திங்கள், 30 ஏப்ரல், 2012

எள்ளுச்செடி




எள்ளுச்செடி

 மூலிகையின் பெயர் :- எள்ளுச்செடி.

தாவரப்பெயர் :- SESAMUM INDICUM.

.தாவரக்குடும்பம் :- PEDALIACEAE.

பயன்தரும் பாகங்கள் :- விதை, பூ, எண்ணெய் முதலியன.

வேதியல் சத்து :- PROTEINS – GLOBULIN.

வளரியல்பு :- எள்ளுச்செடி எல்லாவித மண்ணிலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடிய ஒரு செடி. இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா. பின் உலகெங்கிலும் பரவிற்று. ஆதிகாலத்திலிருந்து எண்ணெய் வித்துக்களில் எள்ளின் விதைதான் முதலில் தோன்றியதாகச் சொல்வர். 5000 ஆண்டுகளுக்கு முந்தியது. சைனா மற்றும் இந்தியா உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் அதிகம் செய்தது. சைனா, தென்கிழக்கு ஆசியா, அமரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன.

எள்ளுச்செடி சுமார் 50 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. ஆப்பிரக்காவில்  6 அடி உயரங்கூட வளரும். இதன் இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இது 4 – 14 செ.மீ. நீளம் இருக்கும். இது தும்ப இலையை ஒத்திருக்கும். ஆனால் கொஞ்சம் பெரிதாக இருக்கும். எள் செடி வெண்மையான பூக்களை விடும். ஆனால் ஆப்பிரிக்காவில் மஞ்சள், நீலம், ஊதா நிறங்களிலும் பூக்கள் விடும். இதன் பூக்கள் தன்மகரந்தச் சேர்க்கையாலும், மற்றும் தேனீக்கள், பறவைகளாலும் அயல் மகரந்தச் சேர்க்கையால் பூக்கள் காயாக வளரும். காய்கள் நீண்டிருக்கும். 2 – 8 செ.மீ.நீளம் இருக்கும்.  ஒரு விதையில் சுமார் 100 விதைகள் இருக்கும். ஒரு விதையின் எடை சுமார் 20 -40 மில்லிகிராம் எடை இருக்கும். கருப்பாக மென்மையாக இருக்கும், வெள்ளை நிறத்திலும் எள் இருக்கும். இதை வியாபார நோக்கில் பயிர் செய்பவர்கள் வளமான மண்ணை நன்கு உழுது, உரமிட்டு பாத்திகள் அமைத்து எள்ளை மணலுடன் கலந்து விதைப்பார்கள். அதன் பின் தண்ணீர் விட்டு சில நாட்களில் முழைக்க ஆரம்பிக்கும். பின் 10 நட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாச்சுவார்கள். பின் செடி ஒரு அடி வளர்வதற்குள் கழை எடுப்பார்கள். பின் செடி வளர்ந்து மூன்று அல்லது நான்கு மாதத்தில் காய்கள் முற்றி பழுக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் அவைகள் அருவடை செய்து கல் மண் இல்லாத களத்தில் கொண்டு போய் காய்கள் மேல் நோக்கி இருக்கும் படி வைத்து வெய்யிலில் உலர வைப்பார்கள். காய்கள் நன்கு காய்ந்து மேல்முனையிலிருந்து வெடிக்க ஆரம்பிக்கும். அப்போது செடிகளை தலைகீளாக உலர்த்தி லேசாகத் தட்டினால் எள் கழத்தில் விள ஆரம்பிக்கும். அவ்வாறு விழுந்ததைச் சேகரித்து சுத்தம் செய்து மூட்டையாகக் கட்டுவார்கள். ஆனால் இது மானாவாரியாகவும் விளையும். தமிழ் நாட்டில் நெல் அருவடைக்குப் பின் எள்ளை விதைத்து எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். எள் விதையை ஆட்டி எண்ணைய் எடுப்பார்கள் அது தான் நல்லெண்ணெய் என்பது.

