புதன், 23 ஜனவரி, 2008

அக்கரகாரம்.


அக்கரகாரம்.


1) மூலிகையின் பெயர் -: அக்கரகாரம்.


2) தாவரப்பெயர் -: ANACYCLUS PYRETHRUM.


3) தாவரக்குடும்பம் -: COMPOSITAE.


4) வேறு பெயர்கள் -: அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி,அக்கரம் முதலியன.


5) தாவர அமைப்பு -: அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும்.
ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின்,இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.


6) பயன் படும் பாகங்கள் -: வேர்கள் மட்டும்.


7) மருத்துவப் பயன்கள் -: மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
"அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய்
கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்."

அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.


உபயோகிக்கும் முறை - :இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் போம். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.


தளகண்டாவிழ்தம் -: அக்கரகாரம், அதிமதுரம்,சுக்கு, சிற்றரத்தை,கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.


அக்கரகார மெழுகு - :அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. ( இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும்.)இடையல் சேர்ப்பு நன்றி வள்ளார்பிரகாஷ்-
வள்ளலார் பிரகாஷ் தேங்காய் ஓட்டின் கண் பகுதி மட்டும், அக்கிரகாரம், சிற்றரத்தை,அதிமதுரம் இவற்றை தனித்தனியே பொடியாக்கி முறையே 1,2,4,8 ஆக கலந்து கொண்டு திருகடிகையளவு 50மில்லி பாலில் கலந்து வாய்வழியாகவோ மூக்கில் நுழைத்துள்ள குழாய்(ரைஸ் டியூப்) வழியாகவோ மெல்ல செலுத்த மூளையில் அதிக சேதாரமில்லாத(பிரைன் ஹாமரேஜ்) கோமா நோயாளிகள் விரைந்து குணமாவர். மூளைச்சாவு ஏற்பட்டவர்களுக்கும் இறுதி முயற்சியாக செய்து பார்க்கலாம். நன்றி
-------------------------------------------(மூலிகை தொடரும்)
 

சனி, 19 ஜனவரி, 2008

அருவதா.


அருவதா.


1) மூலிகையின் பெயர் -: அருவதா.


2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS.


3) தாவரக்குடும்பம் -: RUTACEAE.


4) வேறு பெயர்கள் -: சதாப்பு இலை.


5) தாவர அமைப்பு -: இப்பயிர் மலைப் பிரதேசங்களில்செளிப்பான காடுகளில் இயற்கையாக வளர்கிறது. இதன் பூர்வீகம் தெற்கு ஐரோப்பா, வட அமரிக்காவிலும் ஐரோப்பாவிலும் அதிகமாகக் காணப்படும் இது வரட்சியைத்தாங்கக் கூடியது. அருவதா செடிகளை எல்லா வகையான மண்ணிலும் வளர்க்கலாம் செடிகள் 2 - 3 அடி உயரம் வரை வளரும். இலைகள் சாம்பல் நிரத்தில் இருக்கும். இலைகள் 3 - 5 அங்குல நீழமுள்ளவை இலை நீலம் கலந்த பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிரத்தில் அரை அங்குலம் நீளத்தில் நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஜூன், ஜூலை மாத்ததில் பூக்கும். செடிகள் விதை,வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகின்றன. நட்ட 2 முதல் 3 மாதங்களில் இலைகளை அறுவடை செய்து நேரடியாகவோ அல்லது பதப்படுத்தியோ பயன் படுத்தலாம். இதை வீட்டு அலங்காரச் செடியாகவும் வளர்க்கிறார்கள். இந்தச்செடிஅருகே நாய், பூனை, பாம்பு, ஈ, முதலியன வராது.


6) பயன்படும் பாகம் -: சதாப்பு இலை மற்றும் வேர்.


7) மருத்துவப் பயன்கள் -: இதன் இலைகள் வாதம் மற்றும் மூட்டு வலியைப் போக்கவும், குடல் புழுக்களை அகற்றவும், பயன் படுகின்றன. நரம்புக் கோளாறுகளை நிவரத்தி செய்வதற்கும், ரத்தப்போக்கைக் குணப்படுத்தவும் இவற்றைப்பயன் படுத்தலாம். இதன் இலையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் கர்பப்பை கோளாறுகளைக் குணப் படுத்த உதவுகிறது.
சதாபலை என்னும் சதாப்பு இலையினால் பால் மந்தம் முதலிய வற்றால் விளைகின்ற சுரம்,கரைபேதி, கபவனம், பிரசவ மாதர்களின் வேதனை இவை நீங்கும்.


