புதன், 31 அக்டோபர், 2007

பிரண்டை


பிரண்டை. 17


1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.

2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.

3) தாவரக்குடும்பம் - :VITACEAE.

4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.

5) வளரும் தன்மை -: பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.

6) பயன்தரும் பாகங்கள் -: வேர் தண்டு ஆக்கியவை

7) பயன்கள் -: இது மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல், பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல், இதன் உப்பே சிறந்த குணமுடையது.

பிரண்டை உப்பு -: பிரண்டையை உலர்த்தி எடுத்துச் சாம்பலாக்க வேண்டும். ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் நீரில் கரைத்து வடிகட்டிஅரை நாள் தெளிய வைக்க வேண்டும் தெளிந்த நீரை பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி 8 -10 நாள் வெய்யலில் காயவைக்கவும் நீர் முழுதும் சுண்டி உலர்ந்தபின் படிந்திருக்கும் உப்பினை சேர்த்து வைக்கவும்.

பேதி, வாந்தி -: குழந்தைகளுக்கு வரும் வாந்திபேதிக்கு ஒரு கிராம் அளவு பாலில் இந்த உப்பைக் கரைத்து மூன்று வேளை கொடுக்க குழந்தை வாந்தி பேதி குணமாகும். செரியாமை குணமடையும். பெரியவர்களுக்கு 2 -3 கிராம் வடித்த கஞ்சியில், மோரில் கொடுக்கவும்.

வாய்ப்புண் - :வாய் புண், வாய் நாற்றம், உதடு, நா வெடிப்பு ஆகியவற்றிக்கு 2 கிராம் வெண்ணெயில் இரு வேழை மூன்று நாள் கொடுக்க கணமாகும்.

வயிற்றுப்புண் -: தீராத வயிற்றுப்புண், குன்மக்கட்டி, வயிற்று வலி ஆகியவற்றிக்கு இதன் உப்பை 48 - 96 நாள் இரு வேழை சாப்பிட குணமாகும்.

மூலம் -:நவ மூலமும், சீழ்ரத்தம் வருதல், அரிப்பு, கடுப்பு, ஆசனவாயில் எரிச்சல் இருந்தாலும் இந்த உப்பை 3 கிராம் அளவு வெண்ணெயில் 24 -48 நாள் இரு வேழை கொடுக்க குணமாகும்.

பிரண்டை பற்பம் - : 300 கிராம் பிரண்டை100 கிராம் உப்புடன் ஆட்டி அடைதட்டிமண் குடுவையில் வைத்துச் சீலைமண் செய்துபுடம் போட்டு எடுக்க சாம்பல் பற்பமாகமாறி இருக்கும் உப்பைப் போலவே எல்லா நோய்களுக்கும் இந்த பஸ்பத்தைக் கொடுக்கலாம்.

உடல் பருமன் -: பிரண்டை உப்பை 2 - 3 கிராம் பாலில் கொடுத்துவர இரு திங்களில் உடல் பருமன் குறைந்து விடும். ஊளைச் சதைகளையும் குறைக்கும்.

ஆஸ்துமா -: இந்த உப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி, மதுமேகம், நீரிழிவு குணமடையும்.

சூதகவலி - : மூன்று வேழை 2 கிராம் நெய்யில் கொடுக்க சூதகவலி குணமடையும்.

தாதுநட்டம் -: பிரண்டை உப்பை 2 கிராம் அளவு ஜாதிக்காய்த் தூள் 5 கராமுடன் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும், உடம்பு வன்மை பெரும்.

செரியாமை -: பிரண்டை இலையையும், தண்டையும் உலர்த்தி, இடுத்து சூரணம் செய்து கொண்டு அதனோடு சுக்குத்தூள், மிளகுத்தூள் சமஅளவாக எடுத்துக்கொண்டு உள்ளுக்குக் கொடுத்துவர செரியாமை தீரும். இதனை கற்கண்டுகலந்த பாலுடன் உட்கொண்டுவரு உடலுக்கு வன்மை தரும்.

நெய்விட்டு பிரண்டைத்தண்டை வறுத்து துவையலாக அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல் சிறு குடல் பெருகுடல் புண் நீக்கி நல்ல பசிஉண்டாகும்.
பிரண்டைத் தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து கொட்டைப பாக்களவு வீதம் தினம் இரு வேழையாக எட்டு நாட்கள்உட் கொண்டு வந்தால் மூல நோயில்உண்டாகும் நமச்சலும், குருதி வடிதலும் நிற்கும்.

