புதன், 15 ஆகஸ்ட், 2012

மாதுளம்






மாதுளை.

மூலிகையின்பெயர் :– மாதுளை.

தாவரப்பெயர் :– PUNICA GRANATUM.

தாவரக்குடும்பம் :- PUNIACACEAE.

பயன்தரும்பாகங்கள் :– பழம், பூ, பிஞ்சு, பட்டைவேர் :முதலியன..

வளரியல்பு :– மாதுளம்வளமான மண்ணில் நன்கு வளரும். இந்தியாவிலும் பல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது . இதன் தாயகம் இரான் இராக் பின் இந்தியா, பாக்கிஸ்தான்  பங்களாதேஸ்சைனாதெற்குஅரேபியா, ஆப்கானீஸ்தான், போன்ற நாடுகளுக்குப் பரவிற்று . இது ஒரு குறுமரம். இதுசுமார் 10 லிருந்து 25 அடி வரை வளரக்கூடியது . இதன் பூ சிகப்பாக இருக்கும் .மின்னும் சிவப்பாக மஞ்சள் கலந்த பச்சையாக பழங்கள் தோற்றம் தரும். பழத்தின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பு இருக்கும். பழத்துள் கெட்டியான விதைகள் சாறு நிறைந்திருக்கும் . இனிப்பு, புளிப்புதுவர்ப்பு மூன்று வகையா கசாறுகள் இருக்கும். இவற்றின் உலர்
த்தப்பட்ட விகைகளிலிருந்து நறுமணப் பொருள்கள் செய்கின்றனர் .விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது

மருத்துவப்பயன்கள் :- 
மாதுளம் பிஞ்சைக் கொண்டு வந்து புளித்த மோரில் அரைத்துக் கலக்கி செரியாகழிச்சல், சீதக்கழ்ச்சல், நீர்நீராய் கழிதலுக்கும் தர கழிச்சல்கள் நிற்கும்.


மாதுளம்பழத்திற்கு `மாதுளங்கம்என்ற பெயரும் உண்டு .மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. மாதுளையின் பழங்களில் இரும்புசர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.


மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது .உடலுக்குத்தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய்நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.


இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்திகிடைக்கிறது .பித்தத்தைப் போக்குகிறது, இருமலை நிறுத்துகிறது.


புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது .ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்டசிறுநீரை வெளியேற்றுகிறது .குடற்புண்களை (அல்சர்) குணமாக்குகிறது.


மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.


இதயநோய்கள், இதயபலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்கு மாதுளை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடைகூடும்.


தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.


ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம் பழம் சாப்பிடுவதால் மிகுந்தசக்தியை அடைய முடிகிறது.

மாதுளம் பழத்தோலுடன் வேலம்பட்டைத் தூளைக் கலந்து பல் துலக்கிவர பல்வலி, பல்லில் ரத்தம் கசிதல் நீங்கும்.

மாதுளம்பட்டை ச்சாறுவயிற்றிலுள்ள புழுக்களை வெளிப்படுத்தும்.

மூக்கிலிருந்து குருதி வடிவதை நிறுத்த மாதுளம்பூச் சாற்றுடன் அறுகம்புல் சாற்றையும் சம அளவுகலந்து தரலாம்.




மாதுளம்பழச் சாறு ஒருடம்ளர் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். நெஞ்செரிச்சல், மந்தம், அடிக்கடிமயக்கம் போன்றவை நீங்கும்.


மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சி யடையும். காய்ச்சல் தணியும். மாதுளம்பழச்சாற்றை ஒரு பாத்திரத்தில் விட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்து எடுத்துச் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும். பற்களும், எலும்புகளும் உறுதிப்படும் .மாதுளம் பழத்தின் அனைத்து நன்மையையும் பெறலாம்.


மாதுளம் பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்து விடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதயவலி நீங்கிவிடும்.


