வியாழன், 25 செப்டம்பர், 2008

மருந்துக்கூர்க்கன்.


மருந்துக்கூர்க்கன்.


1) மூலிகையின் பெயர் -: மருந்துக்கூர்க்கன்.

2) தாவரப்பெயர் -: COLEUA FORSKOHLII

3) தாவரக்குடும்பம் -: LAMIACEAE.

4) வேறு பெயர்கள் -: கூர்க்கன் கிழங்கு, கோலியஸ்.

5) இரகங்கள் -: மங்கானிபெரு (மேமுல்), கார்மாய் மங்கானிபெரு.

7) பயன்தரும் பாகங்கள் -: வேர்கிழங்குகள் மட்டும்.

8) பயிரிடும் முறை -: மருந்துக்கூர்க்கன் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதை சம வெளிகள், மலைச்சரிவு, மற்றும் வறட்சியான பகுதிகளில் பயிரிடலாம். செம்மண், சாரை மண் ஏற்றது. களிமண் கூடாது. மண் கார அமில நிலை பி.எச்.6.0 -7.00 க்குள் இருக்க வேண்டும். மருந்துக்கூர்க்கன் ஓமவள்ளிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த மூலிகைச்செடி நெருக்கமான கிளைகளில் தடினமான இலைகளிடன் சுமார் 2 அடி உயரம் வரை வளர்கிறது. இச்செடியானது நுனிக் கொழுந்தைக் கிள்ளி நட்டு வளர்க்கப்படுவதால் ஆணிவேர் உண்டாவதில்லை. அடிக்கணுவிலிருந்து பக்க வேர்களே உண்டாகின்றன. பழுப்பு நிற வேர்களிலிருந்து ஒல்லியான கேரட் வடிவத்தில் 1 அடி நீளம் வரை கிழங்குகள் உருவாகின்றன. ஒரு செடியிலிருந்து அரைக்கிலோ முதல் முக்கால் கிலோ வரை பச்சைக் கிழங்குகள் கிடைக்கின்றன. பொலபொலப்பான பூமியில் 1 கிலோவும் கிடைக்கின்றது.

நிலத்தைபுழுதிபட உழவு செய்யவும். நடவுக்கு ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே ஏக்கருக்கு 7 டன் தொழு எருவை சிதறி விட்டு உழவு செய்யவும். ஈரமான மண்ணில் நுண்ணுயிர்கள் எருவைச் ஞாப்பிட்டுப்பல்கிப் பெருகும். அந்நிலத்தில் பயிர் நட்டவுடன் துளிர்க்கும். துரிதமாய் வளரும்.

வளமான நிலங்களிக்குப் பார் 2 அடி - செடிக்குச் செடி 1.5 அடி=ஏக்கருக்கு 14500 கன்றுகள், வளம் குறைந்த நிலத்தில் பாருக்குப் பார் 2 செடிக்குச்செடி 1.25 = ஏக்கருக்கு 17,000 கன்றுகள், சரளைமண்ணுக்கு பாருக்குப்பார் 1.75 அடி – செடிக்குச்செடி1.25 அடி= ஏக்கரில் 20,000 கன்றுகள்.

மருந்துக்கூர்க்கனின் நுனித் தண்டுகளில் சுமார் 10 செ.மீ. நீளமும் 3-4கணுக்கள் இருக்க வேண்டும். நுனித் தண்டுகளை புது பிளேடால் வெட்டி சேகரிக்க வேண்டும். முற்றிய கொழுந்தை விட இழந்துளிர் சிறந்தது.முற்றிய செடி வேர் பிடித்து வளர்ந்து உருவத்துக்கு வர 40 நாட்கள் ஆகும். இளஞ்செடியோ 25 நாட்களிலேயே வந்து விடும். நடும் போதுஒரு தடவை பாசனமும் நட்ட 3 ம் நாள் உயிர் தண்ணீர் பாச்சவேண்டும். 40 நாட்கள் வரை வாரம் ஒரு தடவை பாசனம், பின் 10 நாட்களுக்கு ஒரு தடவையும், அறுவடைக்கு 10 நாட்கள் இருக்கும் போதே பாசனத்தை நிறுத்தவும். மொத்த நாட்கள் 180.