காதுவலிக்கும், காதில் சீழ்வடிதலுக்கும் பிரண்டையை தீயில் வதக்கி சாறு பிழிந்துஇரண்டு துளி காதில் விட்டு வர குணம் தெரியும். மூக்கில் வடியும் ரத்தம் நிற்கஇந்தச் சாற்றை இரண்டு அல்லது மூன்றுதுளி மூக்கில் விடலாம், இந்தச் சாற்றையே தகுந்த அளவில் உள்ளுக்குக் கொடுத்து வரபெண்களுக்கு உண்டாகும் மாதவிலக்கு கோளாறுகள் நீங்கும்.


பிரண்டை, பேரிலந்தை,வேப்ப ஈர்க்கு,முருங்கன் விதை, ஓமம் இவைகளை சமளவு எடுத்து கஷாயமிட்டு அருந்தி வர, வயிற்றில் உள்ள வாயு நீக்கி வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறி நல்ல பேதி ஏற்படும்.

முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்கு இதன்வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் வீதம் உண்டு வரலாம் இதனை வெந்நீரில் குழைத்து பற்றிட்டும் வரலாம்.


பிரண்டைத் தண்டை எடுத்து சுண்ணாம்பு தெளி நீரில் ஊரவைத்து வேழைக்கு ஒன்றாக உட்கொண்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

பிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக்காச்சி, குழம்பு பதத்தில் இறக்கி பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும்.
---------------------------(மூலிகை தொடரும்)

ஞாயிறு, 21 அக்டோபர், 2007

சதாவேரி


சதாவேரி

1 வேறுபெயர்கள் :-தண்ணீர் விட்டான் கிழங்கு, நீலாவரை, சதாவரி, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல்.

2 தாவரப்பெயர் :-ஆஸ்பராகஸ் ரசிமோசஸ்.

3) தாவரக்குடும்பம் :-LILLIACEAE.

4) வகைகள் :- ஆ.ரெசிமோசஸ், ஆ.அட்செடன்ஸ்,ஆ. அப்பினாலிஸ், கோனோசினாமல், ஆ.ஆல்பராகஸ்.

5) வளரும் தன்மை :-வளமிக்க இரும்பொறை மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை, வடிகால் வசதிஉடைய மண் எனில் மிகவும் ஏற்றது. ஓரளவு வறட்சியை தாங்க வல்லவை. 1500 முதல் 4000 அடி உயரமுள்ள மலைப் பிரதேசங்களில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும், 15 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் தட்பவெப்பம் இருப்பது நல்லது. மெல்லிய நறுமணமுடைய இக்கிழங்குக் கொடிகள் 6 அடி உயரம் வரை வளரக்கூடியது. தண்டுகளில் சிறிய முட்களை உடைய இந்தச் செடி ஒவ்வொன்றிலும் 15 - 20 நீண்ட கிழங்குகள் தோன்றும். இதன் இலைகளில் பறித்தவுடன் டையோஸ்ஜெனின் என்ற வேதியப்பொருள் கிடைக்கும். இதன் பழங்கள் மற்றும் பூக்களில் க்ளைக்கோசைடுகளான குயர்செட்டின்நிட்டின், மற்றும் ஹைப்பரோசைடு, சிட்டோஸ்டீரால், ஸ்டிக்மாஸ்டீரால் மற்றும் வேர்க் கிழங்குகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது. கிழங்குகள் முதிர்ச்சி அடைய 12 - 14 மாதங்கள் ஆகும். இதன் வேர் கிழங்குகளை நன்கு வெய்யிலில் காயவைத்து இழஞ்சூடாய் இருக்கும் போது இயற்கை தன்மை மாராமல் கிழங்குகளைக் காற்றுப் புகா கோணிப்பைகளில் சேமித்துவைத்தல் வேண்டும்.
6) பயன்தரும் பாகங்கள் :- கிழங்குகள், வேர்கள்.

7) பயன்கள் :- ஒரு பழம் பாடல்.

"நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா
முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே
வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்
தண்ணீர் விட்டான் கிழங்குதான்'

சதாவரி கிழங்கு வெகு மூத்திரம், பழைய சுரம், சோமரோகம், வெள்ளை, உட்சூடு, ஆகியவற்றை நீக்கும்.

இதனால் தீரும் நோய்கள், வயிற்றுப் போக்கு, சர்க்கரை வியாதி, சுவாச நோய் முதலியன. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. குழந்தை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரப்பை அதிகரிக்கவும், மெல்லிய தேகம் உடையவர்கள் நல்ல சதைப்பிடிப் புடையவைகளாக மாறவும் பயன்படுகிறது.