இது கண் வலியைப் போக்கும், வாந்தியைக குணமாக்கும், வயிற்று வலியைப்போக்கும், காதில் சீழ் வடிதல் காதுப் புண் குணமாக்கும், மூத்திரக் குழாயில் ஏற்படும் அடைப்புக்களை நீக்கும், இருதயத்தில் ஏற்படும் மூச்சுத் திணரலைப் போக்கும்,முதுகு வலி, முதுகு வடத்தில் ஏற்படும் வலியைப் போக்கும். கை கால் வலிகள், இவைகளைப் போக்கும். விபத்தில் ஏற்படும் எலும்பு முறிவுகளைச் சரி செய்யும்,ஞாபகசத்தியைத் தூண்டும், மன அழுத்தம் குறைக்கும், பல் வலியைப் போக்கும், பல் துலக்கும் போது எகிரில் ரத்தம் வருவதை குணமாக்கும், நாக்கிற்கு உணவின் சுவை அறிய உதவும், தொண்டையில் ஏற்படும் வலியைப் போக்கும், முகத்தில் ஏற்படும் வீக்கம், உதட்டு வலி, உதடு பிளவு இவைகளைப் போக்கும், பெண்களுக்கான மாதவிடாய் விட்டு விட்டு வரும் உதிரப் போக்கு, வலி இவைகள் குணமாகும், வெள்ளை படுதல், மூத்திர எறிச்சலைப் போக்கும், எலும்பு வலி, உடலில் ஏற்படும் தினவு, இவைகளைப் போக்கும், மூலத்தைப் போக்கும், ஆஸ்த்துமாவைப் போக்கும், வாய், தொண்டையில் ஏற்படும் புற்று நோயைக் குணப் படுத்தும்.


உபயொகிக்கும் முறை -: இதன் இலையுடன் சிறிது மிளகுசேர்த்து வெண்ணெய் போல் அரைத்து வேளைக்கு 2 - 3 குன்றி எடை தாய்ப் பாலில் கலக்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க மார்பில் உள்ள கோழையைக் கரைக்கும். சுரம்வலி (இசிவு) இவற்றைப் போக்கும். அல்லது இதன் இலைச்சாற்றில் 10 - 15 துளி தாய்ப் பாலுடன் கலந்து கொடுக்க முற் கூறப் பட்ட பிணிகளைக் குண்ப்படுத்தும். இதன் இலையுடன் மஞ்சள் சேர்த்தரைத்து குழந்தைகளுக்குத் தேகத்தில் பூசி ஸ்நானம் செய்விக்கச் சீதள சம்பந்தமான பல பிணிகளையும் வர வொட்டாமல் தடுக்கும்.


இன்னும் இதனை இதர சரக்குகளுடன் கூட்டி சூரணமாகவும், மாத்திரை களாகவும் செய்வதுண்டு, அவற்றுள் சில முக்கிய முறைகளாவன.


சதாப்பிலைச் சூரணம் - நிழலில் உலர்த்திச் சதாப்பு இலை,சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம், சன்ன லவங்கப்பட்டை,சதகுப்பை விசைக்குப் பலம்1 தனியா பலம் 6 இவற்றை ஒருமிக்க கல்லுரலில் போட்டு கடப்பாறையால் நன்றாய் இடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடி பிரமாணம் சமனெடை கற்கண்டு சூரணம் சேர்த்து தினம் 2 - 3 வேளை கொடுத்து வர வாயுவை கண்டிக்கும். சீதளத்தை விரைவில் அகற்றும் ஸ்தூரிகளுக்கு உண்டான உதிரச்சிக்கலையும் வயிற்றில் மரித்துப போன கருவையும் வெளியாக்கும். இன்னும் இதன் பெருமையைக் கூறமிடத்துச் சூதக சந்நி வாயுவினால் காணுகின்ற வயிற்றுவலி, இசிவு முதலிய ரோகங்களுக்கு சிறந்த அவிழ்தமாகும்.

