வியாழன், 23 ஜூன், 2011

இலுப்பை.



1.  மூலிகையின் பெயர் -: இலுப்பை.

2.  வேறு பெயர்கள் -: இருப்பை,குலிகம், மதூகம், வெண்ணை மரம், ஒமை முதலியன.

3.  தாவரப்பெயர் -: BASSIS LONGIFOLIA.


4.  தாவரக்குடும்பம் -: SAPOTACEAE.

5.  பயன் தரும் பாகங்கள் :- இலை, பூ, காய், பழம், விதை, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை முதலியன.

6.  .வளரியல்பு -: இலுப்பை மரவகையைச் சேர்ந்தமரம். இது வண்டல் மண், 
மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ. இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும். இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில் களில் வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் பூக்கள் 2.5 – 5 செ.மீ. நீளமுடையது. பூக்கள் இனிக்கும். இதன் விதைகள் 2.5 – 5 செ.மீ. நீளமிருக்கும். இந்த மரத்தை ஆங்கிலத்தில் HONEY TREE & BUTTER TREE என்று சொல்வார்கள். டிசம்ர் ஜனவரி மாதத்தில் இலைகள்உதிர்ந்து விடும். இலுப்பை ஜனவரி,பிப்ரவரி, மார்ச்சு மாத த்தில் துளிர் விட ஆரம்பிக்கும். பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பூக்கள் பூக்கும். ஏப்ரல் மே ஜூனில் பழங்கள் விடும்.  ஒரு மரத்திலிருந்து ஒரு வருடத்தில் 20 – 200 கிலோ விதை கிடைக்கும். ஒரு கிலோ விதையை செக்கில் போட்டு ஆட்டினால் 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். தேங்காய்எண்ணெக்கும், நெய்யுக்கு பதிலாக அந்தக் காலத்தில் இதன் எண்ணையைப் பயன் படுத்தினார்கள். இதன் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் அடர்த்தியாக இருக்கும். இதை நாற்று முறையில் தயார் செய்ய உரமிட்டு பாத்திகள் அமைத்து முற்றிய விதைகளை 1.5 – 2.5 செ.மீ.  ஆழத்தில் நடுவார்கள், ஈரம் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்க வேண்டும். பின் 15 நாட்களில் முளைக்கும். பின் பைகளில் போட்டு நிழலில் ஒரு வருடம் வளர்க்க வேண்டும். அதன் பின் வேண்டிய இடங்களில் நடலாம்.

7.  மருத்துவப் பயன்கள் :- இலுப்பைப் பூ நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் அதிகரிக்கும் பசியுண்டாக்கும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும் காமம் பெருக்கும் தும்மலுண்டாக்கும். விதை நோய் நீக்கி உடல் தேற்றும் நாடி நடையையும் உடல் வெப்பத்தையும் மிகுக்கும். இதன் பட்டை காயம், தோல் நோயைக் குணமாக்கும், பிண்ணாக்கு வாந்தியுண்டாக்கும். இது தலைவலியைப் போக்கும். நீரிழிவைக் குணமாக்கும்.

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்பார்கள்.

ஒரு தாலாட்டுப் பாட்டு
‘பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டியிலே
பாலகனே நீயுறங்கு…’
இது போல் செய்தால் தாயிக்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பது நம்பிக்கை.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

பூவை அரைத்து வீக்கங்களின் மீது பற்றிட வீக்கங்கள் குறையும்.

இலுப்பை பிண்ணாக்கைப் பொடித்து மூக்கிலிட தும்மல் ஏற்படும். தலைவலி குறையும்.

இலுப்பை இலையை மார்பகத்தில் வைத்துக் கட்டி வரத் தாய்ப் பால் சுரப்பு மிகும்.

இலுப்பைப் பூ 50 கிராம் அரை லிட்டர் நீரிலிட்டு 200 மில்லியாகக் காச்சி வடிகட்டிக் காலை மட்டும் ஓரிரு மாதங்கள் சாப்பிட்டு வர மதுமேகம், நீரிழிவு குணமாகும்.

10 கிராம் பூவை 200 மி.லி. பாலில் போட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர தாது பெருகும் காச்சல் தாகம் குறையும்.

மரப் பட்டை 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டுக் கால்லிட்டராக்க் காய்ச்சி காலை மாலை சாப்பிட்டு வர மது மேகம் தீரும். மேக வாயுவைக் கண்டிக்கும், நீரிழிவும் குணமாகும்.

பச்சைப் பட்டையுடன் சிறிது கசகசா சேர்த்து உடம்பில் தடவி வைத்திருந்து குழிக்கச் சொறி சிரங்குகள் ஆறும்.

இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்க இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவை தீரும்.

10 கிராம் பிண்ணாக்கை நீர் விட்டரைத்து50 மி.லி நீரில் கலக்குத் தற்கொல்க்காக நஞ்சு உண்டவர்களுக்குக் கொடுக்க வாந்தியாகி நச்சுப் பொருள் வெளியாகும்.

பிண்ணாக்கு, வேப்பம்பட்டை, பூவரசம் பட்டை சமனளவு கருக்கி அந்த எடைக்குக் கார்போக அரிசியும் மஞ்சளும் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பிக் குழந்தைகளுக்குக் காணும் மண்டைக் கரப்பான், சொறி, சிரங்கு ஆகியவற்றிக்குத் தடவ ஆறும்.

பிண்ணாக்கை அரைத்துக் குழப்பி அனலில் வைத்து கழியாகக் கிளறி இளஞ்சூட்டில் கட்டி வர விதை வீக்கம் 4,5 தடவைகளில் தீரும்.

கப்பல் கட்டவும், இரயில் தண்டவாள ரீப்பர் கட்டை செய்யவும், தேர் செய்யவும் மற்றும் விறகாவும் மரம் பயன் படுகிறது.

----------------------------------------------------------------------------------------------(தொடரும்)