பெரிய இனிப்பு மாதுளம் பழத்தில் ஆறு எடுத்து இதன் முத்துக்களை ஒரு பாத்திரத்தில் போட்டு 200 கிராம் சீனியை இதில் கலந்து வைத்து அரை மணி நேரம் வரை இருந்தால், முத்துக்களின் சாறு நீர்த்துப் பிரியும். இந்த சாறு அரைலிட்டர் சேர்ந்தால், ஒருகிலோ சீனியை பாகுபதத்தில் காய்ச்சி, இதனுடன் மாதுளம் பழச்சாற்றைக் கலந்து வைத்து க்கொண்டு மீண்டும் பாகு பதம்வரை சூடு செய்து பத்திரப்படுத்திக் கொண்டுதினசரி 30 மில்லி அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த நோய்கள் நீங்கும். ஆயாசம் அகலும். வீரியவிருத்திக்கான டானிக் ஆகும் .நினைவாற்றல் பெருகும்.


மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக் குப்பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும் .புதிய ரத்தம்  உற்பத்தியாகிவிடும்.


மாதுளம்பூக்களைமருந்தாகப்பயன்படுத்தும்போது, இரத்தவாந்தி, இரத்தமூலம்வயிற்றுக்கடுப்பு, உடல்சூடுதணியும்.இரத்தம்சுத்தியடையும், இரத்தவிருத்திஉண்டாகும்.


மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மூக்கில் இரத்தம் வடியும் நோய் உள்ளவர்கள், மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன் றுதினங்களுக்குக் கொடுத்தால், இரத்தம் கொட்டுதல் நின்றுவிடும். பெண்களுக்கு ஏற்படும் உதிரப் போக்கிற்கு இதே மருந்தை மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


மாதுளம்பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும் போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சியதை, காலைநேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப்பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.


மாதுளம்பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்ப நோய்தீரும் .மாதுளம் பூக்கள் அறுகம்புல்மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டுவேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசுவெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை நீங்கும்.


அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் நீங்க மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து அதில் 200 கிராம் பசுநெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப் பாதிப்பு, படிப்படியாகக் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூல நோயும் நீங்கும்.


 நன்றி-டாக்டர் கி.கூத்தரசன். பி.எஸ்.எம். எஸ்.


---------------------------------------------------------------(தொடரும்)

புதன், 18 ஜூலை, 2012

செண்பகம்.


செண்பகம்.

மூலிகையின் பெயர் :– செண்பகம்.


செண்பகமரம்.


தாவரப்பெயர் :– MICHELIA CHAMPACA.

தாவரக்குடும்பம் :– MAGNOLIACEAE..

பயன்தரும் பாகங்கள் :– இலை, பூ, பட்டை மற்றும் வேர் முதலியன.

வளரியல்பு :– செண்பகமரம் மணல் பாங்கான இடத்தில் நன்கு வளரும். மற்ற வளமான இடங்களில் அழகுக்காகவும், பூங்காவிலும் தோட்டங்களிலும் வளர்ப்பார்கள். இந்த மரம் மேல் நோக்கி வளரும். கீழ்பாகம் அகலமாகவும் மேல் பாகம் சிறுத்தும் எப்போதும் பசுமையாக இருக்கும். நட்ட மூன்று ஆண்டுகளில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். பூக்கள் மஞ்சள் நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் இருவகையில் இருக்கும். பூக்கள் நறுமணம் உடையது. பூக்களிலிருந்து நறுமண எண்ணெய் தயார் செய்வார்கள். இந்த மரம் நூறு அடிக்கு மேல் வளரக்கூடியது. மரம் மென்மையாக இருக்கும். பிளைவுட் செய்யவும், பெட்டிகள் செய்யவும் பயன் படும். இதில் கைவினைப் பொருள்களும் செய்வார்கள். இந்த மரம் வரட்சியைத் தாங்காது. இதன் இலைகள் எப்போதும் பச்சையாக அடுக்கு வரிசையில் நீண்டு இருக்கும். செண்பகம் பிறப்பிடம் இந்தியா. பின் மற்ற நாடுகளான கலிப்போர்னியா, இந்தோனேசியா, மலேசியா, மாயின்மர், நேபாள், இலங்கை, தாய்லாண்ட், சைனா மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்குப் பரவிற்று.  இதன் இலைகளை பட்டுப்புழுக்கள் சாப்பிடும், இதன் காய்கள் கொத்தாக இருக்கும். பழுத்தால் சிவப்பாக இருக்கும் பறவைகள் இதனை விரும்பிச் சாப்பிடும். இதனை தலவிருட்சமாக கோயில்களில் வளர்த்து வருகிறார்கள். திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம், திருசிவாலம் போன்ற கோயில்களில் காணலாம். இது விதை மூலமும், ஒட்டுக்கட்டுதல் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் விதைகளை சேகரித்து இரண்டு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். வளர்ந்த செடிகளை வேண்டிய இடங்களில் முறைப்படி நடவேண்டும்.

