நெருஞ்சல் வித்தினைப் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும். இளநீரில் சாப்பிட்டு வரச் சிறுநீர்கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு ஆகியவை தீரும்.

சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.

பித்த வெட்டையால் ஏற்படும் வெண்குட்டம் குட்ட நோய் போல் கடுமையானது அன்று. தோலின் நிறத்தை மட்டுமே வெண்மையாக்கும். பித்த நீர் தோலில் படியும் போது வெப்பத்தை ஈர்த்து தோலின் நிறம் மாற்றுகிறது. இதற்கு நல்ல மருந்து இதுவாகும்.

பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாசுலுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து கல்கமாக்கவும். ஒரு கிலோ பசு நெய் வாணலியில் ஊற்றி எரிக்கவும். கல்கத்தை வடையாகத்தட்டி அதில் போட்டு எடுக்கவும், நெய்யை வடித்து வைக்கவும். காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணம் செய்க. காலை, மாலை 5 மி.லி.நெய்யில் 5 கிராம் சூரணம் சேர்த்து சாப்பிடவும். வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பயன்படுத்தலாம். பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும். வெண் குட்டம் குணமாகும். நாடபட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.

நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைக்கவும், இத்தூளை கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்தலாம். உடலுக்கு நிறந்து ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.

யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.


----------------------------------------( மூலிகை தொடரும்)


சனி, 24 ஜனவரி, 2009

வெற்றிலை.


வெற்றிலை.



1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.

3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

“வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம்
அதி பித்தம் இரண்டாவதூறு நீரே
கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர்
மடையெனவே ஐந்தாறிற் சுரந்துள் ஊறி
வருநீர் களைச் சுகித்து
தடையுருப் பித்தமொடு மந்த நோயும்
தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.”

--------------------------------------------------தேரையர்.
-----------------------------(தொடரும்)

ஞாயிறு, 18 ஜனவரி, 2009

எழுத்தாணிப் பூண்டு.


எழுத்தாணிப் பூண்டு.

1. மூலிகையின் பெயர் -: எழுத்தாணிப் பூண்டு.

2. தாவரப் பெயர் -: PRENANTHES SARMENTOSUS.

3. தாவரக்குடும்பம் -: COMPOSITAE.

4. வேறு பெயர் -: முத்தெருக்கன் செவி என்பர்.

5. பயன்தரும் பாகங்கள் -: செடியின் இலை மற்றும் வேர்.

6. வளரியல்பு -: எழுத்தாணிப் பூண்டு ஒரு குறுஞ்செடி. பற்களுள்ள, முட்டை வடிவ, காம்புள்ள இலைகளையும், உருண்ட தண்டுகளில் (எழுத்தாணி போன்ற) நீல நிறப் பூக்களையும் உடைய நேராக வளரும் செடி.. எல்லா வழமான இடங்களிலும் வளரும். நஞ்சை நிலங்களில் வரப்புகளில் தானே வளர்வது. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற பெயரும உண்டு. மல மிளக்கும் குணமுடையது. விதைகள் மூலம் இனப்பெருக்கும் செய்கிறது. தமிழ் நாட்டில் எங்கும் காணப்படும்.

7. மருத்துவப் பயன்கள் -: எழுத்தாணிப்vபூண்டின் இலைகள்
5-10 கிராம் எடுத்து நன்கு அரைத்துச் சற்று தாராளமாக
மலம் போகும் அளவாகக் காலை, மாலை கொடுத்துவரக் குடல் வெப்பு நீங்கிப் புண் ஆறும். சீதபேதி குணமாகும்.

இதன் இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணைய் கலந்து பதமுறக் காய்ச்சி உடம்பில் தடவி வரச் சொறி, சிரங்கு முதலியவை குணமாகும்.

இதன் 5 கிராம் வேரை பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை, மாலை உண்டு வர மார்பகம் வளர்ச்சியுறும். கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.

“பழமலங்கள் சாறும் பருங்குடற்சீ தம்போ
மெழுமலச்சீ கக்கடுப்பு மெகு-மொழியாக்
கரப்பான் சொறிசிரங்குங் காணா தகலு
முரப்பா மெழுத்தாணிக் கோது.”

பொருள் -: எழுத்தாணிப் பூண்டுக்கு பழ மலக்கட்டு, குடலின் சீதளம், கிரகணி, கரப்பான், புடை, சிரந்தி போம் என்க.


----------------------------------------( மூலிகை தொடரும்)

வெள்ளி, 9 ஜனவரி, 2009

காட்டாமணக்கு.


“ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.”

காட்டாமணக்கு.

1. மூலிகையின் பெயர் -: காட்டாமணக்கு.

2. தாவரப்பெயர் -: JATROPHA CURCAS.

3. தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை,பால், பட்டை, எண்ணெய் ஆகியவை.

5. வேறுபெயர்கள் -: ஆதாளை, எலியாமணக்கு ஆகியவை.

6. வகைகள் -: ஜெட்ரோபா சிளான்டிலிட்டரா, ஜெ.காசிப்பிட்டோலியா, ஜெ.பட்டாரிக்கா போன்றவை.