நடவு நட்ட 15 - 20 நாட்களுக்குள் முதல் களை சுரண்டி விட வேண்டும். இரண்டாம் களை கதிர் அரிவாள் கொண்டு தரைமட்டத்தில் அறுத்து எடுப்பதே சரியானது. இப்போதுதான் மண் அணைக்க வேண்டும். 50 நாடகள் ஆகிவிட்டால் மண் அணைக்க வேண்டாம். அரசாயன உரம், நுண்ணுயிர் உரங்களை 50 நாட்களுக்கு மேல் கொடுக்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பிற்கு நூற்புழுக்களின் தாக்குதலுக்குகார்போபூரான் தூவ வேண்டும். வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 250 தொழு உரத்துடன் 5 கிலோ ட்ரைகோடெர்மாவிரிடீ உயிர் பூசானக்கொல்லி மருந்தினை செடிகளைஞச் சுற்றி ஊற்றிக் கட்டுப்படுத்தலாம். பாக்டீரியாவாடல் நோய் தென்பட்டால் சூடோமோனாஸ் புளோரஸன்ஸ் என்ற பாக்டீரியாவினை தொழு உரத்துடன் இடுவதால் யோயைக் கட்டுப்படுத்தலாம்.

மருந்துக்கூர்க்கனின் வளர்ச்சிப் பருவங்கள் – 1 - 20 நாட்கள் வேரில்லாத நுனிக் கொழுந்திலிருந்து வேர்கள் முளைத்து வெளிவருகின்றன. ஆரம்பக்கட்ட வேர்கள் உருவாகி செடியானது மண்ணில் நிலை நிறுத்தப்படுகிறது. 21 - 40 நாடகள் வேர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செடிகளில் தழை வளர்ச்சி குறைவாகவே காணப்படும். 41 - 60 செடிகளில் தீவிர வளர்ச்சிப் பருவம் ஆரம்பிக்கிறது. கிளைகளும், துளிலர்களும் உருவாகி பயிரானது பந்து கட்ட ஆரம்பிக்கிறது. 61 - 90 தழை வளர்ச்சியும் தீவிரம், வேர் வளர்ச்சியும் தீவிரம். பயிர் நிலத்தை அடைத்துக் கொள்கிறது. 91 - 120 கிழங்குகள் உருவாகின்ற தருணம். இத்தோடு தழைவளர்ச்சி நின்று விடும். 121 - 150 கிழங்குகள் கேரட்டைப் போல் நீண்டு பருக்கின்றன. 151 - 180 நாட்கள் கிழங்குகளுக்குள் மாவு சத்தும், மருந்துச் சத்திம் சேமிக்கப்படும் தருணம். அதாவது கிழங்குகள் முற்றி எடை கூடும் காலம்.

இது இந்தியா, நேபாளம்,இலங்கை, ஆப்பரிக்கா, பர்மா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் வணிகரீதியாகப் பயிரிடப்படுகிறது. இதில் போர்ஸ்கோலின் ‘Forskoslin’ எனும் மூலப்பொருள் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு(சேலம்) குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. பயிரிட ஏற்ற பருவம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள். வேர் கிழங்குகளை 180 நாட்கள் முடிந்தவுடன் சேதமின்றி எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வெய்யிலில் சீராக 10 நாட்கள் உலர வைக்க வேண்டும். கிழங்கில் 8 சதம் ஈரப்பதம் இருக்கும் போது பக்குவமாக இருக்கும்.ஹெக்டருக்கு 15 - 20 டன் பச்சைக் கிழங்குகள் கிடைக்கும். அல்லது 2000-2200 கிலோ உலர்ந்த கிழங்குகள் கிடைக்கும்.ஹெக்டருக்கு 20,000 ரூபாய் செலவு செய்தால் ரூ.60,000 வரவு வர வாய்ப்புள்ளது. ஒப்பந்த சாகுபடி செய்ய விரும்புவோர் எம்.ஜி.பி.மார்கெட்டிங் சென்டர்ஸ் 469, மகாலட்சுமி காம்ளெக்ஸ், அண்ணாபுரம், ஐந்து ரோடு, சேலம்-4. தொலைபேசி - 0427-2447143, செல் - 98427 17201. அவர்களிடம் தொடர்பு கொண்டு பயன் பெறவும்.

8) மருத்துவப் பயன்கள் -: மருந்துக்கூர்க்கன் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் வேதியப் பொருளான போர்ஸ்கோலின் இரத்த அழுத்தத்தை சீர் செய்து இதயப் பழுவைக் குறைக்கிறது. இது ஆஸ்த்மா, புற்று நோய், கிளாக்கோமா கண் நோயைக் குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது.


