சனி, 17 ஜூலை, 2010

சங்கிலை.





1. மூலிகையின் பெயர் :- சங்கிலை.

2. .தாவரப்பெயர் :- AZIMA TETRACANTHA.

3. தாவரக்குடும்பம் :- SALUADORACEAE.

4. பயன் தரும் பாகங்கள் :- இலை, வேர், பால், மற்றும் பழம் முதலியன.

5. வேறு பெயர்கள் :- முட்சங்கஞ்செடி, மற்றும் இசங்கு ஆங்கிலத்தில் "Needle bush."

6. வளரியல்பு :- சங்கிலை மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். தமிழகமெங்கும் புதர் காடுகளிலும், மலைகளிலும், ஆற்றங்கரை, கடற்கரைகளிலும் வளர்கிறது. இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா. பின் காங்கோ, சோமாலியாவில் பரவிற்று, பின் மடகாஸ்கர், இந்தியாவில் பரவிற்று. இது 8 மீட்டர் வரை வளர்ந்து படரக்கூடியது. இதன் இலைகள் பளபளப்பானவை. எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். கூரைமாயான நுனிகளையுடையது. இலைகோணங்களில் நீண்ட நான்கு முட்களையுடையது. முட்கள் 5 செ.மீ. நீளமுடையது. இதன் பழங்கள் மஞ்சளாக இருந்து பின் வெள்ளையாக மாரும். உண்ணக்கூடியது. செப்டம்பர் மார்ச்சு மாதங்களில் பூக்கும். விதையிலிருந்து எண்ணெய் எடுப்பர் அதற்கு 'Fatty acid' என்று ம். விதையில் 'Ricinoleic Acid 9.8 %' மற்றும் 'Cyclopropenooid fatty acid 9.6 %' உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் :- சங்கிலை சிறுநீர்ப் பெருக்கியாகவும், இலை உடல் பலம் பெருக்கியாகவும், வேர் கோழையகற்றும், இருமல் தணிக்கும், ஆஸ்த்துமா, சர்கரை வியாதி போக்கும் மருந்தாகவும் செயற்படும்.

சங்கிலை, தூதுவேளை இரண்டும் ஒரு பிடி அரைத்து நெல்லிக்காயளவு பசும் பாலில் கொள்ள கபரோகம் தீரும்.

சங்கிலை, வேப்பிலை, சமன் அரைத்து நெல்லிக்காயளவு காய்ச்சி ஆரிய நீருடன் பிரசவ நாளிலிருந்து கொடுத்து வரக் கற்பாயச அழுக்குகள் வெளியேறிச் சன்னி, இழுப்பு வராமல் தடுக்கும்.

சங்கிலை, வேர்பட்டை சமனளவு அரைத்து சுண்டைக்காயளவு வெந்தீரில் காலை, மாலை கொள்ள 20 நாள்களில் ஆரம்பப் பாரிச வாதம் வாயு, குடைச்சல் பக்கவாதம் தீரும்.

சங்கிலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடிக்க வாத வீக்கம், வலி, நீர் ஏற்றம் கீல் வாயு தீரும்.

சங்கம் வேர்பட்டைச்சாறு 20 மி.லி. 100 மி.லி. வெள்ளாட்டுப் பாலில் குடித்து வர சிறு நீர்த்தடை தீங்கும்.

வர அரிசி மாவுடன் ஒரு கட்டு சங்கிலை, நீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஆரிய பின் ஒரு டம்ளர் காலை மாலை குடிக்க இருமல் குணமாகும்.


-------------------------------------(தொடரும்)






திங்கள், 14 ஜூன், 2010

கறிவேம்பு.


1. மூலிகையின் பெயர் :- கறிவேம்பு.


2. தாவரப்பெயர் :- MURRAYA KOENIGH.

3. தாவரக்குடும்பம் :- RETACEAE.

4. வேறு பெயர்கள் :- கறியபிலை, கருவேப்பிலை ஆகியவை.

5. பயன்தரும் பாகங்கள் :- இலை ஈர்க்கு, பட்டை மற்றும் வேர் ஆகியன.

6. வளரியல்பு :- கறிவேம்பு வீட்டுக் கொல்லைகளிலும் தோட்டங்களிலும் சாதாரணமாக வளர்க்கப்படுகிறது. இதன் பூர்வீகம் இந்தியா. பின் இலங்கையில் பரவிற்று. இது ஒரு உஷ்ணப் பிரதேச மரமாகும். இது பெருஞ்செடி வகுப்பைச் சேர்ந்தது. இது 12 அடி மூதல் 18 அடி வரை வளரக் கூடியது. மரத்தின் சுற்றளவு சுமார் 40 செ.மீ. கொண்டது. ஒரு இணுக்கில் 11 முதல் 21 சிறு இலைகள் இருக்கும். நேர் அடுக்கில் அமைந்துள்ள இலைகளைக் கொண்டது. இலை மணமுடையது. வெள்ளை நிறப்பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். காய்கள் பச்சை நிறமாக உருண்டையாக இருக்கும். பழுத்த பின்னர் கருமை நிறமாக மாறும். விதைகள் விசத்தன்மையுடையது. 100 கிராம் இலையில் ஈரப்பதம் 66.3% கொழுப்பு 1.0% புரதசத்து 6.1% கார்போஹைட்ரேட்டுகள் 16.00% நார்சத்து 6.4% தாதுப்பொருள் 4.2% சி வைட்டமின் உட்பட அடங்கும். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

7. மருத்துவப்பயன்கள் :- கறிவேம்பு மருந்தாகப் பயன் படுத்துவதால் பசி மிகும், தாது பலம் பெருகும். வயிற்றில் வெப்பமுண்டாக்கி வாயுவைத் தொலைக்கும்.