மருத்துவப்பயன்கள் :- எள் செடியிலிருந்து உண்டாகும் விதையிலிருந்து எடுக்கும் எண்ணெய் நல்ல மருத்துவ குணமுடையது. அதன் செய்கை மலமிளக்கி, உள்ளழலாற்றி, சிறுநீர் பெருக்கி செயலாற்றும். இதன் மருத்துவ குணம் அதிகம் ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்துகள் செய்ய துணை மருந்தாகப் பயன்படுகிறது. இதில் மெகனீசியம்,  காப்பர், கால்சியம் மற்றும் வைட்டமின் B1, E, A போன்றவை உள்ளன. இது கப, பித்த, வாத, மூலநோய்கள், சிறுநீரகக் கோளாறுகள், அனிமியா, தோல் நோய்கள் குணப்படுத்த வல்லது.  அந்தக் காலத்தில் ஆண்கள் புதன் கிழமை மற்றும் சனிக்கிழை நாட்களில் இந்த எண்ணெய் தேய்த்து உலரவிட்டுப் பின் குழிப்பார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமை நாழில் இந்த எண்ணெயைத் தலை, உடம்புக்குத் தேய்த்துக் குழிப்பார்கள். சனி நீராடு என்ற பழமொழியும் உண்டு. இதன் நோக்கம் உடல் சூடு குறைக்க வேண்டியும், உடல் மென்பை பெற வேண்டியும் ஆகும். பாபிலோனியாவில் பெண்கள் இந்த எண்ணெயைத் தான் அழகு சாதனமாகவும் உடம்பை மசாஸ் செய்யவும் பயன் படுத்தியுள்ளார்கள். எள்ளில் இனிப்புச்சேர்த்து எள் உருண்டை செய்து ரோமானிய படைவீரர்கள் சக்திக்காகவும் பலத்திற்காகவும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த எண்ணெய்  இறைவனுக்கு விழக்கு ஏற்றப்பயன் படுத்தியுள்ளார்கள். இறந்தவர்களின் மத சடங்குகளில் எள்ளைப் பயன்படுத்தியுள்ளார்கள். ரொட்டிக்கு மேல் எள்ளை வைப்பார்கள். மேலும் மெழுகுபத்தி, சோப்பு, பெயிண்ட், செண்ட், பூச்சிக் கொல்லி மருந்து செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால் சமையலுக்கு இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.

கண் எரிச்சல் நீங்க-

கண்ணில் சதா எரிச்சல் இருந்து கொண்டே இருந்தால், தேவையான அளவு எள்ளுப்பூவைக் கொண்டு வந்து, அதை ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இளஞ்சூடாக இருக்கும் போதே, இரவு படுக்கும் முன், அதை இரு கண்களையும் மூடிக் கொண்டு சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்துக்கொண்டு கட்டிக் கொண்டு உரங்கி, காலையில் எழுந்த பின் கட்டை அவிழ்த்து பூக்களை எடுத்து விட்டுக் கண்களைக் கழுவிக் கொள்ளவேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குக் கட்டினால் போதும். கண் எரிச்சல் மாறிவிடும்.

கண் பார்வை தெளிவடைய-

நாற்பது எள்ளுப்பூ, மிளகு ஒன்பது, அரிசித் திப்பிலி இருபது, சம்பங்கி மொக்கு இருபத்தயிந்து இவைகளை வெய்யிலில் போட்டுச் சருகு போல காயவைத்து, உரலில் போட்டு இடித்து, துணியில் சலித்து ஒரு சுத்தமான சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, காலை, மாலை மிளகளவு தூளைக் கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும், கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும். தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

தலைமுடி பாதுகாப்பு-

ஒரு கைப்பிடியளவு எள்ளுச் செடியின் இலையை எடுத்து அளவான நீரில் 10-20 நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் இரக்கி ஆரவைத்து, இலைகளை எடுத்து விட்டு அந்த நீரை தலைக்கு இட்டுத் தேய்த்துக் குளித்தால் கூந்தல் உதிர்வதும், இளநரை ஏற்படுவதும் தவிர்க்கலாம்.

மருத்துவர் பாஸ்கர் ஜெயராமன் முகநூலில் எழுதியது-14-1-2016.
'கண்ணோய் வராதிருக்க ரகசிய வித்தை" !!!
எள்ளு செடியிலிருக்கும் இளம் பூவை வாயில்போட்டு பல்லில் படாமல் விழுங்கிவிடவேண்டும், ஒருபூவை விழுங்கினால் ஒருவருடத்திற்கு கண்ணோய் அணுகாது.
நன்றி, மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ளவும்:- ...
வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755, 8883883303.'


-------------------------------------------------------------------------(தொடரும்)


ஞாயிறு, 25 மார்ச், 2012

இலைக்கள்ளி.

இலைக்கள்ளி.
இலைக்கள்ளி.

மூலிகையின் பெயர் :- இலைக்கள்ளி.

தாவரப்பெயர் :- EUPHORBIBA LIGULARIA.

தாவரக்குடும்பம் :- EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் :- இலை, பால், வேர் மற்றும் பழம் முதலியன.

வளரியல்பு :- இலைக்கள்ளி கள்ளி வகைகளின் ஒரு வகை. இது எல்லாவித மண் வளங்களிலும் வளரும் தன்மையுடையது. இது வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. இது நேராக வளரக்கூடியது. சுமார் ஆறு அடி முதல் பன்னிரண்ட டி உயரம் வளரக் கூடியது. இது ஒரு சிறு மர வகை இனம்.  இதன் தண்டுகள் பச்சையாக இருக்கும். இலைகள் முயல் காது போல் பச்சையாக இருக்கும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை தடிப்பாக இருக்கும். பூ சிகப்பாக மலர்ந்து முக்கோண வடிவில் சிறிய காய்கள் விடும். ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். இதை உயிர் வேலிகள் அமைக்கப் பயன் படுத்துவார்கள். இதன் பால் பட்டால் புண்ணாகிவிடும். கால் நடைகள் இதன் இலையைத் தின்னாது. இந்தியாவிலும் மலேசியாவிலும் அதிகமாகக் காணப்படும். தென் இந்தியாவில் அதிகம் பயன் படுத்துகறார்கள். நேபால், சியாம், பர்மா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதை விதை மூலம் இன விருத்தி செய்வதை விட  கிளையை வெட்டி நடுவதன் மூலம் விரைவில் வளர்கிறது.