மருத்துவப்பயன்கள் :– நோய்நீக்கி உடல் தேற்றுதல், முறைநோய் தீர்த்தல், உள்ளுர்ப்பு அலர்ச்சியைத் தணித்தல், வீக்கம் குறைத்தல், பசி, மாதவிடாய் ஆகியவற்றைத் தூண்டுதல், பூ சிறுநீர் பெருக்கி, வெள்ளை ஆண்மை குறைவு தீரும். பூவின் குடிநீரால் குன்மம் தீரும். பட்டை குடிநீர் முறை சுரத்தைப் போக்கும்.

செண்பக மரத்தின் இலையைக் கொண்டு வந்து இடித்து சாறு எடுத்துத் துணியில் வடிகட்டி, அதில் 3 தேக்கரண்டியளவும், இரண்டு தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொடுத்து வந்தால் எந்த வகையான வயிற்று வலியானாலும் அது குணமாகும்.

தேவையான அளவு செண்பக இலையைக் கொண்டுவந்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை  அடுப்பில் வைத்து, இரண்டு தேக்கரண்டியளவு நெய்யை அதில் விட்டு காய்ந்தவுடன் இலையைப் போட்டு, நன்றாக அதாவது இலை மிருதுவாகும்படி வதக்கி உச்சியில் கனமாக வைத்துக் கட்டி வந்தால் மண்டைக் குத்து குணமாகும். காலை மாலை புதிய இலையை வதக்கிக் கட்ட வேண்டும். மூன்று நாளில் குணம் தெரியும்.

ஒன்பது செண்பகப் பூக்களை எடுத்து, உள்ளே சுத்தம் பார்த்து, பொடியாக நறுக்கி ஒரு சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, வடிகட்டி, காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால், சொட்டு மூத்திரம், நீர்சுருக்கு இவைகள் மூன்றே நாட்களில் குணமாகிவிடும்.

ஒரு வாயகன்ற சீசாவில் 150 கிராம் தேங்காயெண்ணையை விட்டு, அந்த எண்ணெய் மேல் மட்டம் வரை செண்பகப் பூவைக் கிள்ளிப் போட்டு, தினசரி வெய்யிலில் வைத்து எடுத்து அந்த எண்ணெயை வீக்கம், வாதவலி உள்ள இடத்தில் சூடுபறக்கத் தேய்த்து வெந்நீரைத் தாங்கும் அளவில் விட்டு உருவி விடவேண்டும். இந்த விதமாக காலை, மாலை செய்து வந்தால் வாத வலி, வீக்கம் குணமாகும்.

அதிக சூட்டினாலும், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் நரம்புத் தளர்ச்சி உண்டாகும். இவர்கள் செண்பகப் பூவை கஷாயம் செய்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நரம்புத் தளர்வு நீங்கும்.

ஆண்மைக் குறைவு என்பது பல காரணங்களால் உண்டாகிறது. இந்தக் குறை உடையவர்கள் செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் ஆண்மைக் குறைவு நீங்கும்.

இரவு படுக்குமுன் ஒரு புதுசட்டியில் 30 செண்பகப்பூவை ஆய்ந்து போட்டு,  இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளரும் மாலையில் ஒரு டம்ளருமாக இறுத்து தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றிலுள்ள இரணம் கூட ஆறிவிடும்.

முறைக் காச்சலைக் குணப்படுத்த 10 கிராம் செண்பகமரத்துப் பட்டையை நைத்து ஒரு புது சட்டியல் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி, காலையில் அரை டம்ளரும், மாலையில் அரை டம்ளருமாக மூன்று நாட்கள் கொடுக்க முறைக்காச்சல் குணமாகும்.

செண்பக இலை மொக்கு.
செண்பக பூ.


                                            
----------------------------------------------------
-------------------------------------------------------------------------------(தொடரும்)
                        



சனி, 30 ஜூன், 2012

நறுவல்லி



நறுவல்லி மரம்.