உலர்ந்த கிழங்கை இடித்து சூரணம் செய்து வேளைக்கு 1-2 வராகனெடை நெய், சர்க்கரை, பால், இவற்றை இட்டு தினம் 3 வேளை கொடுக்கவும். அல்லது பச்சைக் கிழங்கை இடித்துப் பிழிந்து சாற்றில் வேளைக்கு1/4 - 1/2 அவுன்ஸ் அளவு பால், சர்க்கரையிட்டுக் கொடுக்கலாம். இதனால் நீர்கடுப்பு, எலும்புருக்கி, மேகசாங்கே, கை,கால் எரிவு, சுக்கிலபிரமேகம், தாதுபலவீனம், கரப்பான் முதலிய வியாதிகள் குணமடையும். தேகபுஷ்டி உண்டாகும்.
-----------------------------(மூலிகை தொடரும்)


செவ்வாய், 16 அக்டோபர், 2007

களா


களா


1) வேறுபெயர் - கிளா.

2) தாவரப்பெயர் --CARRISSA CARANDAS.


3) குடும்பம் -- APRCYANACEAE.


4) வளரும் தன்மை --செம்மண்ணில் நன்கு வளரும்.மலைகளில் தன்னிச்சையாக புதர் போல் வளரும்.ஐந்து முதல் ஆறு அடி உயரம் வரை வளரும்.முட்கள் உள்ள செடி, தடிப்பான பச்சை இலைகளையுடையது. காரைச்செடிபோன்று இருக்கும். வெண்மையான பூக்களையும்,சிவப்பு நிறக்காய்களையும், கறுப்புப்பழங்களையும் கொண்டது.பூவும் காயும் புளிப்புச் சுவையுடையவை.விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.


5) பயன்தரும் பாகங்கள் --பூ, காய், பழம், வேர்ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


6)பயன்கள் -- காய், பழம், ஆகியவை பசி மிகுக்கும்வேர் தாதுக்களின்வெப்பு தணிக்கும், சளியகற்றும்,மாத விலக்கைத்தூண்டும்.


காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, பசியின்மை, சுவையின்மை, இரத்தபித்தம்,தணியாத தாகம், பித்தக்குமட்டல் ஆகியவைதீரும்.


வேரை உலர்த்திப் பொடித்துச் சமன் சர்கரைக்கலந்து 3 கிராம் காலை மாலை சாப்பிட்டு வரப்பித்தம், சுவையின்மை, தாகம், அதிகவியர்வை,சில்விஷயங்கள் தீரும்.


களாப்பழத்தைஉணவுண்டபின் சாப்பிட உணவு விரைவில் செரிக்கும்.
தூய்மையான களாப்பூவை நல்லெண்ணையில் இட்டு பூ மிதக்கும் வரை வெய்யிலில் வைத்திருந்து வடிகட்டி இரண்டொரு துளிகள்நாள் தோறும் கண்களில் விட்டு வரக்கண்களிலுள்வெண்படலம்,கரும்படலம், இரத்தப் படலம், சதைப்படலம் ஆகியவைதீரும்.


50 கிராம் வேரை நசுக்கி அரை லிட்டர் நீரிலிட்டு 100 மி.லி.ஆக க்காச்சி வடிகட்டிகாலை மாலை 50 மி.லி ஆகக்கொடுக்கமகப் பேற்றின் போது ஏற்படும் கருப்பைஅழுக்குகள் வெளிப்படும்.

----------------------------------------------(மூலிகை தொடரும்)

ஞாயிறு, 7 அக்டோபர், 2007

குப்பைமேனி



குப்பைமேனி

1) வேறுபெயர்கள் :- பூனை விரட்டி, இந்தியன் அக்கலிப்பா,மரகாந்தா, குப்பி, கஜோதி.

2) தாவரப்பெயர் :- ACALYPHA INDICA.

3) குடும்பம் :- EUPHORBIACEAE.

4) வளரும் தன்மை :- இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. குப்பை மேனிக்கு அருகில் பூனை வராது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில்
ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இருக்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும். காய்களைச் சுற்றிப் பச்சை நிறத்தில் செதில்கள் இருக்கும். மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும் இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களைக் கொண்ட
குறுஞ்செடி. இது சுமார் 50 செ.மீ. உயரம் வரை வளர வல்லது. குனான், ஸ்டீரால்ஸ் மற்றும், சைனோஜெனிக் க்ளைக்கோஸைடு போன்ற மிகவும் விஷம் வாய்ந்த வேதிப் பொருட்களையும் உடையது. குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். எரிப்புகுணமுடையது.வசீகரப்படுத்தும்இயலடையது.
மாந்திரீக மூலிகையாகும். விதை நாற்றுக்கள் மூலம் இனப்பெருக்க செய்யப்படுகிறது.

5) பயன்தரும் பாகங்கள் :- செடி முழுதும் மருத்துவப்பயனுடையது.

6)பயன்கள் :- நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலைக்கட்டுப் படுத்தும். விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய்,நமச்சல், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. இலை வாந்தி உண்டாக்கிக் கோழையகற்றியாகவும். வேர் மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

சமூல சூரணம் 1 சிட்டிகை நெய்யில் காலை மாலைஒரு மண்டலம் கொடுக்க 8 வித பவுத்திர நோயும்தீரும்.