சதாப்பிலை மாத்திரை-:பச்சை சதாப்பு இலை விராகனெடை 8,கோரோசனை விராகனெடை 1, உரித்த வெள்ளைப் பூண்டுவிராகனெடை 2, இவற்றை கல்வத்திலிட்டுக் கையோயாமல் ஒரு சாமம் அரைத்து வருக ஒரு சமயம் மெழுகு பதத்துக்குப் போதிய ஈரமில்லாவிட்டால் சிறிது தாய்ப் பால் கூட்டியரைத்து பச்சைப் பயிறு, உழுது பிரமாணம் மாத்திரைகளாகச் செய்து நிழலிறுலர்த்திச் சீசாவில் பத்திரப்படுத்துக. இதனை ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகட்கு வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் 2 வேளை தாய்ப் பாலில் கொடுக்க சுரம், வலி, மாந்தம்,இருமல் முதலிய பிணிகள் தீரும்.
-----------------------------------------(மூலிகை தொடரும்)

வியாழன், 10 ஜனவரி, 2008

கண்வலிக்கிழங்கு



கண்வலிக்கிழங்கு.


1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு.


2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA.


3) தாவரக்குடும்பம் -: LLIACEAE.


4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை.


5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன.


6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine)


7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறிது வரட்சியைத் தாங்கும். வேலி ஓரங்களில்நன்றாக வளரும். இதன் பிறப்பிடம் இந்தியா. மற்ற நாடுகளான ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தோசீனா, மடகாஸ்கர், இலங்கை, அமரிக்கா போன்ற நாடுகளிலும் வளர்ந்து வருகின்றது. மருந்துப்பயன் கருதி வியாபார நோக்குடன் இந்தியாவில் சுமார் 2000 ஹெக்டரில் சாகுபடியாகிறது. தமிழ் நாட்டில் சேலம், கரூர், திண்டுக்கல், ஈரோடு, தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் தற்சமயம் பரவலாகப் பயிரிடுகின்றனர். சுமார் 1000 ஹெக்டர்கள்.பொதுவாக இதைக் கலப்பைக் கிழங்கு என அழைப்பர்கள்.இதன் கிழங்கு 'V' வடிவில் காணப்படும். கிழங்கு நட்ட 180 நாட்களில் பலன் தர ஆரம்பிக்கிறது. தமிழ் நாட்டில் ஜூன், ஜூலை மாதங்களில் (ஆடிப்பட்டம்) நடுவார்கள். இது கொடிவகையைச் சார்ந்தது ஆகும். இது பற்றி வளர்வதற்கு ஊன்றுகோல் தேவை. மூங்கில் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளைக்கொண்டு ஒரு மீட்டர் அகலத்திற்கு 2 மீட்டர் உயரத்திற்கு பந்தல் அமைத்து அதன் மேல் கொடியை படரவிடவேண்டும். அல்லது காய்ந்த வலாரி மார் பயன்படுத்தலாம். நட்ட 30, 60, மற்றும் 90 நாட்களில் களை எடுத்தல் சிறந்தது. முதலில் நட்ட பின்பு நீர் பாச்ச வேண்டும், பின் 20 - 25 நாட்கள் இடைவெளியில் பாச்சினால் போதுமானது. ஆனால் சராசரி மழையளவு 70 செ.மீ. இருந்தால் போதுமானது. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பூக்கும். இதன் கிழங்கு ஒவ்வொன்றும் சுமார் 100 கிராம் வரை இருக்கும். கோடை காலத்தில் கிழங்குகள் ஓய்வுத்தன்மை பெற்று மழைக் காலங்களில் மட்டுமே கொடிகள் துளிர்த்து பூத்துக் காய்க்கும். இதன் பூ பளிச்சென்று ஆரஞ்சு, மஞ்சள் வண்ணப் பூக்களைக்கொண்ட கொடியாகும். விளைந்த காய்கள் பச்சை நிறத்திலிருந்து இளம்பச்சை அல்லது பழுப்பு நிறமாக மாறி, காய்களின் தோல் கருகிவிடும். இத்தருணத்தில் காய்களைப்பறிக்க வேண்டும். காய்கள் மதிர்ச்சி பெற்ற பின் பாசனம்அவசியமில்லை.