நறுவல்லி

மூலிகையின் பெயர் :- நறுவல்லி.

தாவரப்பெயர் :- CORDIA DOCHOTOMA.

 .தாவரக்குடும்பம் :- BORAGINACEAE.

பயன்தரும் பாகங்கள் :- பழம், பட்டை, பிஞ்சு, இலை  மேலும் பருப்பு (விதை) முதலியனவாகும்.

வளரியல்பு :- நறுவல்லி ஒரு பூ பூக்கும் ஒரு நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இந்த மரத்தை நறுவிலி என்றும் அழைப்பர். அடிமரம் உயரம் அற்றதாக வளைந்து திருகுடையதாக கரணைகள் கொண்டிருக்கும். இது இந்தியா, இண்டோமலாயா, வட ஆஸ்திலேலியா,  மேற்கு மலநேசியா, சைனா, ஜப்பான், தாய்வான், பாக்கீஸ்தான், இலங்கை, கம்போடியா, லாஸ், பர்மா, தாய்லேண்ட், வியட்னாம், இந்தோனேசியா, மலேயா, நியுஜினியா, ஆஸ்திரேலியா,  ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், மேற்குத் தொடர்ச்சி மலை, மாய்மர் காடுகள் ஆகிய இடங்களில் காணப்படும். ஆங்கிலத்தில் பொதுவான பெயர்கள்- Glue berry, Pink pearl, Bird lime tree, Indian cherry, ஆகியவை. இது வளமான மண்ணில் நன்கு வளரும். சரள் மண்ணில் வளராது. மணற்பாங்கான இடத்தில் நன்கு வளரும். இது சுமார் 40 அடி முதல் 90 அடி உயரம் வரை வளரும். இந்த மரம் மென்னையாக இருக்கும். பட்டையை நீக்கி விட்டு இதில் ஈருகோலி மற்றும் பேன் சீப்புச் செய்வார்கள். மரத்தின் விட்டம்  25-50 செ.மீ. இருக்கும். மரம் சிறிது திருகிச் செல்லும். 1500 அடி கடல் மட்டத்திற்கு மேல் வளராது. மழையளவு 250-300 எம்.எம் வரை தேவைப்படும். ஓடை ஓரங்களில் நன்கு வளரும். இதன் இலைகள் ஓவல் வடிவத்தில் இருக்கும், முக்கோண வடிவிலான தனித்த மாற்றடுக்கில் அமைந்த இலைகள் காம்படி அகன்றும் முனை சிறுத்தும் காணப்படும். இலைகளை லார்வா சாப்பிடும். மாட்டுத் தீவனமாகப் பயன்படுத்துவர். பர்மாவில் இலைக்காக வளர்ப்பார்கள். கொனைகளின் இறுதியில் வெள்ளை நிறமுடைய சிறிய மலர்கள் கொத்தாகப் பூத்திருக்கம். 2 செ.மீ. குறுக்களவுள்ள முட்டை வடிவிலான சதைப்பற்றுள்ள காய்கள் கொத்தாகக் காய்த்துப் பழமாகும் போது கருப்பு நிறமுடையனவாக மாறும்.  இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் அகலம் 2-3 செ.மீ. நீளம் சுமார் 10 செ.மீ. இருக்கும். பூக்கள் சிறிதாகவும், வெண்மை நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். பூ 8 எம்.எம். நீளத்தில் இருக்கும். பூக்கள் தன் மகரந்தச் சேர்க்கையால் காய் உண்டாகும். இதன் பிஞ்சை ஊறுகாய் போடப் பயன்படுத்துவார்கள். இதன் பழங்கள் 10-13 எம். எம். நீளம் இருக்கும். பழங்கள் கத்தரிப்பூ நிறத்திலும், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்திலும் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் பழம் சாப்பிட வழுவழுப்பாக இருக்கும். விதை 6 எம்.எம். நீளம் கொண்டவை. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பறவைகளால் விதைகள் பரவும்..