மருத்துவப் பயன்கள் :- இலைக்கள்ளிக்கு மற்ற கள்ளிக்குள்ள குணங்கள் யாவும் இதற்கும் உண்டு. இலைக்கள்ளி சிறந்த மருத்துவ குணமுடையது. இதனால் காது சம்பந்தமான நோய்கள் குணமாகும். பாம்புக் கடிக்குச் சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பு சக்தியாகவும் பயன் படுகிறது. மற்றும் ஆஸ்த்துமா, இருமல், காதுவலி, பூச்சிக் கொல்லி,  மூலம், மூட்டுவலி, காச்சல், இரத்தசோகை, குடல் புண், தோல் நோய், மலச்சிக்கல், மஞ்சக்காமாலை, வாதம், கட்டி, சிறுநீர் தடை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது.

இலைக்கள்ளி வேருடன் வெங்காயம் வைத்து அரைத்து அதை குழந்தைகளின் அடிவயிற்றில் பூசினால் குடல் புழு கழியும்.

இலைக்கள்ளி சாற்றுடன் இஞ்சி சார் கலந்து நன்றாகச் சூடு செய்து பதம் வந்த பின் இரக்கி ஆரவைத்து வாதம் உள்ள இடத்தில் பூசினால் குணமடையும்.

இலைக்கள்ளிப் பாலுடன் மஞ்சள் பொடி சேர்த்து மூலத்திற்குப் பயன் படுத்துவார்கள்.


நன்றி SUMAYHA :-  சொன்னவை--

1. இலைச் சாற்றை அல்லது பாலைப் பாலுண்ணிகளில் தடவி வர அவை உதிரும்.

2. இலையை வாட்டிச் சாறு பிழிந்து இளஞ்சூட்டில் காதில் விட காது வலி தீரும்.

3. இலைச்சாறு அல்லது பாலை வேப்பெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து மேற்ப்பூச்சாகத் தேய்த்துவர மூட்டுப் பிடிப்பு, வாதக் குடைச்சல் மேக வாய்வு ஆகியவை குணமாகும்.

4. இலையை வாட்டிப் பிழிந்து 7, 8 துளிச் சாறெடுத்துத் தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்குப் புகட்ட மலக்கட்டு நீங்கும்.

5. வாட்டிப் பிழிந்த சாற்றுடன் சமஅளவு தேன்கலந்து காய்ச்சி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டியை 30 மி. லி. நீரில் கலந்து மூன்று வேளையும் கொடுத்துவர ஈளை, இரைப்பிருமல் ஆகியவை தீரும்.

6. இலைச் சாற்றுடன் சிறிது உப்பிட்டுக் காய்ச்சி வைத்துக் கொண்டு 1/2 அல்லது 1 தேக்கரண்டி காலை மாலை கொடுத்துவரக் கக்குவான், சோகை, வயிற்றுப் புண், காமாலை, சூலை ஆகியவை தீரும்.

7. இலையை வதக்கி அடிவயிற்றில் கட்ட தேங்கிய சிறுநீர் வெளிப்படும்.

8. 10 கிராம் கடுகாய்த் தோலில் 80 கிராம் இலக்கள்ளிப் பாலைச் சேர்த்து நாற்பது நாட்கள் உலர்த்திப் பொடித்துக் கொண்டு 1/4 கிராம் வெந்நீரில் கலந்து உட்கொள்ள பேதியாகும். இதனால் ஈரல்கள் வீக்கம், பெருவயிறு, ஆறாத புண்கள், இரைப்பிருமல், கிரந்திப் புண்கள் ஆகியவை தீரும்.

9. இலைக்கள்ளி மரச் சக்கையை வதக்கி நகச் சுற்றுக்குக் கட்டிவர குணமாகும்.

பின் குறிப்பு- இந்த மருத்துவத்தைப் பயன் படுத்தும் முன்பு சித்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுப் பயன்படுத்தவும். தன்னிச்சையாக செயல் பட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.-குப்புசாமி.க.பொ.

-------------------------------------------------(தொடரும்)
 


வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

இரணகள்ளி.



இரணகள்ளி
 




இரணகள்ளி.

மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

தாவாரப்பெயர் –: EUPHORBIA.

தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் –:   இலை மட்டும்..

வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் –: இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணக்கள்ளி செடியில் பால் இராது.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில்  இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி,  காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.
 
இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.

கிட்னியல் கல் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.




--------------------------------------------------------------------(கள்ளி தொடரும்)