ஒரு கொடியில் சுமார் 150 பூக்கள் வரை பூக்கும். பூக்கள் விரிகின்ற சமயம் தன் மகரந்தச் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் அயல் மகரந்தச் சேர்க்கை உண்டாக்க, பூக்கள் விரிந்து மகரந்தம் வெளிப்படும் சமயத்தில் அரையடி நீளமுள்ள மெல்லிய குச்சி நுனியில் சிறிது பஞ்சைக் கட்டிக் கொண்டு பூக்களில் வெளிப்படும். மகரந்தத்தைப் பஞ்சால் தொடும் போது மகரந்தத்தூள் பஞ்சின் மீது ஒட்டிக் கொள்ளும், இதனைக் கொடிகளில் உள்ள மற்ற பூக்களின் சூல் பகுதியின் மீது தொட்டு அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தலாம். இதைக் காலை 8 - 11 மணிவரை செய்வதால் உற்பத்தி பெருகும். நான்கு மாதத்தில் பூத்துக் கொடி காய்ந்து விடும்.அப்போது காய்களை அறுவடை செய்ய வேண்டும். செடி ஒன்றிக்கு 100 கிராம் விதை மற்றும் ஒரு கிலோ கிழங்கு வீதம் கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 500 கிலோ கிடைக்கும்.காய்களைப் 10 -15 நாட்களுக்கு நிழலில் உலர்த்தி விற்பனைக்கு அனுப்பலாம். விதைகளைக் காற்றுப் புகாதவாறு பைகளில் சேமித்து வைப்பது நல்லது. விதைகள்ஒரு கிலோ ரூ.500-00 க்கு மேல் 1000 வரை விலை போகும்.இது ஒரு முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். இதன் விதைமற்றும் கிளங்குகளின் வாயிலாகப் பயிர் செய்யலாம்.எனினும் கிழங்குகள் மூலமே வணிக ரீதியில் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.


8) பயன் படும் பாகம் - விதைகள் கிழங்குகள் ஆகியவை.


9) மருத்துவப் பயன்கள் - வாதம், மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து.பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும்டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன் படுகிறது.


சுபர்பின் மற்றும் கோல்சிசின் ஆகிய மருந்துப் பொருட்கள் இதில்கிடைக்கின்றன. குடற்புழுக்கள், வயிற்று உபாதைகள் மற்றும் தேள், பாம்புக்கடிகளுக்கு நல்லதொரு மருந்து. இக்கொடியினைக் காட்டிலும் விதைகளில் தான் அதிகஅளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள்மிகுதியான ஏற்றுமதி மதிப்பைப் பெற்றுள்ளன. அண்மை காலத்தில் 'கோல்சிசின்' மூலப் பொருளைக்காட்டிலும் இரண்டு மடங்கு வீரியமான 'கோல்ச்சிகோஸைடு' கண்டுபிடிக்கப்பட்டு மூட்டு வலி மருத்துவத்தில் மிகவும் பயன்படுத்துப் படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் கௌட்எனும் மூட்டுவலி நிவாரணத்திற்குப் பெரிதும் பயன்படுகிறது. மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக யூரிக் அமிலம்மூட்டுக்களில் தங்குவதால் இந்த 'கௌட்' வருவதாகவும்,இந்த மருந்து அவ்வாறு யூரிக் அமிலம் மிக நுண்ணிய கிரிஸ்டல்களாக தங்காவண்ணம் பாதுகாக்கிறது. இதனால்தொடர்ந்து மூட்டுவலி உண்டாகும் வட்டத்தினை இதுமுறித்து விடுவதாகச் சொல்லப்படுகிறது.


கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும், இன்னும் தலைவலி, கழுத்துவலி, குட்டம், வயிற்று வலி, சன்னி, கரப்பான் முதலியன நீங்கும் என்க.


உபயோகிக்கும் முறை -: இந்தக் கிழங்கை 7 வித நஞ்சுபதார்த்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது பாம்புக்கடி, தேள்கொட்டு, தோல் சம்பந்தமான வற்றிக்குச் சிறந்தது.