மருத்துவப்பயன்கள் :– நறுவல்லியின் தன்மை சூடும், குழுமையும் ஆகும். இதன் முக்கிய பயன் சுத்த இரத்தம் உண்டாக்கும். வண்டல் சம்பந்தமான நோய்களைக் கண்டிக்கும். கபத்தை அறுக்கும். தாகம், பித்தம் நீர்சுருக்கு, சூடு சம்பந்தமான இருமல் இவைகளை நீக்கும். குடலுக்குப் பலம் கொடுக்கும். குரல் கம்மல், வயிற்றுக் கடுப்பு இவைகளை நீக்கும். மருந்து களினால் உணைடாகும் வேகத்தைத் தணிக்கும். பேரீச்சம் பழத்துடன் அரைத்துப் பூச பருக்களை உடைக்கும். நறுவல்லியின் செய்கைகள் யாதெனில், கார்ப்பு, துவர்ப்பு, இனிப்புச்சுவைகள், குழுமை, செரிமானத்தை வளர்த்தல் போன்றவையாகும். நறுவல்லியின் பட்டையின் பொடியும், கொட்டையின் பொடியும் கிருமி நோய், கொப்பளம், பித்தம், அக்கி, நஞ்சு, குடல் புண்கள், மார்பக மற்றும் நிறுநீர் குழாய் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும்.  இதன் பட்டை குடற்புழுக்களைக் கொன்று வெளியேற்றுவதோடு மலத்தைக் கட்டவும் செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் இது இரத்திலான அசுத்தத்தை நீக்குகின்றது. அஜீரணத்தைப் போக்குவதோடு காச்சலையும் தணிக்கின்றது. சீதபேதி, உடல் எரிச்சல், தொழுநோய், சொறிசிரங்கு ஆகியவற்றையும் குணமாக்கும். இதன் இலை காம உணர்வை மேலோங்கச் செய்யும் இயல்புடையது. வெட்டை நோய், கண்ணிலான வலி ஆகியவற்றைக் குணமாக்கும்.  இதன் பழம் உடலுக்குக் குளிர்ச்சி தருவதோடு பேதி மருந்தாகப் பயன்பட்டுக் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறவும் உதவுகின்றது.  காம உணர்வைத் தூண்டுவதோடு, சிறுநீர் எளிதில் பிரியவும் உதவும். தொழுநோய், தோல்வியாதிகள், உடல் எரிச்சல், மூச்சிறைப்பு, மூட்டுவலி, வறட்டு இருமல்,  சிறுநீரகக் கோளாறுகள், தொண்டை வறட்ச்சி, மண்ணீரல் வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தாகவும் இப்பழம் பயன்படுகிறது. 

‘நறுவிலியி லைக்கு இரைப்பு நாசம் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும் – நறுவிலியின்
தன்பழம் இரத்தபிஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
 

நறுவல்லி பழங்கள்.



--------------------------------------------(தொடரும்)
 
முத்துக்குமார் அம்பாசமுத்திரம் அவர்கள் வெளியிட்டதின் நகல். மக்கள் பயன்பெற. மிக்க நன்றி.
 