7. வளரியல்பு -: காட்டாமணக்கு சுமார் 5 மீட்டர் உயரம் வரை வளர்க்கூடிய சிறிய மரம். இது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப நாடுகளில் நன்றாக வளர்க்கூடியது. தமிழ் நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் வேலிக்காக இது பயிர் செய்யயப்படுகிறது. இது 30-35 வருடங்கள் வரை வளர்ந்து பயன் தரக்கூடியதாகும் இது தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டு பின்னர் போர்த்து கீசியர்களால் ஆப்பிரிகா மற்றும் ஆசிய நாடுகளிக்கு கொண்டு வரப்பட்டவை. வரட்சியைத் தாங்கி வளர்க்கூடிய பயிராக இருப்பதாலும் தரிசு நிலங்களில் பயிரிடக் கூடிய பயிராகக் கருதப்படுகிறது. இதன் இலைகள் நன்கு அகலமாக விரிந்து 3-5 பிளவுகளை நுனியில் கொண்டதாகவும் நல்ல கரும்பச்சை நிறத்திலும் இருக்கும். 8 செ.மீ. நீளமும் 6 செ.மீ.அகலமும் உடையதாக இருக்கும். இதன் மலர்கள் கொத்தாகப்பூக்கும் தன்மையுடையது. இதன் தண்டு மிருதுவாகவும் 6 செ.மீ.முதல் 23 செ.மீ.வரை நீளமுடையதாகும். பூக்கள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும். பொதுவாக வெப்பமான காலங்களில் பூக்கும் காய்கள் கரு நீல நிறத்திலும் பெரிதாக இருக்கும். ஒரு கொத்தில் சுமார் 10 க்கு மேலான காய்கள் இருக்கும். காய்கள் பச்சை நிறத்திலிருந்து 4 மாதங்களில் மஞ்சளாக மாறி விதைகள் முற்றி வெடிக்கும். விதையிலிருக்கும் வெள்ளையான சதையிலிருந்து பயோ டீசல், எண்ணெய், புண்ணாக்கு கிளிசரால் கிடைக்கும்.

8. மருத்துவப் பயன்கள் -: இலை தாய் பாலையும் உமிழ் நீரையும் பெருக்கும், பால் இரத்தக்கசிவை நிறுத்தவும், சதை நரம்பு வீக்கத்தைக் குறைக்கவும் பயன்படும். இது சோப்புத் தயாரிக்கவும், இதில் ‘ஜெட்ரோபைன்’ எனப்படும் ஆல்க்கலாய்டு புற்று நோய் எதிர்ப்பிற்கும், தோல் வியாதிகளுக்கும் கால்நடைகளின் புண்களுக்கும் ஈக்களினால் உண்டாகும் தொல்லைகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இயற்கை பூச்சிக் கொல்லியாகவும், உராய்வு காப்பு பொருள் தயாரிக்கவும், உருவமைப்பு செய்யும் பொருட்களுக்கும், அழகு சாதனப் பொருட்களாகவும் மின் மாற்றி எண்ணெயாகவும் நீண்ட தொடர் எரிசாராயமாகவும், தோல் பதனிடவும், ஒரு வகை பிசின் தயாரிக்கவும், நூற்பாலைகளில் பயன்படும் எண்ணெயாகவும் தீ தடுப்பு சாதனங்களாகவும் பயன்படுகிறது. மேலும் இந்த மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கருநீல வண்ணம் துணிகளுக்கும், மீன் வலைகளுக்கும் நிறம் கொடுப்பதற்குப் பயன்படுகிறது. காட்டாமணக்கு இலைகள் பட்டுப்பூச்சிகளுக்கு உணவாகப்பயன்படுகிறது.

இலையை வதக்கி மார்பில் கட்டப் பால் சுரக்கும். ஒரு படி நீரில் ஒரு பிடி இலையை போட்டு வேகவைத்து இறக்கி இளஞ்சூட்டில் துணியில் தோய்த்து மார்பில் ஒத்தடம் கொடுத்து, வெந்த இலைகள் வைத்துக் கட்டப் பால்சுரப்பு உண்டாகும்.

விளக்கெண்ணையில் வதக்கிக் கட்டக் கட்டிகள் கரையும் வலி அடங்கும்.

இளங்குச்சியால் பல் துலக்கப் பல் வலி, பல் ஆட்டம், இரத்தம் சொரிதல் தீரும்.

காட்டாமணக்கு எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து பூச புண், சிரங்கு ஆறும்.

பாலை வாயில் கொப்பளிக்க வாய்புண் ஆறும். பாலைத் துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்களில் வைக்க இரத்தப் பெருக்கு நிற்கும். புண் சீழ் பிடிக்காமல் ஆறும்.

வேர்ப்பட்டையை நெகிழ அரைத்துச் சுண்டைக்காயளவு பாலில் கொடுத்து வரப் பாண்டு, சோகை, காமாலை, வீக்கம், வயிற்றுக் கட்டி, பெருவயிறு, குட்டம் ஆகியவை தீரும்.

----------------------------------------( மூலிகை தொடரும்)