உலர்ந்த கிழங்கை தினந்தோரும் புதிய கோமையத்தில் 3 நாள் வரையில் ஊறப்போட்டு மெல்லிய வில்லைகளாகஅரித்து உப்பிட்ட மோரில் போட்டு இரவு காலத்தில் ஊறவைப்பதும் பகலில் உலர்த்துவதுமாக 7 நாள் செய்யஅதிலுள்ள நஞ்சு விலகும். பாம்பு கடித்தவர்களுக்கு இதில்ஒரு சிறிய துண்டை மென்று தின்ணும் படியாகக் கொடுக்க விஷம் கால் அல்லது அரை மணி நேறத்திறுகுள் இறங்கும். உத்தேசித்த படி குணம் ஏற்பட வில்லையென உணரின் 3 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் ஒரு முறை முன் போல் கொடுக்க உடனே குணப்படும்.


இந்தக் கிழங்கை நன்றாய் அரைத்து ஒரு மெல்லிய சீலையில் தளரச்சியாக முடிச்சுக்கட்டி ஒரு மட்பாண்டத்தில் குளிர்ந்த சலத்தை வைத்துக் கொண்டு அதனில் முடிச்சை உள்ளே விட்டுப் பிசைந்து பிசைந்து சலத்தில் கலக்கி வர மாவைப் போன்ற சத்து வெளியாகும். முடிச்சை எடுத்து விட்டுச் சிறிது நேரம் சலத்தைத் தெளிய வைத்து கலங்காமல் தெளிவு நீரை வடித்து விட்டு மீண்டும் சிறிது சலம்விட்டுக் கலக்கி முன் போல் தெளியவைத்து வடிக்கவும் இப்படி 7 முறை செய்து உலர்த்தி அரைத்துச் சீசாவில் பத்திரப்படுத்தவும். இதனை தேகத்தின் சுபாவத்திற்கு ஏற்றவாறு, 1 அல்லது 2 பயனளவு ரோகங்களுக் குரிய அனுபானத்தில் கொடுத்துவரக் குஷ்டம், வயிற்றுவலி,சன்னி, சுரம், வாதகப சம்பந்தமான பல ரோகங்கள் குணமாகும். இந்த பிரோகத்தில் சரிவரக் குணம் ஏற்படா விடின் சிறிது மருந்தை அதிகப் படுத்திக கொள்ளவும்.ஒரு சமயம் கொடுத்த அளவில் ஏதேனும் துர்குணம் செய்திருப்பதாக உணரின் கால தாமதம் செய்யாமல் மிளகு கியாழத்தைக் கொடுத்து மருந்தின் வீறை முறித்துவிட வேண்டும்.


பிரசவ வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப் படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புழ், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவிவைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் சலம் கொண்டு சுத்தப்படுத்தவும். நஞ்சுக்கொடிக்காகச் சிகிச்சை செய்யும் போது கருஞ்சீரகத்தையும், திப்பிலியையும், சமனெடையாகச் சலம் விட்டு அரைத்துசிறு சுண்டைக்காய் பிரமாணம் வைன் சாராயத்தில் கலக்கிஉள்ளுக்குக் கொடுத்தால் சாலச்சிறந்தது.


இந்தக் கிழங்குடன் கருஞ்சீரகம், கார்போகஅரிசி, காட்டுச்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் முதலியவற்றைச் சமனெடை சிறிய அளவாகசலம் விட்டு நெகிழ அரைத்துச் சொறி, சிரங்கு, ஊறல்,படை, முதலியவற்றிக்குத் தேய்த்து நீராடிவரக் குணமாகும்.


அரைப்பலம் பச்சைக் கிழங்கைச் சிறு துண்டுகளாக அரிந்து 5 பலம் வேப்பெண்ணெயில் போட்டுச் சிறு தீயாக எரித்துக் கிழங்கு வில்லைகள் மிதக்கும் தறுவாயில் ஆர விட்டு வடித்து சீசாவில் பத்திரப் படுத்துக. இதனைப் பாரிசவாயு, தலைவலி, கழுத்து நரம்புகளின் இசிவு, கணுச் சூலை முதலியவற்றிக்குத் தேய்க்கக் குணமாகும்.
-----------------------------------------(மூலிகை தொடரும்)