முன்னோர் வழங்கிய மூலிகை: நறுவல்லி
கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதுங் காட்டுவதும்
காட்டி மறைப்பதுவுங் கண்ணுதலோன்
முன்னமைத்த ஏட்டினி படியென் றிரு.’’
நாம் அன்றாடம் பார்க்கும் பல தாவரங்கள் நம்மை வாழவைக்கும் மூலிகையாக இருந்து வருகிறது. உணவே மருந்து... மருந்தே உணவு... என்பதே நமது மருத்துவம். எந்த நோயாக இருந்தாலும் அதை உணவை கொண்டே தீர்க்கும் வகையில் நமது மருத்துவ முறையை முன்னோர்கள் அமைத்தார்கள். இந்தியா, இலங்கை, வடஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தானாக வளரும் மரம் நறுவல்லி. நமது நாட்டில் நறுவல்லி, நரிவிழி என்று அழைக்கப்படுகிறது.
எப்பொழுதும் பசுமையாக இருக்கும் மரம். இதன் இலைகள் பளபளப்பான நீள்வட்ட அமைப்பை கொண்டது. பழங்கள் ஆரஞ்சு நிறத்தில் வழுவழுப்பாக இருக்கும். இலை, பட்டை, பழம், விதை மருத்துவ பயன்கள் உடையவை. பழங்காலத்தில் சீப்புகள் இந்த மரத்தில்தான் செய்வார்கள். இதன் பழத்தை சுவைக்கும்போது பிசுபிசுப்பு சுவையுடன் இருப்பதால் இதை பாமரமக்கள் மூக்குசளி பழம் என்று அழைப்பார்கள். கரும வினை எனப்படும் நோய்களில் ஒன்றுதான் மூல நோய். இவர்கள் 10 கிராம் கொழுந்து இலைகளை மென்மையாக அரைத்து சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, இரவு உணவுக்கு பின் சாப்பிட்டுவர எந்த வகை மூலமானாலும் தீரும்.
இளம்பெண்கள் மற்றும் ஆண்களுக்கு பருவகாலத்தில் முகத்தில் தோன்றும் பருக்கள் அவர்களின் அழகை கெடுப்பதுடன் வடுக்களையும் ஏற்படத்தி விடும். இவர்கள் இலைசாற்றை முகப் பருவின் மேல் பூசினால் பருக்கட்டிகள் உடைந்து வடுக்கள் இல்லாமல் ஆறும். சிறுவர்கள், பெரியவர்கள் நடந்தால், ஓடினால் மூச்சிரைப்பு ஏற்படும் இவர்கள் இலைகளை நீரிலிட்டு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை இருவேளை 100 மிலியாக காலை மாலை இரண்டு வேளை குடித்து வர மூச்சிரைப்பு தீரும்.
நெஞ்சில் ஏற்படும் சளி, நீர்சுருக்கு எனப்படும் சிறுநீர் பிரச்சனை, குடல் சார்ந்த நோய்கள், நீண்ட நாட் களாக உள்ள மலச்சிக்கல் ஆகியவை இந்த பழம் சாப்பிடுவதால் தீரும். ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. நீண்ட கால நோய்களுக்கு ஆங்கில மருந்தை பயன் படுத்தினால் தீரும் என்று அதிகளவில் பயன்படுத்துவார்கள். ஆனால் அதுவே பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய நோயை உண்டாக்கும். முக்கியமாக உடலில் தேவையற்ற வெப்பத்தை அதிகரித்து நோயை உண்டாக்கும் இதற்கு நறுவல்லி பழத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட வேகத்தை தணிக்கும்.
நறுவல்லி பட்டை சாற்றில் 50 மிலி அளவு எடுத்து அதே அளவு தேங்காய்பால் கலந்து காலை மாலை குடித்து வந்தால் கடும் வயிற்று வலி தீரும்.
இதன் விதையை பொடி செய்து அதனுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தோல் நோய்களுக்கு தடவி வர பலன் கிடைக்கும்.சில ஆண்களுக்கு 40 வயதிற்கு மேல் தளர்வு ஏற்படும். மேலும் அதிகப்படியான சூட்டினால் கோழை உருவாகி மூச்சியிரைப்பு உண்டாகும். இவர்கள் பழத்தை ஊறுகாய் செய்து சாப்பிட இருமல் தீரும். கோழையை அகற்றி ஆண்மையை பெருக்கும்.
சிலர் எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் அருகில் நெருங்கி பேசினால் வாய் நாற்றம் தாங்காது. இவர்கள் வேர்பட்டையை சிதைத்து தண்ணீரில் கொதிக்கவைத்து வடிகட்டி அதில் வாய் கொப்பளித்தால் வாய்துர்நாற்றம், தொழுநோய், தோல்வியாதிகள், உடல்எரிச்சல், மூச்சிரைப்பு, மூட்டுவலி, மண்ணீரல் வீக்கம், வாய்ப்புண், பல்லாட்டம் நீங்கும். இப்பழம் குளுமை குணம் கொண்டதால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதை மருந்தாக எடுத்து கொள்ளலாம். பழத்தை அளவோடு யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதைத்தான்
நறுவிலி யிலைக்கிரைப்பு நாசமவ் வேர்க்கு
மறுவில் எலும்புருக்கி மாறும்- நறுவலியின்
தன்பழமி ரத்தபித்தஞ் சார்மேக முந்தீர்க்கும்
இன்புறயா வர்க்குமிசை’’
என்கின்றது அகத்தியர் குணவாகடம். இனி நரிவல்லி பழத்தை பார்த்தால் மூக்குசளி பழம் என முகத்தை சுளிக்காமல், முன்னோர்கள் வழங்கிய அமுத பழம் என்பதை உணர்ந்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி உடல் நலத்தை காப்போம்.
 
நன்றியுடன் தொடரும். 26-12-2014.