கறிவேம்பு இலை சிறுதளவு, மிளகாய் இவற்றை நெய்யில் வதக்கிப் பழம்புளி, வறுத்த உப்பு சேர்த்து துவையலாக்கி முதல் கவளத்தில் பிசைந்து உண்ணக் குமட்டல், வாந்தி, அஜீரண பேதி, சீதபேதி, செரியா மாந்தம், வயிற்றுக் கோளாறு ஆகியவை தீரும்.

கறிவேம்பு இலைகளை நன்கு சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி எடுத்து, இதனுடன் தேவையன அளவு மிளகு, உப்பு, சீரகம், சுக்கு முதலியவை எடுத்து நன்கு பொடி செய்து சேர்த்து, சோற்றுடன் கலந்து, சிறிது நெய் சேர்த்து உண்டு வர மந்தம், பசியின்மை, மாந்த பேதி முதலியவை நீங்கி, உண்ட உணவை நன்கு சீரணிக்கவும் செய்யும்.

கறிவேம்பு இலையையும், மிளகையும் நெய்யில் வறுத்து வெந்நீர் விட்டு அரைத்து நன்கு கலக்கி, அந்நீரை சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்திற்கு வயதுக்கு தக்கவாறு கொடுத்து வர, மாந்தத்தை நீக்கி பசியைத் தூண்டும்.

கறிவேம்பு ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு 1 பிடி சுக்கு, மிளகு, சீரகம் வகைக்கு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வேளைக்கு 1 முடக்கு வீதம் தினம் 4 வேளைக் கொடுக்க சளி, இருமல், சுரம், வாதசுரம் தீரும்.

ஒரு பிடி இலையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து புன்னைக் காயளவு வெறு வயிற்றில் 45 நாட்கள் கொடுக்கப் பிட்ட மிகுதியால் வந்த பிதற்றல் பைத்தியம் தீரும்.

கறிவேப்பிலைப் பொடியுடன் சிறிது சர்கரைப் பொடி கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர நீர் கோவை சூதக வாய்வு தீரும்.

கருவேப்பிலை ஈர்க்கின் மேல் தோலை தாய்பால் விட்டு இடித்து சாறு பிழிந்து, அதனுடன் சிறுதளவு கிராம்பு, திப்பிலி, பொடிசெய்து சேர்த்து, வாந்தி இருக்கும் குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம். இது சீரண சக்தியைத் தூண்டும்.

கருவேப்பிலையின் வேர்பட்டையை ஊற வைத்த ஊறல் குடிநீரை அறுபது மி.லி. அளவு இரண்டு வேளை அருந்தி வந்தால் வாந்தி நிற்கும்.

அஜீரணக் கழிச்சல், சீதக்கழிச்சல் உடையவர்கள் கருவேப்பிலை இலையை ஒரு கைப்பிடி அளவு பச்சையா உண்டு வருவது நல்லது.

கருவேப்பிலையை முறைப்படி குடிநீராகக் காய்ச்சி அருந்தி வந்தால் இது வெப்பகற்றியாகச் செயல்பட்டு, சுரத்தைக் குணப்படுத்தும்.

கருவேப்பிலை இலைச் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் தேவையான அளவு சர்கரையும் கலந்து அருந்தி வர, அஜீரணத்தால் ஏற்படுகின்ற வாந்தி ஒக்காளம் முதலியவைகளுக்கு நல்ல குணம் தரும்.

கருவேப்பிலை இலைத்துளிரிலிருந்து எடுக்கப்பட்ட சாற்றுடன் தேன் கலந்து அருந்த பேதி, சீதபேதி, மூலம் இவைகளுக்கு நல்லது.

பரம்பரையின் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கு, உடல் பருமன் காரணமாக ஏற்பட்ட நீரழிவிற்கும், தினமும் பத்து கருவேப்பிலை இலைகளை காலையில் மட்டும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை இளநரையைத் தடுக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும். இதில் மயிர்கால்களை வலுவூட்டும் சத்து இருக்கிறது. மேலும் இந்த கருவேப்பிலையின் சாறு கண்களைப் பாதுகாத்து ஒளி ஊட்டி, கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

கருவேப்பிலை இலையை சமையலில் அதிகமாகச் சேர்ப்பது நம் நாட்டு வழக்கம். குழம்பு, கூட்டு, மிளகுநீர், கறிவகைகள், கருவேப்பிலைப் பொடி, நீர்மோர், துவையல் முதலியவைகளில் கருவேப்பிலை சேர்க்கப்படுகிறது.

உடுமலைப்பேட்டை அருகே சந்தோஸ் பாமில் உள்ள திரு.மதுராமகிருட்டினன் (கோவை மாவட்ட மூலிகை வளர்ப்போர் சங்க பொருளாளர்) தனது உரவினர் பெண்ணுக்கு உடம்பில் வெள்ளைத்தழும்புகள் இருப்பதற்கு தினமும் 10-12 கருவேப்பு இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு உடல் முழுதும் கோமையம் பூசி சிறிது நேரம் கழித்து குழித்து வருவதால் வெண் தழும்புகள் மறைய ஆரம்பிப்பதாகச் சொன்னார்.

------------------------------------------------(தொடரும்)

செவ்வாய், 25 மே, 2010

கட்டுக்கொடி.



1. மூலிகையின் பெயர் :- கட்டுக்கொடி

2. தாவரப்பெயர் :- COCUTUS HIRSUTUS.

3. தாவரக்குடும்பம் :- MENISPERMACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் வேர் ஆகியன.

5. வளரியல்பு :- கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. தமிழகத்தில் எல்லாப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். 45 அடி நீளம் வரை படரக்கூடியது. பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

6. மருத்துவப் பயன்கள் :- இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

----------------------------------(தொடரும்)