வேர்சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல்ஒன்றாய் காச்சிக் கொடுக்க நாடா புழு, நாக்குப்பூச்சிநீங்கும். பேதியாகும் சிறுவர்களுக்குப் பாதியளவுகொடுக்கவும்.

இலையை விளக் கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும்.

இலைச் சூரணத்தைப் பொடி போல் நசியமிட தலை வலி நீங்கும்
இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்துக்குளிக்கத் தோல் நோய் அனைத்தும்தீரும்.

மூலநோய் :- மூலநோய் ஒரு சிக்கலான நோய்.அறுவை செய்தாலும் வளரும். மூலிகை மருந்துகள்நல்ல பயன் தரும். ஆசனமூலம், பக்க மூலம், சிந்திமூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலைமூலம், கொடிமூலம், கண்டமாலை என எட்டு வகைப்படும். பதினெட்டுவகை எனவும், கூறுவர். அவைஇவற்றில் அடங்கும். மூலத்திற்குக் குப்பைமேனிசிறந்த மருந்தாகும். பூத்த குப்பைமேனியை வேறுடன்பிடுங்கி நிழலில் உணர்த்தி சூரணம் செய்து இதில்2 - 5 கிராம் அளவு பசும் நெய்யில் காலை மாலைசாப்பிடுக, 48 நாள் சாப்பிட எந்தவகை மூலமும்முற்றிலும் குணமாகும்மோரில் சாப்பிடுக. புளிகாரம் இல்லாவிடில் விரைந்து குணமடையும்.

நாடாப்பூச்சி, புழு - குடற்பழுவான நாடாப்புழு, கீரிப்பூச்சி, ஆகிய வற்றிக்கு, இதன் வேர் 50 கிராம்200 மி.லி. நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள்அனைத்தும் வெளியேறும்.

விடம் :- குப்பைமேனிச்சாற்றில் சுண்ணாம்பு மத்தித்துநாய், பாம்பு, எலி, முதலியன வற்றில் கடி வாயில்தடவ குணமடையும். மேகப்புண்ணும் குணமடையும்.

படுக்கைப்புண் :- ஆமணக் கெண்ணையில் இந்த இலையை வதக்கி இழஞ் சூட்டுடன் வைத்துக் கட்ட படுக்கைப் புண், மூட்டு வீக்கம், வாத வலி தீரும்.

தலைவலி :- இந்த இலையின் பொடியை மூக்கில்பொடிபோல் இழுக்க நீர் வடிந்து தலைவலி உடனேகுணமடையும். இதனை நசியமிடுதல் என்பர். வெறிநாய்க் கடியும், சித்த பிரமையும் குணமடையும்.

சொறிசிரங்கு :- குப்பைமேனி, மஞ்சள், உப்பு மூன்றும்அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் சென்று குளித்துவர சொறி சிரங்கு படை குணமடையும்.

புண் :- எல்லாவகையான புண்களுக்கும் இதன்இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும், மேனி மீண்டும் எழிலோடு விளங்கும்.
---------------------------------------------------(மூலிகை தொடரும்)

-------------------------------------------------------------------------------

புதன், 3 அக்டோபர், 2007

கற்பூரவல்லி


கற்பூரவல்லி

1)வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

2)தாவரப்பெயர்- COLEUS AROMATICOS.

3)குடும்பம்-லாமியேசியே.

4)வளரும் தன்மை-இதன் தாயகம் இந்தியா. இதைப்பற்றிய குறிப்பிகள் நமது சித்தர்கள் ஓலைச்சுவடிகளில்இருந்ததாக சரித்திரம் சான்றியம்புகிறது. இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண்,செம்மண், களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது.6.5 - 7.5 வரையிலான கார\ அமிலத்தன்மை ஏற்றது.தட்ப வெப்பம் குறைந்தது 25* செல்சியஸ் முதல்35* செல்சியஸ் இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடுய சுமார் 4 அங்குலம்நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால்ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக் காம்புகள் உருவாகும் போதே அதனை அகற்றிவிடவேண்டும். சுமார் 8 மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. அப்போதுதான் 'மென்தால்' சதவிகிதம்அதிகமாக்க காணப்படும்.

5)பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை.

6)பயன்கள் - கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். -----------------------------((மூலிகை தொடரும்)

வள்ளலார் பிரகாஷம் முகநூலில் எழுதியது--17-6-2015 அன்று.
கற்பூரவள்ளி :-
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி அமைகிறது.
இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
கற்புரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு 1 சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.
கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும். சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.