-------------------------------------------(மூலிகை தொடரும்)

ஞாயிறு, 14 செப்டம்பர், 2008

சர்ப்பகந்தி.



சர்ப்பகந்தி.

1) மூலிகையின் பெயர் -: சர்ப்பகந்தி.

2) தாவரப்பெயர் -: RAUVOLFIA SERPENTINA.

3) தாவரக் குடும்பம் -:APOCYNACEAE.

4) வேறு பெயர்கள் -: சிவன் அமல் பொடி, பாம்புக்களா.

5) வகைகள் -: ராவுன்பியா செர்பென்டினா. ராவுன்பாயா டெட்ரா பில்லர். ஆர்.எஸ் 1.


6) பயன் தரும் பாகங்கள் -: வேர்கள்.

7) வளரியல்பு -: சர்ப்பகந்திக்குச் செம்மண் மற்றும் பொறைமண், அமிலத்தன்மை அதிகம் உள்ள மண் ஏற்றது. காரத்தன்மை அதிகமுள்ள (PH 8) மண்ணில் வளராது. இதற்கு 20 டிகிரி செல்சியஸ் முதல் 38 டிகிரி செலிசியஸ் வெப்ப நிலையும் ஆண்டுக்கு 75 -100 செ.மீ. மழையளவு ஏற்றது. சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கும். அதிக குளிரும், அதிக மழையும் சர்ப்பகந்திக்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிழையாகப்பிறியும். மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும். பின் அதை மருந்துக்காகத் தோண்டி எடுப்பார்கள். சுமார் 400 வருடங்களாக இதன் வேரை மூலிகையாகப் பயன் படுத்தி வருகிறார்கள். இதன் பிறப்பிடம் துணை ஆசியாக் கண்டம். பின் இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா, மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் பரவி வளர்க்கப்பட்டது. இதன் இனப்பெருக்கம் விதைக் குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் செய்யப்படுகிறது. வணிக ரீதியாக விதை மூலம் நாற்றுக்கள் உற்பத்தி செய்து நடுவது நல்லது. ஒரு எக்டருக்கு 8 -10 கிலோ புதிய விதைகள் தேவை. விதைத்த ஆறு வாரத்தில் நாற்றுகள் தயாராகி வடும். 2 அடி பாரில் ஒரு அடி இடைவெளியில் நடவேண்டும். வேர்கள் 15 செ.மீ. பருமனாக இருப்பதனுடன் வேர்களின் வெளித்தோல் பழுப்பு நிறத்திலும், உட்புறம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஏராளமான இளஞ்சிவப்பு நிறமுடைய பூங்கொத்துக்களுடன் காய்கள் ஊதா கலந்த கறுப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் 2 - 3 விதைகள் வரை இருக்கும்.


8) மருத்துவப்பயன்கள் -: சர்ப்பகந்தியினால் இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு தீர்க்க உதவுகிறது. உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன் படுகின்றன. இதன் மருந்தால் பலநரம்பு வியாதிகள், புற்று நோய்,-(Vinblastine) மலேரியா,-(Quinens) மனஅழுத்தம் (ஐப்பர்டென்சன்)-(Raubasine) இரத்த ஓட்டம் சீர்படுத்த,(Vincanpes) மாரடைப்பு (Ajmaline) இவைகளைக் குணப் படுத்தும்.

----------------------------(மூலிகை தொடரும்.)

வியாழன், 11 செப்டம்பர், 2008

எட்டி மரம்.



எட்டி மரம்.

1) மூலிகையின் பெயர் -: எட்டி மரம்.

2) தாவரப்பெயர் -: STRYCHNOS NUX VOMICA.

3) தாவரக்குடும்பம் -: LOGANIACEAE.

4) வேறு பெயர்கள் -: நக்ஸ்வாமிகா. மற்றும் காஞ்சிகை.

5) வளரியல்பு -: எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.


6) மருத்துவப் பயன்கள் -: இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்
குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான நச்சு  தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இதன் பொடி இரு கிராம் அளவு உப்புடனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்ததோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றிலைச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு நஞ்சு  முறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லா நச்சுக்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’

எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:

ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உண்டாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

-------------------------------------------(மூலிகை தொடரும்)

வியாழன், 4 செப்டம்பர், 2008

அஸ்வகந்தா.




அஸ்வகந்தா.

1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.